செக்ஸ் புகாரில் சிக்கிய ஆசிரியர் கைதாகிறார்: கலெக்டருக்கு தவறான அறிக்கை கொடுத்த கல்வி அதிகாரி மீதும் நடவடிக்கை பாய்கிறது!!
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ளது சோளப்பாடி. இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவியிடம் இந்த பள்ளியில் வேலைப்பார்த்து வரும் ஆசிரியர் சக்திவேல் என்பவர் பாலியல் தொல்லை செய்து உள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் 1077 என்ற தொலைபேசி எண் மூலம் கலெக்டருக்கு புகார் செய்தனர். இதுப்பற்றி விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் விவேகானந்தன், நல்லம்பள்ளி உதவி தொடக்க கல்வி அலுவலர் பழனியம்மாள் என்பவருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து விசாரணைக்கு சென்ற பழனியம்மாள், அந்த பகுதியில் உள்ள 4 ஆண்களிடம் கையெழுத்து வாங்கி இது போன்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை என்று அந்த புகாருக்கு கலெக்டருக்கு பதில் அறிக்கை அனுப்பி உள்ளார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் ஊர் பொதுமக்கள் குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கட்டாய கல்வி ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி கல்யாண சுந்தரம் மற்றும் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் செயின்ட் தாமஸ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தனை நேரில் சந்தித்து அறிக்கை தாக்கல் செய்தனர். இதைப் பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அரசு பெண் டாக்டர் ஒருவரை அனுப்பி பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதாக கூறப்படும் மாணவியை பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
அப்போது பரிசோதனை செய்த டாக்டர் மாணவி பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து கலெக்டர், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
மேலும் ஆசிரியர் சக்திவேல் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை பாதுகாப்பு சட்டம் 2012–ன் கீழ் (போஸ்போ ஆக்ட்) படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
இது குறித்து பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் உத்தரவிட்டார். ஆனால் ஆசிரியர் சக்திவேல் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்வது என்று தெரியாமல் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
மேலும் போஸ்போ சட்டம் பற்றி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு பெண் அதிகாரிக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தான் இது போன்ற வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி யாரும் பயிற்சி பெறாததால் வழக்குப்பதிவு செய்ய முடியாமல் திணறி வருகிறார்கள்.
தற்போது போலீசார் ஆசிரியர் சக்திவேலை போலீஸ் வாகனத்திலேயே வைத்துக் கொண்டு சுற்றி வருகிறார்கள். அவர் மீது முறையான வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகு அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்ததையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி, புகாரில் சிக்கிய ஆசிரியர் சக்திவேலை முதலில் நத்தஅள்ளி என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கு தற்காலிக இடமாற்றம் செய்தார். பின்னர் அவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே மாணவி விவகாரத்தில் கலெக்டருக்கு தவறான அறிக்கை கொடுத்த உதவி தொடக்க கல்வி அதிகாரி பழனியம்மாளும், சர்ச்சையில் சிக்கிய ஆசிரியர் சக்திவேலும் உறவினர்கள். எனவே அவருக்கு சாதகமாக தவறான அறிக்கை கொடுத்து உள்ளார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கொந்தளித்து உள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை பாதுகாப்பு சட்டம் 2012–ன் கீழ் (போஸ்போ ஆக்ட்) படி இது போன்ற வழக்குகளில் தவறான தகவல் கொடுக்கும் விசாரணை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது. எனவே அதன் அடிப்படையில் உதவி தொடக்க கல்வி அதிகாரி பழனியம்மாள் மீதும் நடவடிக்கை பாய்கிறது.
Average Rating