விஜயகாந்த் மகன் அதிரடி பேட்டி!!
‘‘எனக்கு சினேகிதிகள் கிடையாது. நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள்’’ என்று நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கூறினார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், ‘சகாப்தம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடிகளாக சுப்ரா அய்யப்பா, மேகாசிங் ஆகிய 2 புதுமுகங்கள் நடித்து இருக்கிறார்கள். சுரேந்திரன் டைரக்டு செய்திருக்கிறார். எல்.கே.சுதீஷ் தயாரித்து இருக்கிறார்.
‘சகாப்தம்’ படம், கோடை விடுமுறை வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது. மொத்தம் 500 தியேட்டர்களில் படத்தை திரையிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இளம் கதாநாயகன் சண்முக பாண்டியன், ‘தினத்தந்தி’ நிருபருக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
கேள்வி:- சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்போது, எப்படி ஏற்பட்டது?
பதில்:- எங்க அப்பா (விஜயகாந்த்) அதிகாலையிலேயே விழிக்கும் பழக்கம் உள்ளவர். தினமும் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து, ‘மேக்கப்’ போட்டுக் கொண்டிருப்பார். நான் கைக்குழந்தையாக இருந்தபோது, தினமும் காலையில் அப்பாவின் ‘மேக்கப்’ போட்ட முகத்தில்தான் கண் விழிப்பேன் என்று அம்மா சொல்வார்கள். அதனால், குழந்தைப் பருவத்திலேயே சினிமா ஆர்வம் எனக்குள் ஏற்பட்டிருக்கலாம். நானும், அண்ணனும் சிறுவர்களாக இருந்தபோது, எங்களுக்கு நடிக்கும் வாய்ப்புகள் நிறைய வந்தன. அப்பாவுக்கு அதில் உடன்பாடு இல்லை.
நாங்கள் இருவரும் படித்து முடித்து பட்டம் வாங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதன்பிறகு கல்லூரியில் நான், ‘விசுவல் கம்யூனிகேஷன்’ படித்துக் கொண்டிருந்தபோது, கதாநாயகன் வாய்ப்புகள் வந்தன. ‘‘மேக்கப் போட்டால், படிப்பில் கவனம் சிதறிவிடும். முதலில் படிப்பு. அப்புறம்தான் நடிப்பு’’ என்று அப்பா கூறிவிட்டார். அப்பா விருப்பப்படியே நான், ‘விசுவல் கம்யூனிகேஷன்’ படிப்பில் பட்டம் வாங்கி விட்டேன். அண்ணன், ‘ஆர்கிடெக்’கில் பட்டப்படிப்பு முடித்து இருக்கிறார்.
எனக்கு புகைப்பட கலையில் ஆர்வம் உண்டு. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, கண்காட்சி நடத்துகிற அளவுக்கு நிறைய புகைப்படங்கள் எடுத்து இருக்கிறேன். அதில் ஒரு புகைப்படத்தை ‘ஹாலிவுட்’டில் நடந்த புகைப்பட போட்டிக்கு அனுப்பி வைத்தேன். எனக்கு 4-வது பரிசு கிடைத்தது. அதன்பிறகுதான் என்னை சினிமாவில் அறிமுகம் செய்யலாம் என்ற முடிவுக்கு அம்மா, அப்பா இருவரும் வந்தார்கள்.
கேள்வி:- கல்லூரி பருவத்தை கடந்து வந்து இருக்கிறீர்கள். சினேகிதர்கள்-சினேகிதிகள் நிறைய இருக்கிறார்களா?
பதில்:- நான் கொஞ்சம் கூச்ச சுபாவம். எனக்கு சினேகிதிகள் கிடையாது. சினேகிதர்கள் நிறைய இருக்கிறார்கள். நல்ல வேளையாக, படத்தில் எனக்கு நெருக்கமான காதல் காட்சிகள் இல்லை. மலேசியாவில் பாடல் காட்சிகளை படமாக்கியபோது, அம்மாவை அந்தப்பக்கம் திரும்ப சொல்லி விடுவேன். அவங்க திரும்பிக்கொண்டபின்தான் கதாநாயகியுடன் நான் நடிக்க ஆரம்பித்தேன்.
கேள்வி:- உங்கள் அப்பா (விஜயகாந்த்) சண்டை காட்சிகளில் அபார திறமை கொண்டவர். அவரைப்போலவே அதிரடி கதாநாயகனாக வர விரும்புகிறீர்களா, காதல் நாயகனாகவும் நடிப்பீர்களா?
பதில்:- காதல்-சண்டை என எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். என்றாலும், எங்க அப்பா ஸ்டைல் என்னிடம் நிறைய இருக்கும்.
கேள்வி:- தமிழ் பட உலகில் இப்போது நிறைய இளம் கதாநாயகர்கள் இருக்கிறார்கள். இந்த போட்டியை எப்படி சமாளிப்பீர்கள்?
பதில்:- ‘சகாப்தம்’ படத்தில் நான் என் உழைப்பை முழுமையாக கொடுத்து இருக்கிறேன். ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். யாரையும் போட்டியாக கருதவில்லை. எல்லோரையும் நண்பர்களாகவே பார்க்கிறேன்.’’ இவ்வாறு சண்முக பாண்டியன் கூறினார்.
Average Rating