சேலத்தில் மாநகராட்சி தொழிலாளி குத்திக்கொலை: 4 ரவுடிகள் கைது!!
சேலம் கிச்சிப்பாளையம் தேசிய புணரமைப்பு காலனியை சேர்ந்தவர் விஜயக்குமார் (வயது 42). இவர் சேலம் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு விஜயக்குமார் அதே பகுதியில் உள்ள சில்லி சிக்கன் கடை நடத்தி வரும் வினோத் என்பவரின் கடைக்கு சென்று பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு திடீரென 10–க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் சில்லி சிக்கன் கடையில் பேசிக்கொண்டிருந்த விஜயக்குமார், வினோத், ஜான் என்கிற சாணக்கியன் உள்பட பலரை உருட்டு கட்டை மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதத்தால் சரமாரியாக தாக்கினர். பதிலுக்கு விஜயக்குமாரின் ஆட்களும் அந்த கும்பலை தாக்கினர். சில்லி சிக்கன் கடையில் இரண்டு தரப்பினும் மாறி மாறி அடித்து உதைத்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரோட்டில் கிடந்த கல் மற்றும் கட்டைகளை எடுத்து வந்தும் தாக்கி கொண்டனர். இதனால் அந்த வழியே சென்றவர்கள் அலறியடித்து ஓடினர். இரண்டு தரப்பினும் மோதிக் கொண்டதால் அந்த பகுதி போர்களம் போல் காட்சி அளித்தது.
இந்த மோதல் சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த பொதுமக்கள் சிலர் உடனே சேலம் கிச்சிப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் உதவி கமிஷனர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் சேலம் டவுன், கிச்சிப்பாளையம் போலீசார் உடனே சம்பவ இடம் வந்தனர். இதை அறிந்த அங்கு தகராறு செய்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த மோதலில் விஜயக்குமார் கத்திகுத்து பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இவரைப்போல் ஜான் என்கிற சாணக்கியன், கோவிந்தராஜ் உள்பட 9 பேர் காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உடனே இவர்களை போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயக்குமார் இறந்து விட்டார். இதை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திரளாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கதறி அழுதனர். இதனால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களை துணை கமிஷனர் பிரபாகரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சமாதானம் செய்தனர். இதன் பின்னர் விஜயக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யும் அறையில் வைக்கப்பட்டது.
இந்த மோதலுக்கு காரணம் காதல் தகராறு என தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட விஜயக்குமாரின் மகன் சூரியா. இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வருகிறார். இதை அறிந்த கிச்சிப்பாளையம் பிரபல ரவுடி சூரி என்பவரின் மகன் டெலிபா (வயது 40) அறிந்து சூரியாவை கண்டித்துள்ளார். இது பற்றி சூரியா அவரது தந்தை விஜயக்குமார் மற்றும் உறவினர்கள் சிலரிடம் டெலிபா தன்னை மிரட்டி வருவதாக கூறி வந்துள்ளார். இதனால் விஜயக்குமார் டெலிபாவிடம் சென்று தட்டி கேட்டுள்ளார். இதில் அவர்கள் இடையே வாய்தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இவர்களை ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் டெலிபாவின் தரப்பினும், விஜயக்குமாரின் மகன் சூரியாவின் ஆட்களும் அடிக்கடி தகராறு செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று விஜயக்குமார் சில்லி சிக்கன் கடைக்கு வந்து தனது மகன் சூரியாவை, வேண்டும் என்றே சிலர் மிரட்டி வருகிறார்கள். இவர்களை கண்டிக்க வேண்டும் என தனது நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். இவர் பேசியதை யாரோ டெலிபாவின் ஆட்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதில் கோபம் அடைந்த டெலிபாவும் அவரது ஆட்களும் சில்லி சிக்கன் கடைக்கு வந்து விஜயக்குமாரையும் அவரது ஆட்களையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் விஜயக்குமார் இறந்து விட்டார். மற்றவர்கள் காயம் அடைந்த உள்ளனர்.
இந்த கொலையில் துப்புதுலங்க சேலம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தனிப்படை அமைத்தார், இதில் துணை கமிஷனர்கள் பாபு, பிரபாகரன், உதவி கமிஷனர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் இடம் பெற்று தீவிர விசாரணை நடத்தினர்.
பின்னர் போலீசார் விஜயக்குமார் கொலை வழக்கு தொடர்பாக சேலம் கிச்சிப்பாளையம் ரவுடி டெலிபா (வயது 40), அவரது தம்பி திருநாவுக்கரசு (வயது 35), சேலம் எஸ்.எம்.சி.காலனியை சேர்ந்த மார்ட்டீன் (வயது 40), குட்டி என்கிற குட்டியப்பன் (வயது 35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விஜயக் குமாரை கொலை செய்த கத்தி மற்றும் உருட்டு கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ரவுடி டெலிபாவின் கூட்டாளிகள் விக்கி, சிவா, சிலம்பரசன் உள்பட 6 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த மோதல் தொடர்பாக கிச்சிப்பாளையம் பகுதியில் மேலும் ஏதும் அசம்பாவித சம்பவம் நடந்து விடாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சேலம் கிச்சிப் பாளையத்தில் ரவுடிகள் மோதலில் சேலம் மாநகராட்சி ஊழியர் விஜயக்குமார் இறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு ள்ளது.
இந்த கொலை போல் மீண்டும் கொலை சம்பவம் நடக்காமல் இருக்க கிச்சிப் பாளையம் போலீஸ் நிலையத்தில் உள்ள ரவுடிகள் பட்டியல் எடுத்து அவர்கள் என்ன செய்கிறார்கள்? பொதுமக்களை மிரட்டு கிறார்களா? கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்களா? என விசாரித்து அவர்களை கைது செய்யவும் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து அனைத்து ரவுடிகளையும் போலீசார் அழைத்து விசாரித்தும் வருகிறார்கள்.
Average Rating