காதலர் தின மலரும் நினைவு எதிர்ப்பை மீறி இணைந்த ஜோடிகள்!!
காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் இந்த கொண்டாட்டத்துக்கு தடையேதும் இல்லை. ஆனால் கலாசாரங்களை பின்பற்றும் இந்தியாவில் எதிர்ப்பும், ஆதரவும் உள்ளது.
காதல் திருமணம் என்றாலே அதற்கு ‘எதிர்ப்பு’தான் முதல் எதிரி. அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி காதல் திருமணம் செய்வது என்பதே இமாலய சாதனைதான்.
அந்த சாதனையை நிகழ்த்திய கோவையைச் சேர்ந்த தம்பதிகள் இன்றும் அன்பிற்கு இலக்கணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சிலர் காதல் பூந்தோட்டத்தில் நுழைந்து இல்வாழ்க்கையில் இணைய உள்ளனர். காதலர் தினமான இன்று அவர்கள் தங்களின் காதல் போராட்ட அனுபவங்களை மனம் திறந்து கூறினர்.
கோவை ஆவாரம் பாளையத்தை சேர்ந்த டாக்டர் சேகர் (வயது 50), அவரது மனைவி புவனேஸ்வரி கூறியதாவது:–
எனது(சேகர்) சொந்த ஊர் புதுக்கோட்டை. எனது வாழ்க்கைத் துணைவியாக வந்துள்ள புவனேஸ்வரி எனக்கு அத்தை பெண். குடும்ப பிரச்சினை காரணமாக எங்கள் இருவர் குடும்பமும் பிரிந்து கிடந்தது.
திருமணம் மூலம் பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்க்க முடிவு செய்தேன். அதன் தொடக்கமாக புவனேஸ்வரியிடம் எனது உள்ளத்து ஆசைகளை கூறினேன். அவரும் பச்சைக்கொடி காட்டினார்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனது லட்சியமாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் காதலுக்காக தூக்கி எறிந்தேன்.
ஆசிரியையாக பணியாற்ற வேண்டிய புவனேஸ்வரியும் அதை புறந்தள்ளினார். 8 வருட போராட்டத்துக்குப் பின்னர் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். கோவை ஆவாரம்பாளையம் வந்து இல்வாழ்க்கையில் இணைந்தோம்.
அதன் பின்னர் அக்கு பஞ்சர் மருத்துவம் பயின்று இருவரும் தற்போது அக்குபஞ்சர் டாக்டராக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். பேரக் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம்.
உண்மையான–ஆழமான அன்பு இருந்தால் காதல் திருமணமும் கற்கண்டாய் இனிக்கத்தான் செய்யும்.
தர்மபுரி மாவட்டம் கோட்டம்பட்டியைச் சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 24). கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
தர்மபுரி நகம்பள்ளியைச் சேர்ந்தவர் சுமித்ரா ஜூலியட் (21). இவரும் தமிழ்மணி படிக்கும் அதே கல்லூரியில் படித்து வந்தார்.
பஸ்சில் ஊருக்கு செல்லும்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமயத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும் இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டி விட்டனர்.
படிப்பு முடிந்ததும் ஜூலியட்டுக்கு சென்னையில் வேலை கிடைத்தது. தமிழ்மணி இன்னும் படிக்க வேண்டியுள்ளது. அவர் படிப்பு முடிந்து வேலை கிடைத்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்வோம்.
காதல் திருமணத்துக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருப்பேன் என்கிறார் ஜூலியட்.
கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (34). தங்கநகை பட்டறை தொழிலாளி. இவரது மனைவி பிரியா (29). இருவருக்கும் ஒரே பகுதி என்பதால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு. வெவ்வேறு சமூகம் என்பதால் இவர்களின் காதலுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பு.
கோவில் திருவிழாவில் ஆறுமுகமும், பிரியாவும் சந்தித்தனர். கண்கள் பேசியது. ஏகப்பட்ட எதிர்ப்புகளுக்கு பின்னர் இல்வாழ்க்கையில் இணைந்தனர்.
வன பத்ரகாளியம்மன் கோவிலில் இவர்கள் திருமணம் நடந்தது. திருமணமாகி 13 ஆண்டுகளாகியும் கருத்து வேறுபாடின்றி மனமகிழச்சியோடு வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களின் மகிழ்ச்சியான இல்வாழ்க்கைக்கு சாட்சியாக ஐஸ்வர்யா, அர்ச்சனா என்ற 2 மகள்கள் உள்னர். விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் எப்போதும் சந்தோஷம் தான் என்று கூறுகிறார்கள் இந்த தம்பதிகள்.
கோவை ராஜ வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (64). இவரது மனைவி லட்சுமி (55). கிருஷ்ணனின் தங்கை படித்த பள்ளியில்தான் லட்சுமி படித்தார். மேலும் கிருஷ்ணனும், லட்சுமியின் அண்ணனும் ஒரே இடத்தில் வேலைபார்த்தனர்.
அப்போது கிருஷ்ணன் அடிக்கடி லட்சுமியின் வீட்டுக்கு செல்வார். அப்போது கிருஷ்ணன்–லட்சுமி இடையே காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இவர்களின் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பினாலும் அதையெல்லாம் உடைத் தெறிந்து இல்வாழ்க்கையில் இணைந்தனர். தற்போது 2 மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்கிறார்கள்.
உண்மையான புரிதல் இருந்தால் வாழ்க்கை எப்போதுமே சந்தோஷம் தான் என்று கூறுகிறார்கள் கிருஷ்ணன்–லட்சுமி தம்பதி.
Average Rating