மஹிந்த ராஜபக்ஷவை விட்டு வரும்போது, கவலையாக இருந்தது.. அதனை உணர்ந்தேன், அதனால் தான் சொல்லாமல் வந்தேன்.. (டாக்டர் ராஜித்த சேனாரத்ன வழங்கிய செவ்வி)!!
தேசிய பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக அதனை அடிப்படையாகக் கொண்டு அதிகாரத்தை பகிரும் தீர்வு ஒன்றுக்கு செல்வோம்.
முதலில் நாட்டில் ஜனநாயக விடயங்களை நிலைநாட்டிவிட்டு பின்னர் இதனை செய்வோம். 13 ஆம் திருத்தத்துக்கு குறைந்த தீர்வுக்கு போக மாட்டோம் என்று புதிய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டாக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தை விட்டு விலகியதை பாரிய ஆபத்தான முடிவாக கருதினோம். ஆனால் நம்பிக்கை இருந்தது. எனினும் அந்த நம்பிக்கை தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்குமா? என்ற நம்பிக்கையின்மையும் இருந்தது.
ஆனால் அதனை செய்யவேண்டிய தேவை இருந்தது. பிரசாரக் காலத்தில் நாங்கள் பயப்படவில்லை. வெளியேறும் போதும் பயப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். செவ்வியின் முழு விபரம் வருமாறு,…
கேள்வி: கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியானது நாட்டுக்கு கூறும் செய்தி என்ன?
பதில்: நாட்டில் மாற்றம் ஒன்று தேவை என்ற செய்தியே வெளிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி மாற்றம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு நபரையோ அல்லது அரசாங்கத்தையோ மாற்றுவதையும் தாண்டி அரசியல் கலாசாரம் பண்பாடு என்பவை மாற்றப்பட்டுள்ளது.
கேள்வி: இந்தத் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் எவ்வாறான வகிபாகத்தை வகித்ததாக நீ்ங்கள் உணர்கின்றீர்கள்?
பதில்: தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்த மாற்றத்தில் மிகவும் உச்சபட்சமாக இடம்பெற்றுள்ளனர். காரணம் கடந்த அரசாங்கம் இந்த மக்களை ஒதுக்கி அரசியல் பேராசை காரணமாக இனவாதம் மற்றும் மதவாதத்தை பரப்பி அரசியல் செய்தது. அதனால்தான் இந்த மக்கள் பாரியளவில் முன்வந்து மாற்றத்துக்கு துணைபோயுள்ளனர்.
கேள்வி: அதாவது இந்த மக்கள் தீர்க்கமான பங்களிப்பை செய்துள்ளனர் என்று கூறுகின்றீர்களா?
பதில்: ஆம். தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது இதனை உணர்ந்துகொள்ள முடிகின்றது.
கேள்வி: தமிழ் பேசும் மக்களின் வாக்குகளினால் தான் இந்த வெற்றி கிடைத்துள்ளதாக சில தரப்புக்கள் செய்கின்ற பிரசாரங்கள் ?
பதில்: தமிழ் பேசும் மக்கள் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் இவ்வாறுதான் செயற்பட்டனர். கடந்த 2010 ஆம் ஆண்டுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தனர்.
எனினும் அவரினால் வெற்றிபெற முடியவில்லை. அதிலிருந்து அந்த வாக்குகளினால் மட்டும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் வெற்றிபெற முடியாது என்ற விடயம் தெளிவாகின்றது. தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அதிகம் வாழும் பகுதிகளையும் வெற்றிபெற முடிந்ததாலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெற்றிபெற முடிந்தது.
கேள்வி: கடந்த காலங்களில் நீங்கள் தமிழ் மக்களின் அபிமானம் குறித்து பேசினீர்கள். உங்கள் கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை. தற்போது அதிகாரத்துக்கு வந்துள்ளீர்கள். என்ன செய்யப் போகின்றீர்கள்?
பதில்: தற்போது அதனை எம்மால் இலகுவாக செய்ய முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எம்முடன் அமர்ந்துள்ளதால் அது இலகுவாக அமைந்துள்ளது. தீர்மானம் எடுக்கும் செயற்பாட்டில் நிறைவேற்று சபையில் அவர்களும் எம்முடன் உள்ளனர். எதிர்காலத்தில் அனைவரும் இணைந்து பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும். கட்டம் கட்டமாக முன்செல்வோம்.
கேள்வி: 100 நாள் திட்டம் தற்போது எவ்வாறு செயற்படுகின்றது?
பதில்: 100 நாள் வேலைத்திட்டம் உரிய முறையில் இடம்பெற்று வருகின்றது.
கேள்வி: 100 நாட்களின் பின்னர் இந்த நாட்டில் பாரிய மாற்றத்தை பார்க்க முடியுமா?
பதில்: நிச்சய மாக பார்க்க முடியும். அனைத்து விடயங்களும் அதில் இல்லாவிடினும் அதற்கு அப்பால் செல்கின்ற வகையில் செயற்படுவோம். எனினும் 100 நாட்களின் பின்னர் பாரிய மாற்றத்தை நாட்டில் காண்போம்.
கேள்வி: நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவுடன் நீங்கள் அரசாங்கத்தைவிட்டு வெளியேறினீர்கள்.
பின்னர் பல தரப்புக்களை இணைத்துக்கொண்டுவெற்றியடைந்துவிட்டீர்கள். எனினும் பின்னர் சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வந்துள்ளார். அது ஐக்கிய தேசிய கட்சிக்கு தயக்கத்தைக் கொடுத்திருக்குமே?
பதில்: இல்லை. தற்போது அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்ல இலகுவாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றாலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கவில்லை.
தற்போது 100 நாள் திட்டத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியமாகும். தற்போது எமக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.
இதில் சுதந்திரக் கட்சியின் ஆதரவு முக்கியமானது. மேலும் சுதந்திரக் கட்சியை முழுமையாக ஜனாதிபதிக்கு பொறுப்புக்கொடுத்துள்ளனர். எனவே, எங்களால் சட்டமூலங்களையும் அரசியலமைப்பு திருத்தங்களையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
கேள்வி: தாம் பதவிக்கு கொண்டு வந்த ஜனாதிபதி ஒரு கட்சியின் தலைமைப் பதவியை ஏற்பது ஐக்கிய தேசிய கட்சிக்கு கவலையாக இருக்காதா?
பதில்: இல்லை. நாங்கள் அதிகாரத்துக்கு வந்ததும் சுதந்திரக் கட்சியை முழுமையாக எடுப்பதாக கூறியிருந்தோம். தேர்தலின் போது இதனைக் கூறினோம். சுதந்திரக் கட்சியின் யாப்புக்கு அமையவே இதனை செய்துள்ளோம். அதனை இலகுவாக பெற்றுக் கொண்டுள்ளோம்.
கேள்வி: ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது…
பதில்: அப்படியில்லை. பாராளுமன்றம் ஏப்ரல் 23 ஆம் திகதிதான் கலைக்கப்பட வேண்டும் என்று இல்லை. தற்போது 100 நாள் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றோம். அதன்படி சரியான ஒரு திகதியில் பாராளுமன்றத்தை கலைப்போம். அது 100 நாட்களின் பின்னர் இடம்பெறும்.
கேள்வி: தேர்தலில் சுதந்திரக் கட்சி தனித்தும் ஐக்கிய தேசிய கட்சி தனித்தும் போட்டியிடும். அப்போது..
பதில்: நீங்கபள் கூறுவது போல் இல்லாமல் அனைத்து கட்சிகளும் ஒரு கூட்டணியாகவும் போட்டியிடலாம். ஆசனங்களை பகிர்ந்து போட்டியிடுவோம்.
கேள்வி: யதார்த்தமாக பார்த்தால் அது நடக்குமா?
பதில்: ஏன் முடியாது? ஒன்றாக அமர்ந்து செயற்படலாம். இல்லாவிடின் பிரிந்து நின்று போட்டியிடுவோம். பின்னர் இணைந்துகொள்வோம். நல்ல மனிதர்களை மக்கள் தெரிவு செய்வார்கள்.
கேள்வி: பிரிந்து நின்று போட்டியிட்ட பின்னர் கூடிய ஆசனங்களை பெறும் கட்சிக்கு பிரதமர் பதவி செல்லும் என்று உங்கள் விஞ்ஞாபனம் கூறுகின்றது. அப்படியானால் ஐக்கிய தேசிய கட்சி சுதந்திரக் கட்சியைவிட குறைந்த ஆசனங்களை பெற்றால் என்ன நடக்கும்? பிரதமர் பதவி யாருக்கு?
பதில்: பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சி கூடிய ஆசனங்களை பெற்றால் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் சுதந்திரக் கட்சிக்கு பிரதமர் பதவி போகும். ஆனால் அந்த நேரத்தில் பிரதமர் பதவியை யாருக்கு வழங்குவது என்று நாம் தீர்மானிப்போம். இவ்வளவுதூரம் கஷ்டப்பட்டு ஜனாதிபதியை உருவாக்கிய ஐக்கிய தேசிய கட்சியை பொதுத் தேர்தலின் பின்னர் புறந்தள்ளும் எண்ணம் எம்மிடம் இல்லை.
கேள்வி: தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்கு எவ்வாறான பிரவேசம்? 100 நாட்களுக்குள் வருமா?
பதில்: 100 நாட்களுக்குள் அதனை உள்ளடக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனை அவ்வாறு கோரவில்லை. ஆனால் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அதற்கு செல்வோம்.
அதாவது தேசிய பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக அதனை அடிப்படையாகக் கொண்டு அதிகாரத்தை பகிர்ந்து தீர்வு ஒன்றுக்கு செல்வோம். ஜனநாயக விடயங்களை நிலைநாட்டிவிட்டு இதனை செய்வோம். 13 க்கு குறைந்து போகமாட்டோம்.
கேள்வி: உங்கள் பார்வையில் மஹிந்த ராஜபக் ஷவின் தோல்விக்கு என்ன காரணம்?
பதில்: அவர் முன்னெடுத்த ஆட்சியானது முற்றாக ஒரு குடும்பத்தினால் செய்யப்பட்டது. அந்தக் குடும்ப ஆட்சியினால் கட்சியினர் விரக்தியுடன் இருந்தனர்.
இதன்போது ஒரு பகுதியினர் வெளியில் வந்தாலும் மற்ற பிரிவினர் கட்சிக்குள் இருந்தவாறு ஆதரவளித்தனர். மஹிந்த ராஜபக் ஷவுக்கு கட்சிக்குள்ளேயே யாரும் பாரிய ஆதரவை வழங்கவில்லை. கட்சிக்கு வெளியேயும் யாரும் ஆதரவு வழங்கவில்லை.
கேள்வி: 2009 ஆம் யுத்தத்தை முடித்து 2010 ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக் ஷ வந்தபோது அவர் முன் இருந்த சந்தர்ப்பங்களை அவர் பயன்படுத்தவில்லையா?
பதில்: அந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தும் தேவை அவருக்கு இருக்கவில்லை. நாம் எடுத்துக் கூறினோம், அவற்றை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றார். ஆனால் செய்யவில்லை. அவரின் சகோதரருக்கு அந்த எண்ணம் இருக்கவில்லை. அவர் இராணுவத்தினால் அனைத்தையும் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். முப்படையை வைத்து தொடர்ந்து நாட்டை ஆட்சி செய்யலாம் என்று அவர்கள் கருதினர்.
கேள்வி: என்ன நம்பிக்கையில் கடந்த அரசாங்கத்தை விட்டு வெளியேறினீர்கள்?
பதில்: எமது கொள்கையில் நம்பிக்கை இருந்தது. நாட்டு மக்கள் எம்மை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. தீர்மானித்தோம். வெளியில்வந்தோம்.
கேள்வி: எனினும் அந்த நேரத்தில் நீங்கள் ஒரு ஆபத்தான முடிவை எடுத்ததாக கருதவில்லையா?
பதில்: அதனை மிகப்பெரிய ஆபத்தான முடிவாக கருதினோம். ஆனால் நம்பிக்கை இருந்தது.ஆனால் அந்த நம்பிக்கை தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்குமா? என்ற நம்பிக்கையின்மையும் இருந்தது. எனினும் அதனை செய்யவேண்டிய தேவை இருந்தது.
கேள்வி: பிரசாரக் காலத்தில் தோற்றுவிடுவோம் என்ற பயம் இருக்கவில்லையா?
பதில்: பயம் இருக்கவில்லை. காரணம் மக்களின் பிரதிபலிப்பு உற்சாகமாக இருந்தது. ஆனால் அது இலகுவான விடயமாக அமையவில்லை.
கேள்வி: 2007 ஆம் ஆண்டிலிருந்து ராஜித்த சேனாரட்ன எவ்வாறு இந்த அரசாங்கத்தில் இருந்தார்?
பதில்: 2009 ஆம் ஆண்டுவரை யுத்தத்தை வெற்றிகொள்ளும் தேவை இருந்தது. அதனை நிறைவேற்றினோம். பின்னர் சமாதானம் வரும் என்று கருதினோம். யுத்தம் முடிந்தது. ஆனால் சமாதானம் வரவில்லை. அப்பிரதேச மக்கள் கஷ்டப்பட்டனர். மக்கள் அச்சத்துடன் வாழ்ந்தனர். எனவே சமாதானத்தை உருவாக்க அரசாங்கத்தை தோற்கடிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்தோம்.
கேள்வி: கடந்த 7 வருடங்களாக நீங்கள் அரசாங்கத்தில் இருந்தாலும் 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தீர்கள். தற்போது நீங்கள் அரசாங்கத்தின் பிரபல முக்கியஸ்தர். என்ன செய்யப் போகின்றீர்கள்?
பதில்: நாம் கூறிய அனைத்தையும் செய்வோம். பிரச்சினைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுப்போம்.
கேள்வி: கடந்த அரசாங்கத்தில் இருந்தபோது மைத்திரிபால சிறிசேன என்ற அரசியல்வாதி மீது உங்களுக்கு எவ்வாறு நம்பிக்கை ஏற்பட்டது?
பதில்: அவர் பேசும் விதம் எனது கருத்துக்கு ஒத்ததாக இருந்தது. இதனை அவதானித்தேன். நான் எடுத்த உதாரணங்களையே அவரும் கூறினார். எனவே எமக்கிடையில் ஒற்றுமை இருந்ததை அவதானித்தேன். .
அதேபோன்று நான் அவரைப் பற்றி சிந்தித்ததைப் போன்றே அவர் என்னைப் பற்றி சிந்தித்திருந்தார். அவர் எனது ஆசனத்துக்கு வந்து என்னை பற்றி பேசினார். எனக்கு உதவி செய்தார். எமக்கிடையில் நட்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அவரின் பிறந்த தினத்துக்காக பொலன்னறுவையில் பாரிய கூட்டம் நடைபெற்றது.
அதிக மக்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் நான் பிரதான உரை நிகழ்த்தினேன். இறுதியில் அவர் ஏதாவது ஒரு தீர்மானத்தை எடுத்தால் அதற்கு நான் அவருக்குப் பின்னால் வருவதாக உறுதியளித்தேன். இறுதியில் அவரை தலைமைப் பதவிக்கு கொண்டு வந்தேன்.
கேள்வி: ராஜித்த சேனாரத்ன தனது அரசியல் வாழ்க்கையில் எடுத்த முடிவுகள் சரியானதா?
பதில்: எடுத்த முடிவுகள் சரியானவை. ஆனால் சிலவற்றை மக்கள் ஏற்கவில்லை. இடதுசாரிகளின் முகாம்களிலும் இருந்தோம். பின்னர் அரசியலில் பெற்ற அனுபவத்துடன் எடுத்த முடிவுகள் சரியானவையாக அமைந்தன. முன்னர் உபாயரீதியாக செயற்படவில்லை.
கேள்வி: மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணைகள் குறித்தும் பேசப்படுகின்றது். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை யுத்தக் குற்ற நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப் போவதாகவும் தேர்தல் காலத்தில் கூறப்பட்டது?
பதில்: அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். அதனை நாங்கள் ஏற்கனவே கூறிவிட்டோம். உள்நாட்டில் விசாரணை நடத்துவோம், சர்வதேச விசாரணைக்கு அவரை உட்படுத்த மாட்டோம்.
கேள்வி எந்தவிதமான சர்வதேச விசாரணைக்கும் இடமளிக்கமாட்டீர்களா?
பதில்: இல்லை. சர்வதேச விசாரணைக்கு மாற்றாக எமது நாட்டில் விசாரணை செய்வோம்.
கேள்வி: வடக்கு மக்களின் காணிப் பிரச்சினைகள் குறித்து?
பதில்: வடக்கில் இராணுவத்தினர் காணிகளை பாதுகாப்பு காரணத்துக்காக எடுத்துள்ளனர். அவை பாதுகாப்புக்கு எந்தளவு தூரம் அவசியம் என்பதனை பார்க்க வேண்டும். வர்த்தக நடவடிக்கைகளுக்கும் காணிகள் பெறப்பட்டுள்ளன.
பாதுகாப்புக்கு இல்லாமல் ஏனைய தேவைகளுக்காக பெறப்பட்ட காணிகள் மீண்டும் பெற்றுக்கொடுக்கப்படும். தமிழ்க் கூட்டமைப்பும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது.
இராணுவ முகாம்களுக்கான காணிகள் மற்றும் அவற்றுக்கு அருகில் இருக்கும் காணிகளை விடுத்து ஏனயை காணிகளை பெற்றுக் கொடுப்போம். முடியுமானவரை அதனை செய்வோம். இராணுவத்தினர் அக்காலத்தில் அரசாங்க காணிகளையும் பெற முயற்சித்தனர். சில அமைச்சுக்களின் காணிகளை பெற்றனர்.
கேள்வி: வடக்கில் இராணுவ முகாம்கள் குறித்தும் பேசப்படுகின்றதே?
பதில்: பாதுகாப்புக்கு எவ்வளவு இராணுவ முகாம்கள் தேவை என்று பார்ப்போம். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து அந்த மக்களை மகிழ்ச்சிப்படுத்தினால், புலிகள் மீண்டும் உருவாக மாட்டார்கள். இதனை புரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி: தேசிய பிரச்சினை தீர்வில் இந்திய பங்களிப்பு எவ்வாறு அமையும்? “
பதில்: இந்தியா எங்களுக்கு முழுயைமான உதவியை வழங்கும். கடந்த அரசாங்கத்தைப் போலன்றி எங்களுக்கு உதவி கிடைக்கும். தேசிய பிரச்சினையை தீர்க்க இந்தியா உதவி வழங்கும். 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவதே அவர்களின் நோக்கம்.
கேள்வி: 13 ஆம் திருத்தச் சட்டம் இன்றி இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லை என்று முன்னர் கூறினீர்கள். தற்போது?
பதில்: மாற்றம் இல்லை.
கேள்வி: மஹிந்த ராஜபக் ஷ உங்கள் நட்புக்குரியவர். பஷில் ராஜபக் ஷ உங்களுடன் படித்தவர். விலகி வரும்போது கவலையாக இருக்கவில்லையா?
பதில்: மஹிந்த ராஜபக்ஷவைவிட்டு வரும்போது கவலையாக இருந்தது. அதனை உணர்ந்தேன். அதனால்தான் சொல்லாமல் வந்தேன். ஆனால் எல்லாவற்றுககும் மேலாக நாட்டை நேசிக்கின்றேன்.
கேள்வி: இராணுவ சதி குறித்து பேசப்படுகின்றது. ஆனால் மஹிந்த ராஜபக் ஷ உங்கள் நட்புக்குரியவர். அவர் இவ்வாறு முயற்சித்திருப்பாரா?
பதில்: அதிகாரம் இல்லாமல் போகும்போது அவர்கள் எதனையும் செய்வார்கள். அதிகாரம் விட்டுப்போகும் என்று அவர்கள் எண்ணியிருக்கமாட்டார்கள். அந்த முயற்சியில் மஹிந்த ராஜபக் ஷ எந்தளவு தூரம் இணங்கினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவரின் உறவினருக்கு அதில் ஆர்வம் இருந்திருக்கின்றது.
கேள்வி: ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்?
பதில்: மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் புரிந்துணர்வு இருந்தது. அதனால்தான் அவர் உடனடியாக விடைபெற்றார். என்ன நடக்கின்றது என்று அவருக்கு தெரிந்தது. எனினும் அவரின் சகோதரர்களுக்கு அவ்வாறான மதிப்பீடு இருக்கவில்லை. காரணம் அவர்கள் அரசியல்வாதிகள் இல்லை. இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படுகின்றது.
கேள்வி: பிரதம நீதியரசர் விவகாரம்?
பதில்: தற்போதைய பிரதம நீதியரசரை ஜனாதிபதி நியமித்தபோது நான் அன்று எதிர்த்தேன். அதனை அரசியல் மயமாக செய்யவேண்டாம் என்று அப்போதைய ஜனாதிபதிக்கு கூறினேன். ஆனால் நாங்கள் விரும்பாவிடினும் அது நடந்தது.
நேர்காணல்:ரொபட் அன்டனி
Average Rating