குழந்தைகளை கடத்திய திருச்சி கும்பல்: 6 பேர் மீட்பு–10 பேர் கைது!!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மேலகாவிரியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் விஜய் (வயது 14). இவரை கடந்த மாதம் 18–ந்தேதி மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.
இது குறித்து கும்பகோணம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் திருவெறும்பூர் போலீசார் கடந்த 24–ந்தேதி காந்திநகரை சேர்ந்த ரஜினி (37), அர்ஜூணன் (30) ஆகி யோரிடம் இருந்து விஜயை மீட்டு 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் 15–க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்தி அவர்களுக்கு திருட்டு தொழிலை கற்று கொடுத்து சூரத்தில் விற்பனை செய்ததும், இவர்களுக்கு பின்னால் பெரிய கும்பல் செயல்பட்டதும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் கடத்திய நாகை மாவட்டம் அக்கரை பேட்டை டாடா நகரை சேர்ந்த காளிதாஸ் மகன் மகேஷ் (4) என்ற சிறுவனையும் 26–ந்தேதி போலீசார் மீட்டனர்.
இதற்கிடையே கடந்த மாதம் 25–ந்தேதி திருவெறும்பூர் கக்கன் காலனியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்த மண்ணச்சநல்லூர் எஸ்.கண்ணனூர், சோழ நகரை சேர்ந்த பீர்முகமது மகன் யூனிஸ்கான் (9) என்ற சிறுவனை ‘மர்ம’ நபர்கள் கடத்தி சென்றனர். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 27–ந்தேதி திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு சிறுவனுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் திருவெறும்பூர் கக்கன் காலனியை சேர்ந்த சுப்பிரமணி (39), மதுரை மேலூர் வாஞ்சிநகரத்தை சேர்ந்த அழகர் (40) என்பதும் அவர்களுடன் இருந்த சிறுவன் மாயமான யூனிஸ்கான் என்பதும் தெரிய வந்தது.
மேலும் அவர்கள் 2 பேரும் ஏற்கனவே கைதான ரஜினி, அர்ஜூணன் ஆகியோருடன் தொடர்பு வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சுப்பிரமணி, அழகரையும் கைது செய்த போலீசார் சிறுவன் யூனிஸ்கானை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து குழந்தை கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கூண்டோடு பிடிக்கும் வகையில் திருச்சி மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்வரி உத்தரவின் பேரில் திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அந்த தனிப்படையினர் குஜராத் மாநிலம் சூரத்துக்கும் சென்று விசாரணை நடத்தி இந்த கடத்தல் கும்பலால் அங்கு விற்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் மாரிமுத்து (13), திருச்சி காட்டூரை சேர்ந்த மணிகண்டன் (11), தஞ்சையை சேர்ந்த செல்வகுமார் (8) ஆகிய 3 பேரை மீட்டனர்.
மேலும் இந்த குழந்தை கடத்தலில் தொடர்புடைய திருவெறும்பூர் காந்திநகரை சேர்ந்த போலீஸ்குமார் மகன்கள் காளிதாஸ், விஜய் மற்றும் ராஜூ என்பவரது மகன் முரளி, மதன்குமார், பாரதிபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தூவாக்குடி தெற்குமலை முருகன்கோவில் தெருவை சேர்ந்த மதுரை வீரன்–பழனியம்மாள் தம்பதியின் 3–வது மகன் முருகன் (5) என்ற சிறுவனை, திருவெறும்பூர் காந்திநகர் ஊர் தலைவரும் அ.தி.மு.க. பிரமுகருமான மோகன் என்பவர் வளர்ப்பதாக கூறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி சென்றுள்ளார். பின்னர் பெற்றோர் தங்கள் குழந்தையை காட்டுமாறு பலமுறை கூறியும் மோகன் குழந்தையை காட்டாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் தற்போது திருவெறும்பூர் போலீசில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் மோகனை பிடித்து தீவிர விசாரணை நடத்திய போது மோகன் ஏற்கனவே கைதான குழந்தை கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததும், இவருடன் மேலும் 2 பெண்களும் சேர்ந்து சிறுவன் முருகனுக்கு திருட்டு தொழில் கற்று கொடுத்து அவனை மும்பையில் விற்றதும், பின்னர் அங்கு திருட்டு தொழிலில் வரும் வருமானத்தை இவர்கள் பங்கு போட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மோகனை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பெண்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
முருகனை மும்பையில் விற்றுள்ளதாக போலீசாரிடம் மோகன் கூறியுள்ளதால் அவனை மீட்க இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 12–ந்தேதி இரவு மும்பைக்கு புறப்பட்டு சென்றனர். மேலும் இதில் 50–க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவததால் இந்த குழந்தை கடத்தலில் தொடர்புடைய சூரத் மற்றும் மும்பையை சேர்ந்த கடத்தல் கும்பல் உள்பட மேலும் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Average Rating