ஓமலூரில் காதலிக்கு மகன் கட்டிய தாலியை அறுத்து எறிந்த தந்தை!!
சினிமா திருமணம்…! சினிமாவில் கதாநாயகன், கதாநாயகி காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் தந்தை வந்து பிரச்சனை செய்வார். அப்போது பல பிரச்சனைகளுக்கு இடையேயும் காதலன் தனது காதலிக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொள்வார். சில நேரங்களில் இந்த காட்சிகள் சண்டையிலும், சில நேரங்களில் காமெடி காட்சிகளாகவும் அமையும். இதே போல் காதல் ஜோடியை விரட்டி விரட்டி தாக்கி தாலியை பறித்த ஒரு சம்பவம் ஓமலூரில் நடந்துள்ளது. இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:–
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி இவரது மகன் கோபிநாத் (22). இவர் சேலத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இதே கடையில் கருப்பூர் பரவைக்காடு பகுதியை சேர்ந்த பெரியசாமியின் மகள் திவ்யா (23) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இருவரும் வேலை செய்யும் இடத்தில் அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. இது அவர்களுக்குள் காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.
இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் காதலன் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் எப்படியும் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்று முடிவு செய்த காதல் ஜோடி வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி வழக்கம் போல் 2 பேரும் கடந்த 23–ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வந்தனர். பின்னர் அவர்கள் சேலம் ஊத்துமலை முருகன் கோவிலில் நண்பர்கள் உதவியுடன் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் வழக்கம் போல் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் கோபிநாத்–திவ்யாவை திருமணம் செய்து கொண்ட விவகாரம் கோபிநாத்தின் தந்தை பழனிசாமிக்கு தெரியவந்தது. இதனால் மகனை கண்டித்த அவர் வேலைக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்து பூட்டி வைத்தார். கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்த கோபிநாத் நண்பர்கள் உதவியுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
தொடர்ந்து காதலி திவ்யாவை பதிவு திருமணம் செய்து கொண்டால் தான் பிரிக்க மாட்டார்கள் என்று முடிவு செய்த கோபிநாத் அதற்கான ஏற்பாடுகளை செய்தார். வீட்டில் அடைத்து வைத்து இருந்த மகனை காணாமல் பழனிசாமியும் ஒரு புறம் இவர்களை தேடி கொண்டு இருந்தார்.
கோபிநாத் காதலி திவ்யாவை அழைத்து கொண்டு பதிவு திருமணம் செய்து கெள்ள சேலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு இன்று திருமணம் செய்ய முடியாது என கூறினர். இதையடுத்து ஓமலூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் ஓமலூர் கடை வீதியில் வந்து கொண்டு இருப்பது, கோபிநாத்தின் தந்தை பழனிசாமிக்கு தெரியவந்தது.
இதையடுத்து பழனிசாமி அங்கு தயார் நிலையில் அவர்களுக்காக காத்திருந்தார். அப்போது காதல் ஜோடியினர் வந்து கொண்டு இருந்தனர். இதைப்பார்த்த அவர் அவர்களை நோக்கி ஓடினார். அப்போது காதல் ஜோடியினரும் ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அவர்களை விரட்டி, விரட்டி தாக்கினார். மேலும் தனது மகன் காதலி திவ்யாவுக்கு கட்டிய தாலியையும் அறுத்து எரிந்தார்.
ஆனாலும் பழனி சாமியின் பிடியில் சிக்காமல் கோபிநாத்–திவ்யா ஆகியோர் கடைவீதியில் ஓட்டம் பிடித்தனர். விடாமல் பழனிசாமியும் விரட்டி வந்தார்.
ஒரு கட்டத்தில் கடைவீதியில் உள்ள ஒரு கடையில் தாலி கயிறு வாங்கி அந்த இடத்திலேயே பழனிசாமி தனது காதலி திவ்யாவுக்கு தாலி காட்டினார். அப்போது அங்கு வந்த பழனிசாமி மீண்டும் திவ்யாவை தாக்கி தாலியை அறுத்து எரிந்தார். இதனால் கடைவீதி முழுவதும் ஒரே பரபரப்பாக காணப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி தெரியவந்ததும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் காதல் ஜோடி கோபிநாத்–திவ்யா ஆகியோரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர் .அப்போது இருவரும் திருமண வயதை அடைந்து இருந்ததால் இரு வீட்டார்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இவர்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என எழுத்து மூலமாக எழுதி வாங்கி கொண்டனர். பின்னர் காதல் புதுமண ஜோடியினர் கோபிநாத்–திவ்யா ஆகியோர் புது வாழ்க்கை தொடங்க சென்று விட்டனர்.
Average Rating