13 வயது சிறுமி கற்பழிப்பு: தாய்மாமன் உள்பட 4 பேர் விடுதலை – கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!
கோவை ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்த மாணவி 13 வயதான கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இதன் காரணமாக கவிதா ராமநாதபுரத்தில் உள்ள தாய் வழி பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். இந்த கால கட்டத்தில் கவிதாவின் தாய்மாமனான ஒண்டிப்புதூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 55), அவரது நண்பரான ஓய்வு பெற்ற கம்பவுண்டர் பாலு (என்கிற) பாலசுப்பிரமணியம் (70), பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்த கருப்பசாமி, ராமநாதபுரத்தை சேர்ந்த ராகம் கருப்பசாமி ஆகியோர் கவிதாவை மிரட்டி கற்பழித்ததாக ராமநாதபுரம் போலீசில் புகார் கூறப்பட்டது.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கருப்பசாமி, ராகம் கருப்பசாமி ஆகியோரை 15.2.2015 அன்று கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் நீதிபதி சுப்ரமணியன் முன்பு நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நீதிபதி சுப்ரமணியன் இன்று மதியம் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். கோபாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கருப்பசாமி, ராகம் கருப்பசாமி ஆகியோர் மீதான குற்றங்களை அரசு தரப்பு நிரூபிக்க தவறியதால் 4 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பு கூறினார்.
நீதிபதி சுப்ரமணியன் அளித்த தீர்ப்பின் விவரம் வருமாறு:–
13 வயது சிறுமியின் கற்பழிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து இந்த சமுகத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஊடகங்கள் ஏற்படுத்திவிட்டன. இதன் காரணமாக வழக்கு குறித்து முழுவதுமாக நான் சொல்ல வேண்டும்.
கடந்த 29.4.2012–ந் தேதி பாதிக்கப்பட்ட மாணவி தன்னை கோபாலகிருஷ்ணன், கம்பவுண்டர் பாலசுப்ரமணியம், கருப்பசாமி மற்றும் ராகம் கருப்பசாமி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று ஊசி போட்டு, மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுக்கு வராத பெண்ணை கற்பழிக்கும் போது அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட வேண்டும். ஆனால் இந்த மாணவிக்கு காயம் ஏதும் இல்லை. தொடர்ந்து 2012–ம் ஆண்டு மே மாதம் மற்றும் அக்டோபர் மாதங்களில் பொள்ளாச்சி மற்றும் சுந்தராபுரம் ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்ட சிறுமியை அழைத்து சென்று கற்பழித்ததாக சம்பவம் நடந்து 10 மாதங்கள் கழித்தே புகாராக சிறுமி தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணம் என்ன? என்று கேட்டால் கொலை மிரட்டல் விடுத்தார்கள். அதனால் பயந்து புகார் தெரிவிக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட சிறுமி கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 14.2.2013 அன்று புகார் கொடுத்தபோது 10 மாதங்களாக வராத தைரியம் எப்படி வந்தது? என்ற சந்தேகம் உள்ளது. இதற்கு அரசு தரப்பு உரிய பதில் அளிக்கவில்லை.
புகாரில் மாணவி ஒரு இடத்தில் தனது பெயரில் முதல் எழுத்தை ஜி என்றும், இன்னொரு இடத்தில் கே என்றும் எழுதியுள்ளார். இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. புகார் நகலில் தந்தையின் பெயரில் முதல் எழுத்தை டி என்று ஒரு இடத்திலும், சி என்று மற்றொரு இடத்திலும் மாற்றி மாற்றி கூறியுள்ளார்.
மாணவி தனது தகப்பன் பெயரை மாறி, மாறி கூறியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து புகார் மனு பெறவில்லை என்று சந்தேகம் எழுந்துள்ளது.
12.2.2012 அன்று பாதிக்கப்பட்ட மாணவி தனது காதலனுடன் சத்தியமங்கலத்தில் உடலுறவு கொண்டதாக போலீசிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த நேரத்தில் ஏன் இவர்களை போலீசார் கைது செய்யவில்லை?
இந்த கேள்விக்கு அரசு தரப்பில் சரியான பதில் இல்லை. குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேர் மீதும் கற்பழிப்பு வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். ஆனால் மருத்துவ பரிசோதனை அறிக்கையை இதுநாள் வரை கோர்ட்டில் அரசு தரப்பு சமர்ப்பிக்கவில்லை.
வழக்கை விசாரணை செய்த போலீஸ் அதிகாரியான இன்ஸ்பெக்டர் பாதிக்கப்பட்ட பெண்ணை சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று வரைபடம் வரைய வேண்டும். ஆனால் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை சம்பந்தப்பட்ட இடத்துக்கு அழைத்து செல்லாமல் வரைபடம் வரைந்துள்ளனர். இதற்கு அரசு தரப்பில் சரியான பதில் இல்லை.
மேலும் குற்றம் தொடர்பான சம்பந்தப்பட்ட ஆவணங்களை அரசு தரப்பு கோர்ட்டில் சமர்ப்பிக்க தவறிவிட்டது. கற்பழிப்பு வழக்கை கோர்ட்டில் அரசு தரப்பு நிரூபிக்க தவறிவிட்டதால் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Average Rating