கள்ளக்காதல் படுத்தும்பாடு: போலீஸ் நிலையத்தில் தாயிடம் கெஞ்சிய சிறுவன்!!
ஈரோடு பகுதியை சேர்ந்தவர் ராமு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மூட்டை தூக்கும் தொழிலாளி. காதல் திருமணம் செய்த இவருக்கு மனைவியும், 8 வயதில் ஒரு மகனும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும், 11 மாத பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் ராமுவுக்கும், மாலதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் தங்களது குடும்பத்தினருக்கு தெரியாமல் வெளியூர்களுக்கு சென்று ஜாலியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த ஜனவரி 1–ந் தேதி புத்தாண்டு அன்று ராமுவும், மாலதியும் வீட்டை விட்டு சென்று விட்டனர். இதனால் ராமுவின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். இதேபோல் மாலதியின் கணவரும், குழந்தைகளும் தவித்தனர்.
பின்னர் இதுகுறித்து மாலதியின் கணவர் பிரபு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கள்ளக்காதல் ஜோடியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் ராமுவும், மாலதியும் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார் இருவரையும் மீட்டு வந்தனர்.
பின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ராமுவின் மனைவி மற்றும் பெற்றோர், உறவினர்கள் வந்திருந்தனர். இதேபோல் மாலதியின் கணவர் பிரபு மற்றும் 9 வயது மகன், மாலதியின் பெற்றோரும் வந்திருந்தனர்.
பின்னர் இருதரப்பினரும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாலதியின் மகனான 9 வயது சிறுவன், கதறி அழுதான். பின்னர் தாய் மாலதி அருகே சென்று, ‘‘அம்மா, எங்களுடன் வந்து விடும்மா… ஊரில் என்னை அசிங்கமாக பேசுவார்கள். தங்கையை நான் பார்த்து கொள்கிறேன்’’ என்று கெஞ்சி அழுது மன்றாடினான்.
ஆனால் மாலதி. அதை பொருட்படுத்தாமல், தான் ராமுவுடன் செல்ல போகிறேன் என்று கூறி பிடிவாதமாக இருந்தார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரபு, உடனே எனக்கு இனி மனைவியும், குழந்தைகளும் தேவை இல்லை’’ என்று கூறி அங்கிருந்து கோபமாக சென்று விட்டார்.
இதனால் அந்த சிறுவனும், 11 மாத பெண் குழந்தையையும் மாலதியின் பெற்றோரிடம் இருந்தனர்.
இந்த காட்சியை கண்டு போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசாரும் மிகவும் மனம் வெதும்பி உருகினர்.
இந்த நிலையில் இந்த வழக்கு ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இன்று காலை ராமுவும், மாலதி மற்றும் இருதரப்பு உறவினர்களும் வந்திருந்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தாவது ராமு, மற்றும் மாலதி ஆகியோர் அவரவர் குடும்பத்தினருடன் சேர வேண்டும் என்ற ஆசையில் போலீசார் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர்.
கள்ளக்காதல் கண்ணை மறைந்து விடும் என்பார்கள். ஆம்! இங்கு 10 மாதம் சுமந்து பெற்ற மகனின் பேச்சை கூட கேட்காமல் கள்ளக்காதலனே எனக்கு பெரியது என்ற முடிவுக்கு வந்த மாலதியின் மனதை மாற்ற முடியுமா?
இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!..
Average Rating