அஞ்சுகிராமம் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் புகுந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை!!
குமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே உள்ள மருங்கூரை அடுத்த இரவி புதூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது60).
இவர் கூட்டுறவு பால் சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மகேஸ்வரி (48).
இவர்களுக்கு கோலப்பன்(20) என்ற மகனும், உஷா, கோகிலா(27) என்ற மகள்களும் உள்ளனர். உஷாவுக்கு திருமணமாகி விட்டது. கோகிலா என்ஜினீயரிங் படித்து விட்டு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
இவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர். இதற்காக பாலசுப்பிரமணியன் வீட்டில் நகை, பணத்தை சேர்ந்து வைத்திருந்தார்.
நேற்று இரவு வீட்டில் ஒரு அறையில் பாலசுப்பிரமணியமும், மகேஸ்வரியும் உறங்கினர். மற்றொரு அறையில் உஷா தனது குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்தார். கோலப்பன் வேலைக்கு சென்று விட்டார். இன்று அதிகாலை 1½ மணி அளவில் இவர்களது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்மநர்கள் உள்ளே நுழைந்தனர்.
பின்னர் நைசாக பீரோவை உடைத்து அதில் இருந்து ரூ.6¼ லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 8¼ பவுன் நகையை கொள்ளையடித்தனர். அதன் பின்னர், மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை மர்மநபர் ஒருவர் பறித்தார். அப்போது கண்விழித்த மகேஸ்வரி திருடன்…. திருடன்…. என சத்தம் போட்டதோடு, நகையை இறுக்கி பிடித்தார். இதில், நகை இரண்டாக அறுந்து 2 பவுன் கொண்ட நகையின் ஒரு பகுதி திருடன் கைக்கு சென்றது. மற்றொரு பகுதி கீழே விழுந்தது. உடனே, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையே, மகேஸ்வரியின் அலறல் சத்தம்கேட்டு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் கண் விழித்தபோது தான் கொள்ளை நடந்த சம்பவம் பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கன்னியாகுமரி டி.எஸ்.பி. நந்த குமார், இன்ஸ்பெக்டர் ராஜபால், சப்–இன்ஸ்பெக்டர்கள் சாம்சன்ஜெபதாஸ், அனிதா, ஜான்கென்னடி, ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பாலசுப்பிரமணியன் சமீபத்தில் ஓய்வு பெற்றுள்ளார். இதனால் அவருக்கு பண பலன்கள் கிடைத்துள்ளது. மேலும், மகளின் திருமணத்திற்கு தயாராகி வருவதால் தனக்கு சொந்தமான ஒரு வயல் மற்றும் வீட்டை விற்றுள்ளார். இவ்வாறாக மொத்தம் ரூ.6 லட்சத்தை ஒரு பையில் வைத்து பீரோவில் பாதுகாப்பாக வைத்திருந்தார். இதை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
பாலசுப்பிரமணியன் ஓய்வு பெற்ற பின்னரும் கூட தற்காலிகமாக அதே பால் சொசைட்டிக்கு கணக்குகள் பார்க்க சென்று வந்துள்ளார். இந்த வகையில் சொசைட்டி பணம் ரூ.11,200–ஐயும் வீட்டு பீரோவில் தான் வைத்திருந்தாராம். இந்த பணமும் கொள்ளை போய் உள்ளது.
இதுகுறித்து பாலசுப்பிரமணியன் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது வீட்டில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக கூறியிருந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating