பலாத்காரத்தின் போது அமைதியாக இருந்திருந்தால் டெல்லி மாணவி செத்திருக்க மாட்டாள்: சிறைக்குள் காமுகனின் ஆணவ பேட்டி!!
ஓடும் பஸ்ஸில் கற்பழிக்கப்பட்டு சாலையில் தூக்கி வீசியதால் கொல்லப்பட்ட டெல்லி மாணவி அன்றிரவு பலாத்காரத்தின்போது எதிர்ப்பு காட்டாமல் அமைதியாக இருந்திருந்தால் செத்திருக்கமாட்டாள் என இந்தக் கற்பழிப்பு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள் ஒருவனான முகேஷ் சிங் பேட்டியளித்துள்ளான்.
டாமினி, நிர்பயா, அமானத் எனும் புனைப்பெயர்களால் அழைக்கப்படும் பிஸியோதெரபி மாணவி கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இரவு டெல்லியில் தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ஓடும் பேருந்தில் வைத்து ஒரு குடிகார கும்பல் அவரை கற்பழித்ததுடன் கொடூரமாக தாக்கி சாலையோரம் வீசியது. உடன் சென்ற நண்பரும் கடும் தாக்குதலுக்கு உள்ளானார்.
உயிருக்கு போராடிய அந்த மாணவி செயற்கை சுவாச உதவியுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் டிசம்பர் 26 அன்று சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில், 13 நாள் நரக வேதனைக்கு பின்னர் டிசம்பர் 29 அன்று அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான பேருந்து ஓட்டுநர் ராம்சிங், அவரது சகோதரர் முகேஷ் சிங், வினய் ஷர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஒரு சிறுவன் உட்பட ஆறு நபர்களும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராம் சிங் சிறையிலேயே தூக்கிலிட்டுக்கொண்டான். மற்ற நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை மையப்படுத்தி இங்கிலாந்தின் லெஸ்லி உட்வின் என்பவர் ஆவணப்படம் தயாரித்துள்ளார். ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் பல்வேறு தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் கைதான பஸ் டிரைவர் முகேஷ் சிங் சிறையில் இருந்தபடியே இந்த ஆவணப்படத்திற்காக பேசியுள்ளான். “நான் அந்த பெண்ணை பலாத்காரம் செய்யவில்லை. பாலியல் பலாத்காரத்திற்கு ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பொறுப்பு. பலாத்காரத்தின்போது எங்களை எதிர்த்து அந்தப் பெண் போராடியிருக்கக்கூடாது. அமைதியாக இருந்திருக்க வேண்டும்” என்று முகேஷ் சிங் தெரிவித்திருக்கிறான்.
இது பற்றிய செய்திகள் வெளியானதும் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசி மூலம் திகார் ஜெயில் இயக்குனர் ஜெனரலுடன் தொடர்பு கொண்டு பேசினார். இந்த சர்ச்சை தொடர்பாக உடனடியாக விளக்கமளிக்குமாறு ஜெயில் இயக்குனரை ராஜ்நாத்சிங் கேட்டுக் கொண்டார்.
Average Rating