எதிர்காலத்தில் இயக்கம், தயாரிப்பில் இறங்குவேன்: ஜெயம் ரவி பேட்டி!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சிங்காநல்லூரில் டைரக்டர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை திரிஷா நடிக்கும் அப்பாடக்கர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அஞ்சலி, விவேக், சூரி, பிரபு உள்ளிட்டோரும் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ஜெயம்ரவி அளித்த பேட்டியில் கூறியதாவது:–
நான் நடிகனாகி 10 வருடங்கள் ஆகிவிட்டன. ஜெயம் படம் எனக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. அதைத்தொடர்ந்து நான் நடித்த படங்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. நான் நடித்த 99 சதவீத படங்கள் யூ சான்றிதழ் படங்களாகும். 2 படங்கள் மட்டும் ஆக்ஷன் கலந்த படங்கள் என்பதால் யூஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.
என்னுடைய படங்களில் புதுமுக இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுக்கிறேன். சினிமாவை பொருத்தவரை புது இயக்குனர்கள் தேவை, அவர்கள் தான் புதிய பாதையை உருவாக்குகின்றனர். பெரிய ஹீரோவாக இருப்பவர்களை மேலும் வளர வைப்பது புதுமுக இயக்குனர்கள் தான்.
எனக்கு 2 ஹீரோக்கள் கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆசை. ஆனால் படத்தில் 2 ஹீரோக்களுக்கும் சமமாக காட்சிகள் இருக்க வேண்டும். எனது படங்களை குடும்பத்துடன் வந்து பார்ப்பது எனக்கு கிடைத்த பரிசாகும்.
மக்கள் பார்த்த சம்பவங்களையே மீண்டும் பார்க்க விரும்புவதில்லை. பாடல்கள், காட்சிகள், காமெடிகள் என அனைத்தும் கலந்த கலவையான படத்தை பார்க்க விரும்புகின்றனர். குடும்ப படங்கள் தற்போது குறைந்து வரும் சமயத்தில் நான் குடும்ப படங்களில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இப்போது வரும் படங்களில் கதைக்காக உடல்மாற்றங்கள் செய்வது நிறைய வருகிறது. இதில் தவறு ஏதும் இல்லை. தென் இந்திய சினிமாவில் நான்தான் முதல்முறையாக பேராண்மை படத்துக்காக எனது உடல் எடையை 15 கிலோ வரை குறைத்தேன். அதற்காக ஒன்றரை வருடம் வேறு படங்களில் நான் நடிக்க வில்லை. அந்த படம் எனக்கு நன்றாக அமைந்தது.
நான் தற்போது அப்பாடக்கர், தனி ஒருவன், ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதை அம்சத்தை கொண்டது. காமெடி, ஆக்ஷன், திரில்லர் என வித்தியாசமாக கதைக்களங்கள் கொண்டவை.
ஜெயம் படத்தில் நடித்த ரவிக்கும், அப்பாடக்கர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ரவிக்கும் வேறுபாடு உள்ளது. முதலில் சினிமாவுக்கு வரும்போது ஒரு மாணவனாக வந்தேன். இப்போது நன்றாக மதிப்பெண் எடுக்கக்கூடிய மாணவனாக மாறியுள்ளேன். என்னுடைய நட்பு வட்டாரங்கள் பெரிய அளவில் இருக்கிறது.
வருங்காலத்தில் படம் தயாரிக்கும் ஆசை உள்ளது. சூழ்நிலைகள் சரியாக அமைந்தால் பட தயாரிப்பில் ஈடுபடுவேன். அதேபோல் இயக்குனராகவும் விரும்புகிறேன். அதற்கு முன்பாக நடிப்பில் நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளன. அவற்றை சாதித்துவிட்டதாக எனக்கு தோன்றினால் இயக்கம் மற்றும் தயாரிப்பில் இறங்கி விடுவேன்.
சினிமாவிலும், வாழ்க்கையிலும் எனக்கு தோல்வி வந்தால் எனக்கு பக்கபலமாக என் அண்ணன் ராஜா உள்ளார். அதனால் நான் கவலைப்பட தேவையில்லை.
இவ்வாறு ஜெயம் ரவி கூறினார்.
Average Rating