கலப்பு திருமணம் செய்த கல்லூரி மாணவி கடத்தல்: தந்தை மீது காதல் கணவர் புகார்!!
கிணத்துக்கடவு தாமரை குளம் மேட்டுக்கடையை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 47). இவரது மகள் பிரித்தி என்ற காவ்யா (19).
காவ்யா மலுமிச்சம்பட்டியில் உள்ள கல்லூரியில் பி.காம் சி.ஏ., படித்து வருகிறார். அதே கல்லூரியின் பஸ் டிரைவாக உள்ளவர் பலே பாண்டியன் (வயது 23). இவர் போத்தனூர் அம்பேத்கார் நகர் 3–வது வீதி வசித்து வருகிறார். காவ்யாவுக்கும் பலே பாண்டியனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அதுவே காதலாக மாறியது.
காதல் ஜோடி தனிமையில் சந்தித்தும், போனில் நீண்ட நேரம் உரையாடியும் தங்கள் காதலை வளத்துக் கொண்டனர். காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததும் காவ்யா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திடீரென காவ்யா மாயமானார்.
இதைத்தொடர்ந்து காவ்யாவின் தந்தை தேவராஜ் கிணத்துக்கடவு போலீசில் தனது மகள் காவ்யாவை காணவில்லை என்று புகார் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்–இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காவ்யாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் காவ்யா தனது காதலன் பலே பாண்டியனுடன் செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். ‘‘நாங்கள் கோவையில் உள்ள கலப்பு திருமண சங்கத்தில் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
கிணத்துக்கடவு போலீசில் காவ்யாவின் தந்தை மகளை காணவில்லை என்று புகார் அளித்துள்ளதால் அங்கு சென்று பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறி செட்டிபாளையம் போலீசார் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்துக்கு வந்த புதுமண தம்பதி, ‘‘நாங்கள் ஒருவரை ஒருவர் காதலித்து முறைப்படி திருமணம் செய்து கொண்டோம். நான் கடத்தப்பட்டதாக எனது தந்தை அளித்துள்ள புகார் தவறு’’ என்று காவ்யா கூறினார்.
இதனையடுத்து போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பலேபாண்டியன் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் காவ்யாவின் பெற்றோர் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் பிரச்சினைக்கு பின்னர் இன்ஸ்பெக்டர் முருகேசன் காவ்யாவின் தந்தையிடம், ‘‘காவ்யா மேஜரான பெண். அவர் திருமணம் செய்து கொண்டது சட்டப்படி செல்லும். அவர்களை பிரிக்க முடியது. அதுதவிர அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும் எங்கள் கடமை’’ என்று கூறினார்.
இதனையடுத்து தேவராஜ், ‘‘கலப்பு திருமணம் செய்து கொண்ட காவ்யா எனது மகள் இல்லை என்று அவரே எழுதி தரவேண்டும்’’ என்று கோரினார். அதன்படி தந்தை கேட்டதை போல் காவ்யா எழுதி கொடுத்தார். இதைத்தொடர்ந்து சுமுகமாக பிரச்சினை முடிந்தது.
தேவராஜ் மற்றும் அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறினர். பலே பாண்டியன் குடும்பத்தினர் புதுமணத்தம்பதியை வீட்டுக்கு அழைத்துச்செல்ல போலீஸ் நிலையத்தில் இருந்து கிளம்பி பொள்ளாச்சி ரோட்டில் நின்றனர்.
அப்போது வேகமாக ஒரு கார் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் காரில் இருந்தவர்கள் காவ்யாவை குண்டுக்கட்டாக காரில் தூக்கிப்போட்டு மின்னல் வேகத்தில் சென்றனர். பலே பாண்டியன் மற்றும் அவரது தரப்பினர் அதிர்ச்சியில் உறைந்தனர். காவ்யா தரப்பினர்தான் கடத்திச்சென்றிருக்க வேண்டும் என்று அவர்கள் உணர்ந்தனர். கவுரவ கொலைகள் அதிகம் நடப்பதால் அவர்கள் அச்சம் அடைந்தனர்.
இது குறித்து பலே பாண்டியன் அதே போலீஸ் நிலையத்துக்கு சென்றார். தனது மனைவியை தேவராஜ் மற்றும் அவரது தம்பி தண்டபாணி ஆகியோர் கடத்திச் சென்றுவிட்டனர். அவர்களிடம் இருந்து தனது மனைவியை மீட்டுத்தரும்படி புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் காவ்யாவை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Average Rating