பல ஆண்டுகளாக தென்மாவட்டங்களை கலக்கிய பெண் உள்பட 3 கொள்ளையர்கள் கைது!!
நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் கடந்த சில மாதங்களாக வீடு புகுந்து கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து அந்தந்த மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். போலீஸ் வாகன ரோந்துப்பணியும் துரிதப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை சரக டி.ஐ.ஜி.யும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனருமான சுமித்சரண் உத்தரவின்பேரில் மாநகர போலீஸ் துணை கமிசனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் பாளை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைக்கதிரவன் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ரெட்டியார்பட்டி பகுதியில் போலீசார் சென்றபோது அந்த வழியே பைக்கில் ஒரு தம்பதி வந்தனர். போலீசை கண்டதும் பைக்கில் வந்த நபர் உடன் வந்த பெண்ணையும், பைக்கையும் விட்டு தப்பி ஓடி விட்டார். அந்த பெண்ணும் ஓட முயன்றார். சுதாரித்துக்கொண்ட போலீசார் அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர்.
அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பைக்கில் வந்தது பிரபல கொள்ளையன் வெற்றிவேல் என்பதும் அந்த பெண் அவரது மனைவி சங்கீதா என்பதும் தெரிய வந்தது. இருவரும் பல பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.
பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர். இந்த கொள்ளையில் வெற்றிவேலுடன், சங்கீதாவின் தம்பி ராகுலும் சேர்ந்து ஈடுபட்டு உள்ளான். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் சங்கீதாவை கைது செய்தனர். வெற்றிவேல் மற்றும் ராகுலை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் இன்று காலையில் பாளையில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த வெற்றிவேலையும், ராகுலையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை மற்றும் 7 பைக்குகள், ஒரு கார் மற்றும் 7 எல்.ஈ.டி டி.விக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம். கைதான 2 பேருக்கும் கொள்ளை சம்பவங்களில் உடந்தையாக இருந்ததாக வெற்றிவேலின் தாய் சிவகாமியையும் (வயது65) போலீசார் கைது செய்தனர்.
கைதான கொள்ளையன் வெற்றிவேல் நெல்லை மட்டுமின்றி தூத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரி மற்றும் பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார். பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபடும் அவர்கள் நகை பணத்தை எடுத்துக்கொண்டு அங்கு நிற்கும் கார், பைக்குகளையும் திருடி சென்றுள்ளனர்.
இது தொடர்பாக கொள்ளையன் வெற்றிவேல் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனது சொந்த ஊர் மதுரை ரெயில் நகர். சிறு வயதில் இருந்தே எனக்கு திருட்டு பழக்கம் வந்துவிட்டது. சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்த நான் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டேன். இதற்காக வெளி இடங்களுக்கு சென்று வீடுகளில் கொள்ளையடிக்க தொடங்கினேன். இதனால் கை நிறைய நகை, பணம் கிடைத்தது.
இதை வைத்து ஜாலியாக வாழக்கையை ஓட்டினேன். நாகர்கோவில் பகுதிக்கு சென்றிருந்தபோது எனக்கு சங்கீதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவளை திருமணம் செய்துகொண்டேன். எனது திருட்டுக்களுக்கு அவள் உடந்தையாக இருந்தாள்.
நாங்கள் 2 பேரும் வீடு வாடகைக்கு பார்க்க செல்வதுபோன்று பைக்கில் செல்வோம். கணவன்–மனைவியாக செல்வதால் எங்களை யாரும் சந்தேகப்படவில்லை. இதை சாதகமாக்கி வீடுகளை நோட்டமிட்டு எனது கூட்டாளிகளுடன் சென்று இரவில் கொள்ளையடித்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். கைதான 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Average Rating