பெண்ணை ரெயிலில் கற்பழிக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர் கைது!!
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண். திருமணமான இவர் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக இருக்கிறார். விடுமுறையில் குண்டூர் சென்றிருந்த பெண் என்ஜினீயர் சென்னை திரும்புவதற்காக ஐதராபாத்–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. பெட்டியில் முன்பதிவு செய்து இருந்தார். அவரது டிக்கெட் காத்திருப்போர் பட்டியலில் இருந்தது. இதனால் பெண் என்ஜினீயரின் உறவினர்கள் சென்னை ரெயிலில் ‘பி–1’ பெட்டியில் டிக்கெட் பரிசோதகராக பணியில் இருந்த ரெங்கையா (45) என்பவரை அணுகி ‘பெர்த்’ ஒதுக்கி தருமாறு கூறினர்.
அவரும் ‘பெர்த்’ ஒதுக்கி கொடுத்தார். அதில் பெண் என்ஜினீயர் தூங்கிக் கொண்டு பயணம் செய்து வந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த போது டிக்கெட் பரிசோதகர் ரெங்கையா அருகில் வந்து அமர்ந்தார்.
பெண் என்ஜினீயரிடம் செக்ஸ் குறும்பில் ஈடுபட்டார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அவர் டிக்கெட் பரிசோதகரைப் பார்த்து சத்தம் போட்டு எச்சரித்தார். உடனே டிக்கெட் பரிசோதகர் எழுந்து சென்று விட்டார்.
அதன் பிறகு ரெயில் சின கஞ்சா ரெயில் நிலையம் அருகில் வந்த போது டிக்கெட் பரிசோதகர் ரெங்கையா மீண்டும் அந்த பெண் என்ஜினீயரின் இருக்கைக்கு சென்று அருகில் படுத்துக் கொண்டு கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டார்.
உடனே விழித்துக் கொண்ட அந்த பெண் பயணி டிக்கெட் பரிசோதகரின் பிடியில் இருந்து தப்பி ஓடி கழிவறைக்குள் சென்று ஒளிந்து கொண்டார். கழிவறையில் இருந்தவாறு குண்டூரில் உள்ள கணவரிடம் போனில் பேசி டிக்கெட் பரிசோதகரின் செயல்பற்றி கூறினார். அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
இதற்கிடையே ரெயில் ஓங்கோல் வந்து நின்றது. பெண் என்ஜினீயர் இறங்கிச் சென்று அங்கிருந்த ரெயில்வே போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து புகார் செய்தார். மேலும் அந்தப் பெண் பயந்து போய் தொடர்ந்து சென்னை ரெயிலில் பயணம் செய்யாமல் மீண்டும் குண்டூருக்கே வேறு ரெயில் திரும்பிச் சென்று விட்டார்.
இந்த நிலையில் சென்னை ரெயில் அதிகாலையில் சென்ட்ரல் வந்து சேர்ந்தது. ரெயிலில் நடந்த சம்பவம் பற்றி ஓங்கோல் ரெயில்வே போலீசார் சென்ட்ரல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்து இருந்தனர்.
இதையடுத்து சென்ட்ரலில் தயாராக காத்து இருந்த ரெயில்வே போலீசார் ‘பி–1’ பெட்டியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் ரெங்கையாவை கைது செய்தனர். பின்னர் அவர் குண்டூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ரெயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்கள் டிக்கெட் பரிசோதகர்களையும், போலீசாரையும் நம்பித்தான் செல்கிறார்கள். ஆனால் பாதுகாப்பாக இருக்க வேண்டிய டிக்கெட் பரிசோதகரே கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டிருப்பது பெண் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற செயலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் குமுறலுடன் தெரிவித்தனர்.
Average Rating