நாளை காதலர் தினம்: காதலே… ஓ காதலே…!!
காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும் பூக்கள் என்று கை நீட்டி நீயும் தொடும் போது பூ விதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும் உன் பார்வையிலேயே ஒரு மாற்றம் நடக்கும் உன் வார்த்தையிலே இனி மவுனம் இருக்கும் உன் தேவதையை நீ காணும் வரைக்கும் பல பூகம்பங்கள் உன் நெஞ்சில் வெடிக்கும்.
அன்றைய ‘அம்பிகாபதி’ முதல் இன்றைய ‘சுந்தரபாண்டியன்’ வரை காதல் ரசம் சொட்டாத தமிழ் சினிமாக்கள் இல்லை.
காதல்… எப்போ வரும்…? என்னவெல்லாம் செய்யும்…? எதுவுமே தெரியாது. ஆனால் எப்படியோ வந்து விடுகிறது. வந்து விட்டால் இதயம் இனிக்கிறது. வாழ்க்கையே அதுதான் என்றாகி விடுகிறது. காதல் இல்லாத வாழ்க்கை முழுமையடைவதில்லை என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.
காதல், எல்லோரது வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் எட்டிப் பார்க்கிறது. அந்த சுகமான அனுபவத்தை வாழ்க்கை முழுவதும் நினைத்து பார்த்தாலே இனிக்கும். இதயத்தின் ஓரத்தில் அது வாழ்நாள் முழுவதும் ஒட்டிக் கொண்டே இருக்கும். மனித குலம் தோன்றிய நாளில் இருந்தே கூடவே காதலும் தொடரத்தான் செய்கிறது. அதனால்தான் தமிழ் சினிமாக்களும், இலக்கியங்களும் காதலை மையமாக வைத்தே சுழல்கின்றன.
தமிழ் சினிமாவையும் காதலையும் பிரிக்கமுடியாது. காதல் இல்லாத இலக்கியமும் சுவைக்காது. இவ்வளவு பெருமை மிக்க காதல் சமூகத்தில் விவாதப் பொருளாக இருப்பதும், அங்கீகரிக்க தயங்குவதும் காலம் காலமாக தொடர்கிறது. அது ஏன்? காதலை வைரமுத்துவின் பார்வையில் சொன்னால் விழியில் விழுந்து இதயம் புகுந்து உறவில் கலந்த உணர்வாக உருவெடுக்க வேண்டும் அதுதான் உண்மை காதல்.
ஆனால் இன்று கண்டதும் காதல்… காதலனின் தோளில் சாய்ந்து பைக்கில் முகத்தை மூடிக் கொண்டு பறக்க வேண்டும். கடற்கரை, பூங்கா, ஓட்டல்களில் தனிமையில் சரசமாடி மகிழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். பருவத்தில் ஏற்படும் பாலின கவர்ச்சி. இரும்பும், காந்தமும் ஒட்டிக் கொள்வது போல் ஒட்டிக் கொள்கிறது. ஆனால் கவர்ந்து இழுக்கும் மின் காந்தம் சக்தியை இழந்ததும் இரண்டும் பிரிந்து விழுந்து விடும். காதல் ரொம்ப புனிதமானது. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியும், சமூகத்தில் ஏற்பட்டு இருக்கும் தாக்கங்களும் காதலை மிகவும் சல்லியாக்கி விட்டன.
செல்போன் எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப், பேஸ் புக்குகளில் மூழ்கி கிடக்கும் காதல் பெரும்பாலும் வெற்றியடைவதில்லை. மாறாக வாழ்க்கையின் லட்சியத்தையே மூழ்கடித்து விடுகின்றன. இதனால் பெற்றோரும், சமூகமும் காதலுக்கு வில்லனாக மாறுகிறது. இதையும் தாண்டி ஒரு காதல் இருக்கிறது. ஆணும், பெண்ணும் வாழ்க்கையை புரிந்து கொள்ளும் போது, சுய காலில் நிற்க தொடங்கும் போது துளிர்விடும் காதல் நிச்சயமாக வளரும்… மலரும்…
உண்மையான காதலர்கள் இதை புரிந்துதான் வைத்திருக்கிறார்கள். ‘‘காதலிக்கும் காலம்தான் மகிழ்ச்சியான காலம். காதல் விளையாட்டாகிவிட்டது. காதல் என்பது ஏமாற்றுவித்தை என்பதை ஏற்க முடியாது. உண்மையில் அவனோ, அவளோ ஏமாற்றுகிறாரா? என்பதை யூகித்து கொள்ளும் பக்குவம் இளைய தலைமுறையிடம் உள்ளது.
உண்மையாக காதலிப்பவர்கள் காதலுக்காக பெற்றோரையோ, பெற்றோருக்காக காதலையோ இழக்க மாட்டார்கள்’’ என்றார் ஆணித்தரமாக ஒரு சாப்ட்வேர் பெண் என்ஜினீயர். இப்படி, வாழ்க்கையை புரிந்து கொண்டவர்கள் காதலிலும் ஜெயிக்கிறார்கள். நாளை காதலர் தினம். காதல் உலகம் இனம் புரியாத மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருக்கிறது. காதல் கொண்டாட்டத்துக்கு காதலர்கள் தயாராகி கொண்டிருக்கிறார்கள். காதலில் கட்டுண்டு கிடப்பவர்கள் காதலுக்காக எதையும் செய்வார்கள் என்பதை உணர்ந்து அதிலும் லாபம் ஈட்ட தொடங்கிவிட்டது வர்த்தக உலகம்.
ஒற்றை ரோஜா… அன்பு முத்தம்… இதையும் தாண்டி விதவிதமான… பிடித்தமான பரிசு பொருட்களை கொடுத்து அசத்த வேண்டும் என்ற உணர்வு காதலர்களிடம் இயல்பாகவே உள்ளது. வாழ்த்து அட்டைகள், பூங்கொத்துகள், அலங்கார பொருட்கள், நகைகள் என்று நூற்றுக்கணக்கான பரிசு பொருட்கள்… ஸ்பெசல் தருணங்களுடன் கொண்டாட நினைப்பவர்களுக்கு காதலர் தினத்துக்காக பல நிறுவனங்கள் சிறப்பு பேக்கேஜ்களை அறிவித்துள்ளன.
‘காதலை வலிமையாக்கும் காதல் பொருட்கள்’ என்று ஒரு நீண்ட பட்டியலுடன் ஆன்–லைன் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. ஆன்லைன் வியாபாரத்தில் 50 முதல் 70 சதவீத தள்ளுபடியும் உண்டாம். இதெல்லாம் இருக்கட்டும். உண்மையான… இருமணம் இரண்டற கலந்து வாழ வைக்கும் காதலுக்கு ஜே.
Average Rating