உலகில் முதன்முறையாக ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சை: தென்னாப்பிரிக்காவில் சாதனை-இளைஞர்களுக்கு வரப்பிரசாதம்!!
உலகில் முதல் முறையாக ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சை செய்து தென் ஆப்பிரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் வாலிப வயதில் இளைஞர்களின் ஆண்குறியில் நுனித்தோல் அகற்றுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் போது பல இளைஞர்கள் தங்கள் ஆண்குறியையே இழக்க நேரிடுகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 250 பேர் தங்கள் ஆண்குறியை இழந்து விடுவதாக கூறப்படுகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன் அந்நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரின் 18வது வயதில் நுனித்தோல் அகற்றும் முயற்சி நடைபெற்றது. அப்போது அவரது ஆண்குறி துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் வேதனையடைந்த அவர், இதற்கு தீர்வே இல்லையா என்று எண்ணியிருந்த நிலையில், கேப்டவுனில் உள்ள ஸ்டெல்லன்போஷ் பல்கலைக்கழகம் அவருக்கு கை கொடுக்க முன்வந்தது. அந்த இளைஞருக்கு வேறொரு இளைஞர் தானமாக கொடுத்த ஆண்குறியை பொருத்த முடிவு செய்யப்பட்டது.
அதன் படி கடந்த டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க மருத்துவர்கள் மிகவும் சிக்கலான 9 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் மாற்று ஆண்குறியை இணைத்து சாதனை படைத்தனர். கேப்டவுன் அருகேயுள்ள பெலிவில்லேவில் டைகர்பெர்க் மருத்துவமனையில் ஸ்டெல்லன்போஷ் பல்கலைக்கழக சிறுநீரக பிரிவு தலைவரான பேராசிரியர் ஆண்ட்ரே வான் டெர் மெர்வ் தலைமையில் இந்த ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
2வது தடவையாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தாலும், தற்போது தான் முதல் முறையாக நீண்ட கால பயன் கிடைத்திருப்பதாக பல்கலைக்கழகம் பெருமையுடன் கூறியுள்ளது. சிகிச்சைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர், 18 அல்லது 19 வயதில் ஆண்குறியை இழப்பது இளைஞனுக்கு ஆழ்ந்த வேதனையை உண்டாக்கும். இதை சமாளிக்கும் உளவியல் திறனும் இல்லாததால் பல இளைஞர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள் என்றார்.
தானம் அளித்தவரின் பெற்றோரின் ஒப்புதலுடன் ஆண்குறியை துண்டித்து, இந்த மாற்று ஆண்குறி அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. தற்போது ஆண்குறி வெற்றிகரமாக இயங்குவதாகவும், சிறுநீர் மற்றும் இனப்பெருக்க செயல்பாடுகளை அந்த இளைஞர் முழுவதுமாக பெற்றுள்ளதாகவும் பல்கலைக்கழகம் மேலும் கூறியுள்ளது.
2 வருடத்திற்கு பின் தான், மாற்று ஆண்குறி பொருத்தப்பட்ட இளைஞரால் முழு செயல்பாட்டை பெறமுடியும் என்று கருதியதாகவும், ஆனால் வெகு சீக்கிரத்தில் அவர் மீண்டு வந்தது பெருத்த ஆச்சர்யத்தை அளிப்பதாகவும் கூறிய பேராசிரியர் மெர்வ், தற்போது எவ்வித பக்கவிளைவுகள் இல்லாமல் பெருத்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறினார்.
மருத்துவ உலகில் இது மிகப்பெரிய திருப்புமுனையாகும். அறிவியல் சில வகையில் இடையூறுகளை தந்தாலும் பல வகையில் நல்லது நடக்க முக்கிய காரணம் என்பது இதன் மூலம் கண்கூடாக தெரிவது குறிப்பிடத்தக்கது.
Average Rating