சத்தி–திம்பம் மலைப்பாதையில் இளம்பெண் படுகொலை: முகத்தை எரித்த கொடூரம்!!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி திம்பம் மலை உச்சிக்கு செல்ல 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன.
இந்த மலைப்பாதையில் தினமும் பகலும், இரவும் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும்.
தற்போது இந்த திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதியில் இருசக்கர வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இப்படி சிறுத்தைகள் பீதி நிலவும், இந்த மலைப்பாதையில் தற்போது மேலும் பீதியடையக்கூடிய சம்பவம் நடந்து உள்ளது.
திம்பம் மலைப்பாதை 25–வது கொண்டை ஊசி வளைவில் சுமார் 30 அடி பள்ளத்தில் ஒரு இளம் பெண் பிணம் கிடந்தது அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.
இறந்து கிடந்த அந்த பெண்ணுக்கு 25 வயதுக்குள் தான் இருக்கும். கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது. மேலும் உடலில் காயங்கள் இருந்தது.
அந்த பெண்ணின் முகம் அடையாளம் தெரியாத வகையில் தீயால் கருக்கப்பட்டு இருந்தது.
யாரோ மர்ம ஆசாமிகள் அந்த பெண்ணை படுகொலை செய்து பிணத்தின் முகத்தை எரித்து மலைப்பகுதியில் இருந்து கீழே தூக்கி வீசி இருப்பது தெரிய வந்தது.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் ஆசனூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சத்தியமங்கலம் டி.எஸ்.பி மோகனும் சென்று விசாரணை நடத்தினார்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தியும் சம்பவ இடத்துக்கு நேற்று இரவு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
மேலும் இந்த கொலை பற்றி துப்பு துலக்கி விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
கொலை செய்யப்பட்ட பெண் சுடிதார் அணிந்து உள்ளார். இதனால் அவர் மலைப்பகுதியை சேர்ந்த பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை. நகரப்பகுதியில் இருந்து வந்த பெண்ணாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் அல்லது பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பெண்ணாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் அந்த பெண்ணின் கொடூர கொலையை ஒருவர் மட்டும் செய்திருக்க முடியாது. 2க்கும் மேற்பட்டவர்கள்தான் செய்திருக்கக்கூடும் என போலீசார் கருதுகிறார்கள்.
பெண்ணை உல்லாசம் அனுபவிக்கும் போது ஏற்பட்ட தகராறிலோ அல்லது கற்பழிக்கும் முயற்சியில் நடந்த சம்பவத்திலோ இந்த கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
இதை முன்னிலைபடுத்தி முதல்கட்ட விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதையொட்டி தானியங்கி காமிரா பொருத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மலையில் இருந்து அந்த பெண்ணின் உடலை தூக்கி போட்ட காட்சி அந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருப்பது தற்போது தெரியவந்து உள்ளது.
இதில் ஏதாவது தடயம் சிக்கக்கூடும் என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த இளம் பெண்ணின் பிணம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் திம்பம், ஆசனூர் வனப்பகுதியிலும் சத்தியமங்கலத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating