காதல் என்னும் மூன்றெழுத்து மந்திரம்!!
அம்மா என்ற வார்த்தைக்கு இணையாக உலக மாந்தர்களின் உதடுகளில் அதிகமாக உச்சரிக்கப்படும் ஒரே வார்த்தையாக ‘காதல்’ என்னும் மூன்றெழுத்து மந்திரச் சொல் நீக்கமற நிறைந்துள்ளது.
ஒவ்வொரு மொழியிலும் காதல் என்ற உணர்வு வெவ்வேறு விதமாக குறிப்பிடப்பட்டாலும் அதன் உள்பொருளான உன்னவள் நான், எனக்காக நீ என்ற அடிப்படை தத்துவம் எங்கும், என்றும் மாறியதே இல்லை.
ஆதாம்-ஏவாள் காலம் தொடங்கி, ரோமியோ-ஜூலியட் போன்ற மேற்கத்திய ஜோடிகளும், அம்பிகாபதி-அமராவதி என்ற தமிழ் மண்ணின் காதல் வாசத்தை தரணிக்கு உணர்த்தும் அமரக் காதலும், லைலா-மஜ்னு என்ற அராபியக் காதலும் ஒரேயொரு தெய்வீக பந்தத்தின் நிலைப்பாட்டை தான் வெவ்வேறு மொழிகளில் விவரிக்கின்றன.
பிறப்பினாலும், வளர்ப்பினாலும், வசதியாலும், மதத்தினாலும் நாம் வெவ்வேறாக இருந்தாலும், கண்களால் கவரப்பட்டோம். இதயத்தால் கட்டுண்டு, ஈருடல் ஓருயிர் ஆனோம். திருமண யோகம் கூடி வந்தால் தம்பதியராகி, அன்போங்கும் இல்லறத்தின் மூலம் தாம்பத்தியத்தின் முழுப்பொருளை அனுபவித்து அறிந்து, நம் காதலுக்கு சாட்சி கூற மூன்றாம் உயிரை உண்டாக்குவோம்.
இல்லையேல், நம் இரு உயிர்களையும் மாய்த்துக் கொண்டு வருங்கால சந்ததியர் படித்தறியும் காதல் பாடமாக விளங்குவோம் என்பதே ஒவ்வொரு காதல் ஜோடியும் ஏற்றுக் கொள்ளும் முதல் காதல் பிரமாணமாக இருக்க முடியும். எதிர்பாராமல் சிலர் மீது காதல் வயப்பட்டு, ஒருவரது அன்பினால் மற்றவர் கட்டுண்டு கிடக்கும் சுகமான சிறைவாசம் தான் உண்மையான காதல் என போற்றப்படுகின்றது.
காதலுக்கென்றே ஒரு தனி தேசத்தையும் அந்த தேசத்தின் தேவனாக மன்மத ராஜனையும் மீன் கொடியுடன் கூடிய அவனது காதல் சாம்ராஜ்ஜியத்தின் பவுர்ணமி காலத்து இரவுகளில் காதலர்களை கிளர்ச்சி அடையச்செய்ய அவன் தொடுத்த – கரும்பு வில்லினால் ஆன மன்மத பாணங்களையும் நமது இதிகாசங்கள் பதிவு செய்து வைத்துள்ளதை நாம் போற்றி நினைவு கூர வேண்டும்.
‘வேலண்ட்டைன்’ என்னும் மேலை நாட்டு ‘காதல் பரோபகாரி’ தோன்றுவதற்கு பன்நெடுங்காலம் முன்னரே.., சங்கக்கால நாட்களில் இருந்தே காதலும் வீரமும் தமிழர்களின் இரு கண்களாக விளங்கி வருகின்றன. பல்வேறு சூழ்ச்சிகளுக்கு இடையிலும், பகைக்கு நடுவிலும் மனதை கவர்ந்தவளை மணம் முடித்ததன் மூலமாக நமது முன்னோர்கள் காதலின் ஊடாகவும் தங்களது வீரத்தை நிரூபித்து வந்துள்ளனர்.
அதேபோல், ஜல்லிக்கட்டு என்ற பெயரால் திமிறித்திரியும் மதக் காளையை அடக்கி மண்ணில் சாய்த்த பல வீரர்களும், தன்னை காதலிப்பவள் நம்முடய பலத்தையும், தைரியத்தையும், ஆண்மையையும் கண்டறிந்து, அவரைத்தவிர வேறு யாரையும் நான் மணாளனாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சபதம் செய்து கொள்ள வேண்டும் என்ற வைராக்கியத்துடன் தான் உயிரையும் பணயம் வைத்து இதைப் போன்ற வீர விளையாட்டுகளில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்று, தாங்கள் விரும்பிய காரிகையை காதல் மணம் புரிந்து கைபிடித்துள்ளனர்.
இதைப்போன்ற பல்வேறு எழுதப்படாத காதல் காவியங்களுக்கு இன்றும் கூட தமிழகத்தின் பல கிராமங்களில் உள்ள ‘இளவட்டக் கல்’ மவுன சாட்சிகளாக திகழ்கின்றன. தினந்தோறும் மனதுக்கு உகந்தவர் மீது மாறாத அன்பு செலுத்தி வரும் நமது இந்திய மண்ணில், குறிப்பாக தமிழர்களின் மரபில் காதலுக்கு என்று தனியாக எந்த தினமும் ஒதுக்கப்படவில்லை.
ஒவ்வொரு தினமும் காதலை வெளிப்படுத்தவும், வெளிப்படுத்தப்பட்ட காதலை ஏற்றுக் கொள்ளவும், வளர்ந்து வரும் காதலை திருமண பந்தத்தின் மூலம் நிறைவு செய்வதும், பின்னர், வாழ்வின் இறுதிக்காலம் வரை ஒருவரையொருவர் விட்டுப்பிரியாமல் மாறாத அன்புடன் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக காதலின் தெய்வீகச் சிறப்பை போற்றி பாதுகாத்து வருவதும் பரம்பரை பரம்பரையாக வழிவந்துக் கொண்டிருக்கும் நமது பாரம்பரியக் காதல் கலாச்சாரமாக திகழ்ந்து வருகின்றது.
அவ்வகையில், உலகம் முழுவதும் காதலர் தினமாக போற்றிக் கொண்டாடப்படும் இன்றைய நாளான பிப்ரவரி மாதம் 14-ம் தேதியானது, தமிழர்களுக்கும் மகிழ்ச்சிக்குரிய நாள் தான். மற்ற நாட்களை விட மேலும் அதிகமாக இன்று உங்கள் காதலர்களிடம் அன்பு பாராட்டுங்கள்.
காதலினால் தம்பதியராக இல்லற வாழ்க்கையில் இணைந்தவர்கள் இந்த தூய பந்தத்தை போற்றி பாதுகாத்து வாருங்கள். எதிர்கால சந்ததியரின் காதலுக்கு நந்தியாக குறுக்கே நில்லாமல், உண்மையான காதலர்களின் காதல் படகு பயணிக்கும் புனித நதியாக விளங்கி, காலங்கள் தோறும் காதல் வாழ, இல்லங்கள் தோறும் காதல் சிறக்க, உள்ளங்கள் தோறும் காதல் மணக்க உறுதுணையாக இருப்போம்.
காதலிக்கும், காதலிக்கப்படும், காதலுக்கு துணை நிற்கும், காதலோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்!
Average Rating