காதல் திருமணம் செய்த மாணவி தற்கொலை உடலை வாங்க மறுத்து 2–வது நாளாக உறவினர்கள் மறியல்!!
கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகரை சேர்ந்த துரை, விவசாயி. இவரது மகள் ஆனந்தி (வயது 16). இவர் அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார்.
கள்ளக்குறிச்சி அருகே விளம்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் விஜய் (17). இவர் கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகரில் தனது தாய்மாமன் மணிவேல் வீட்டில் தங்கி அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.
பள்ளிக்கு செல்லும் போது ஆனந்திக்கும், விஜய்க்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. ஆனால் இந்த காதலுக்கு விஜய்யின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஆனந்தியிடம் விஜய் பழகி வந்தார். மேலும் திருமணம் செய்யும் ஆசையில் ஆனந்தியை விஜய் 2 முறை வெளியூர் அழைத்து சென்றார். இதனை அறிந்த இருவரது பெற்றோரும் 2 பேரையும் கண்டித்து படிக்கிற வயதில் காதல், கல்யாணம் வேண்டாம் என்று அறிவுரை கூறி வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 7–ந் தேதி ஆனந்தியை அழைத்து சென்ற விஜய் கள்ளக்குறிச்சியில் உள்ள சிவன் கோவிலில் வைத்து தாலி கட்டினார். மேலும் ஆனந்தியை விளம்பாவூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு விஜய் அழைத்து சென்றார். ஆனால் இந்த திருமணத்தை விஜய்யின் பெற்றோர் ஏற்கவில்லை. உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் ஆனந்தி கழுத்தில் அணிந்திருந்த தாலியை அறுத்து வீசிய அவர்கள் ஆனந்தியை அவரது பெற்றோர் வீட்டுக்கு துரத்தி அனுப்பினர். இதனால் அவமானம் அடைந்த ஆனந்தி இதுகுறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். ஆனால் இருவருக்கும் திருமண வயது நிரம்பாததால் இரு குடும்பத்தினரும் பேசி முடிவு எடுக்கும்படி புகாரை ஏற்காமல் போலீசார் ஆனந்தியை திருப்பி அனுப்பினர்.
இதனால் மனமுடைந்த ஆனந்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு பயன்படுத்தும் பூச்சுகொல்லி மருந்தை (விஷம்) குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த ஆனந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆனந்திக்கு உடல்நிலை மோசமானதால் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே ஆனந்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ஆனந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை அறிந்த ஆனந்தியின் உறவினர்கள் நேற்று கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். ஆனந்தி சாவுக்கு விஜய்யின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் தான் காரணம் என்று கூறியும், அவர்களை கைது செய்ய வேண்டும் எனக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.
மேலும் ஆனந்தி கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனையடுத்து ஆனந்தியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில் விஜய்யின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை அறிந்த ஆனந்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை மீண்டும் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். விஜய்யின் பெற்றோர் மற்றும் உறவினர்களை கைது செய்யாதவரை ஆனந்தியின் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
Average Rating