சம்பந்தனின் நகர்வுகள் தோல்வியுறுமா? -யதீந்திரா (கட்டுரை)!!
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் என்ன நடைபெறுகிறது? இப்படியொரு கேள்வி சாதாரணமாக அனைவர் மத்தியிலும் உண்டு. சில நேரங்களில் கூட்டமைப்பின் அரசியல் விறுவிறுப்பானதாக இருக்கிறது.
சில நேரங்களில் குளறுபடியாகத் தெரிகிறது. இன்னும் சில வேளைகளிலோ உண்மையில் கூட்டமைப்பிற்குள் என்னதான் நடைபெறுகிறது என்பதை விளங்கிக்கொள்ள முடியாதளவிற்கு ஒரே புதிராக இருக்கிறது.
இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் கூட்டமைப்பு ஒரு தெளிவான அரசியல் வேலைத்திட்டத்தின் கீழ் இயங்கவில்லை என்பதை காணலாம்.
அண்மைக்காலமாக கூட்டமைப்பின் சார்பில் வெளிவரும் அறிக்கைகள் மேற்படி நிலைமையை தெளிவாக படம்பிடித்து காட்டுகின்றன.
அண்மையில் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது கூட்டமைப்பிற்குள் இரண்டு நிலைப்பாடுகள் இருப்பது தெரிகிறதுதானே என்றார்.
என்னுடைய பார்வையில் கூட்டமைப்பிற்குள் இரண்டு நிலைப்பாடுகளல்ல, மாறாக மூன்று, சில வேளைகளில் நாலு, இன்னும் சில நாட்களில் இன்னும் அதிகரிக்கலாம் என்னுமளவிற்கு பலவாறான நிலைப்பாடுகள் இருக்கின்றன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதில் தொடங்கிய மேற்படி உட்சிக்கல்கள், தற்போது அதன் இரண்டாவது கட்டத்தை எட்டியிருக்கிறது.
ஆட்சி மாற்றமொன்று தேவை என்பதில் எவருக்கும் முரண்பாடு இருக்காத போதிலும் கூட, அந்த ஆட்சி மாற்றத்தை தமிழர் நலனிலிருந்து எவ்வாறு அணுகுவது என்பதில் வேறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவியது.
குறிப்பாக எவ்வித நிபந்தனைகளுமற்று மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது தொடர்பில் கூட்டமைப்பிற்குள் கருத்தொற்றுமை நிலவியிருக்கவில்லை.
ஆயினும், இறுதியில் கூட்டமைப்பு தேர்தலுக்கு ஜந்து தினங்களுக்கு முன்னதாக மைத்திரிக்கான பகிரங்க ஆதரவை தெரிவித்திருந்தது.
ஆட்சி மாற்றம் தமிழர்களின் வாழ்வில் ஆகக் குறைந்தது சில மாற்றங்களையாவது ஏற்படுத்தும் என்னும் எதிர்பார்ப்பு சாமானிய தமிழ் மக்கள் மத்தியில் நிலவியது உண்மை. ஆனால், ஆட்சி மாற்றத்தின் முதலாவது கட்டத்திலேயே தமிழ் மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
கிழக்கு மாகாண சபை விவகாரத்தில் சம்பந்தன் ஜயாவின் நகர்வுகள் தோல்வியடைந்தன.உண்மையில் இது கூட்டமைப்பின் ஆட்சி மாற்றம் குறித்த நம்பிக்கையின் மீது விழுந்த முதலாவது அடியாகும். மேலும், மேற்படி சம்பவம் புதிய அரசின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த ஓரளவு நம்பிக்கையையும் தகர்த்தது.
இப்படியொரு சூழலில்தான் தமிழ் மக்களின் தலைவராக நோக்கப்படும் சம்பந்தன் ஜயா, இலங்கையின் 67ஆவது சுதந்திர தினத்தில் பங்குகொண்டமை தொடர்பில் விமர்சனங்கள் மேலெழுந்தன. இது தொடர்பிலும் கூட்டமைப்பிற்குள் கருத்தொற்றுமை நிலவியிருக்கவில்லை.
இது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
சுரேஸ் கூட்டமைப்பின் அங்கமாக இருப்பினும் கூட, பிறிதொரு கட்சியைச் சேர்ந்தவர் என்னும் வகையில் அவர் தன்னுடைய நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்துவதற்கு உரித்துடையவர்.
ஆனால், இது தொடர்பில் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு அறிக்கையை வெளியிட்டமையானது, கூட்டமைப்பின் குளறுபடியான அரசியலை மேலும் அம்பலப்படுத்தியது.
விக்னேஸ்வரன் தான் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை சுதந்திர தின நிகழ்வில் பங்குகொள்ளப் போவதில்லை என்று தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில் இதனை அறிக்கை என்பதைவிடவும், சம்பந்தனின் செயற்பாட்டிற்கான எதிர்ப்பாகவே பார்க்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து தற்போது வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலை தொடர்பான பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த நடவடிக்கைகளிலும் சம்பந்தன் திருப்தி கொள்ளவில்லை.
உண்மையில் இப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இது உரிய காலமல்ல என்பதே சம்பந்தனின் நிலைப்பாடு.
வடக்கு மாகாண சபையில் இவ்வாறானதொரு பிரேரணையை நிறைவேற்ற வேண்டுமென்று பல மாதங்களாக வாதாடி வருவபர் டெலோ சார்பிலான வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கமாவார்.
ஆனால், சிவாஜி இதனை கொண்டுவர முற்பட்ட போது அதில் பல சட்டச்சிக்கல்கள் இருப்பதாக கூறிய விக்னேஸ்வரன் இப்போது ஏன் இதனை நிறைவேற்றியிருக்கின்றார் என்பதுதான் பலரதும் கேள்வியாகும்.
தவிர, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதமளவில் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. அவர் இலங்கையில் வைத்து சில அறிவித்தல்களையும் செய்யக் கூடுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சம்பந்தனிடம் மற்றவர்களுக்குத் தெரியாத பல தகவல்கள் இருக்கவும் கூடும். இலங்கை வரவுள்ள மோடி, யாழ்ப்பாணத்திற்கும் செல்வாரென்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலை தொடர்பான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமையானது, மோடியின் யாழ்ப்பாண விஜயத்திலும் ஏதேனும் தாக்கங்களை ஏற்படுத்தவும் கூடும்.
அந்த வகையில் நோக்கினால் சம்பந்தன் குறிப்பிடுவது போன்று, விக்னேஸ்வரன் இப்படியொரு பிரேரணையை கொண்டுவருவதற்கான காலம் இதுவல்ல என்பது சரியானதே!
தமிழ் மக்களுக்கு ஒரு கௌரவமான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாலுள்ள வரலாற்று பணி.
ஆனால், அண்மைக்காலமாக கூட்டமைப்பிற்குள் அரங்கேறிவரும் உள் முரண்பாடுகளை நோக்குமிடத்து, அப்படியொரு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான தகமை கூட்டமைப்பிடம் இருக்கிறதா என்னும் கேள்வியே துருத்திக்கொண்டு தெரிகிறது.
சந்தேகமில்லாமல் தமிழ் மக்களுக்கான ஒரு நியாயமான அரசியல் தீர்வு என்பது ஒன்றிணைந்த வடக்கு கிழக்கை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்க வேண்டும்.
அண்மையில் கிழக்கு மாகாண சபையில் கிடைத்த படிப்பினை வடக்கு – கிழக்கு இணையாத தீர்வொன்று நிச்சயம் கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்கதிக்குள்ளாகும் என்பதையே வெள்ளிடைமலையாக்கியுள்ளது.
ஆனால், இப்படியொரு அரசியல் தீர்வை கொழும்பு விரும்பி வழங்கப் போவதில்லை என்பதை புரிந்துகொள்ள அதிகம் அரசியல் கற்கவேண்டியதில்லை. அதற்கான பட்டறிவு ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு.
நிச்சயமாக வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது மூன்றாவது சக்தியொன்றின் தலையீட்டினால்தான் சாத்தியப்படும். அந்த மூன்றாவது சக்தி இந்தியா என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே!
ஆனால், வடக்கு – கிழக்கை இணைத்து ஒரு தமிழ் மாநிலம் என்னும் அடிப்படையிலான ஒரு தீர்வை இந்தியா வலியுறுத்தக் கூடிய புறச் சூழல் இருக்கிறதா என்பதும் ஒரு கேள்வியே!
அவ்வாறானதொரு புறச் சூழல் இல்லையெனின் அதனை உருவாக்க வேண்டிய கடப்பாடு கூட்டமைப்பையே சாரும். ஏனெனில், இந்தியாவாக இருக்கலாம் அல்லது அமெரிக்காவாக இருக்கலாம்.
தங்களுடைய நலன்களுடன் இணைத்தே எந்தவொரு விடயத்தையும் அணுகுவார்கள். இதில் ஆச்சரியப்பட, ஆதங்கப்பட ஒன்றுமில்லை. இன்று தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஆனால், இன்று ஏற்பட்ட மாற்றத்தை உறுதியானதாக்கிக் கொள்வதற்காகவும் தமிழ் மக்களின் பிரச்சினையையே ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர்.
இந்த அடிப்படையில்தான் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மார்ச்மாத அறிக்கை பிற்போடப்பட்டிருக்கிறது. அதாவது, தமிழ் மக்களுக்கான நீதியை பிற்போட்டு, ஆட்சி மாற்றத்தை பேணிப் பாதுகாக்க முயல்கின்றனர்.
இங்கு நீதியை பிற்போடும் அதிகாரம் எவர் கையிலுள்ளது? நீதியை பிற்போடும் அதிகாரமுள்ளவர்கள் இருக்கின்றார்களெனின், அவர்கள்தானே இறுதியில் தமிழ் மக்களுக்கான நீதி எது என்பதையும் சொல்லப் போகின்றனர்.
அவர்கள்தானே சொல்ல வேண்டும்? இங்கு நடைபெற்றது இனப்படுகொலையா அல்லது வேறு எதுவுமா? அவர்கள் வசம் பல சொற்கள் உண்டு.
nisha meet MS 964dஇது தொடர்பில் அண்மையில் இலங்கை வந்திருந்த அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தெளிவாக குறிப்பிட்டதாக ஒரு தகவலுண்டு. அதாவது, எங்களின் பணியிலக்கு இன்னும் நிறைவேறவில்லை.
அது என்ன பணியிலக்கு? வீழ்த்தப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ வீழ்ந்தவராகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை அவர் மீண்டெழுந்தாலும் அதற்கேற்றவாறான கடிவாளத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இப்படியொரு பின்புலத்தில்தான் ஜ.நா. அறிக்கை பிற்போடப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை பொறுத்தவரையில், அது முற்றிலும் சவால்கள் நிறைந்ததாகவே இருக்கிறது.
இந்தச் சவால்களை வெற்றிகொள்வதற்கு அதிக நிதானமும், ஒருமித்த வேலைத்திட்டமும் எல்லாவற்றுக்கும் மேல் கூட்டமைப்பிற்குள் ஜக்கியமும் நிலவ வேண்டும்.
ஆனால், அண்மைக்காலமாக கூட்டமைப்பிற்குள் நடைபெற்றுவரும் கருத்து மோதல்களை உற்று நோக்கினால், புதிதாக எழுந்துள்ள சவால்களை சமாளிப்பதில் கூட்டமைப்பால் வெற்றிபெற முடியுமா என்னும் கேள்வியே எழுகிறது?
இன்றைய சூழலில் கூட்டமைப்பின் நகர்வுகளில் ஏற்படும் சறுக்கல்கள் அனைத்தும் சம்பந்தன் ஜயாவின் தோல்வியாகவே வரலாற்றில் பதிவாகும். செல்வநாயகத்தின் மற்றும் பிரபாகரனின் தோல்விகளை ஏலவே வரலாறு பதிவுசெய்துள்ளது.
Average Rating