ஜெகதாபட்டினம் அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட கலப்பு திருமண காதல் ஜோடிகள்!!
கலப்பு திருமணதை ஆதரித்து அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வாழ வைத்து வரும் நிலையில் கலப்பு திருமணம் செய்து கொண்ட ஜோடிகளை கட்ட பஞ்சாயத்தார் மிரட்டி ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே குறுந்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமு மகள் முத்துலெட்சுமி (வயது 22). கல்லூரி படிப்பை முடித்த முத்து லெட்சுமிக்கும், ராமநாதபுரம் மாவட்டம் சின்ன தொண்டி என்ற பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு வழக்கம் போல் எதிர்ப்பு கிளம்பியது. அதையும் மீறி அந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது.
கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட அவர்களை கட்ட பஞ்சாயத்தார் ஊரை விட்டு ஒதுக்கி வைக்க முடிவு செய்தனர். இந்த பஞ்சாயத்துக்கு காளிமுத்து என்பவர் தலைமை தாங்குவதாக ஊர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் முத்துலெட்சுமி–சுந்தர் திருமணம் செய்து கொண்டதை அறிந்த கட்ட பஞ்சாயத்தார் இருவரையும் பெற்றோரிடமிருந்து பிரித்தது மட்டுமல்லாமல் ஊருக்குள் நுழையக்கூடாது என்ற கடுமையான உத்தரவும் பிறப்பித்தனர். கட்டப்பஞ்சாயத்தாரின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு பெற்றோரும் வாய் திறக்க முடியாமல் போனது.
மகள் செய்தது ஒருபுறம் பிடிக்கவில்லை என்றாலும் தன்னிடமிருந்து பிரித்தது பெற்றோர்கள் ஏற்றுகொள்ளாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கலப்பு திருமண ஜோடிகளான முத்துலெட்சுமி–சுந்தர் தற்போது மீமீசல் என்ற இடத்தில் குடியிருந்து வருகிறார்கள்.
அவர்கள் பெற்றோர்களை பார்க்க முடியாமலும், ஊரில் குலதெய்வம் கோவிலில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்ள முடியாமலும் உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமலும் தவித்து வருகிறார்கள்.
தற்போது பெற்றோர்கள் திருமணம் செய்துகொண்ட தங்கள் மகள் தங்களோடு வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த போது கட்டப்பஞ்சாயத்தாரின் மிரட்டல் மேலோங்கியது. இது பற்றிய புகாரும் அளிக்க முடியாதபடி கட்டப்பஞ்சாயத்துக்கு தலைமை தாங்குபவர் காவல் துறையில் பணியாற்றுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஊர் பொதுமக்கள் செய்வதறியாது விழித்து வருகிறார்கள்.
இது போன்று முத்துலெட்சுமியின் உறவினரான ராக்கம்மா–ஜேசுராஜ் ஜோடியும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடியையும் கட்டப்பஞ்சாயத்தார் ஊரை விட்டே விரட்டி விட்டனர். தற்போது இந்த ஜோடியினர் தேவகோட்டையில் வசித்து வருகின்றனர். ஊரை விட்டு விரட்டி விடப்பட்ட கலப்பு திருமண ஜோடிகள் தங்கள் பெற்றோரை பார்க்கவும் ஊருக்கு வந்து செல்லவும் வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Average Rating