கூலிப்படையை ஏவி நிதி நிறுவன அதிபரை கொன்ற கள்ளக்காதலி: 7 பேர் கைது!!
பள்ளிகொண்டாவை அடுத்த கீழாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 35). நிதி நிறுவன அதிபர். அவருக்கும், திருப்பத்தூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அடுத்த மாதம் (பிப்ரவரி) 2–ந் தேதி பள்ளிகொண்டாவில் திருமணம் நடக்க இருந்தது.
இந்த நிலையில் கடந்த 19–ந் தேதி இரவு நிதி நிறுவனத்தில் அலுவல் பணிகள் முடிந்ததும், அதனை பூட்டி விட்டு இளங்கோ தனது வீட்டுக்கு வந்தார். வீட்டில் இரவு சாப்பிட்டு விட்டு உறங்குவதற்காக கிராமத்துக்கு அருகில் உள்ள அவர்களுக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கு சென்று, அங்குள்ள பம்புசெட்டு அறையில் படுத்து தூங்கியபோது, மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர். போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரி உத்தரவுப்படி, பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் தலைமையில், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் சபாரத்தினம், நாகராஜ், அய்யப்பன், ஏட்டுகள் முரளி, பரந்தாமன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேப்பங்கால் பஸ் நிறுத்தத்தில் 5 பேர் கொண்ட கும்பல் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. உடனே அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில், அவர்கள் அப்துல்லாபுரத்தை சேர்ந்த குணசீலபாண்டியன் (34), அரியூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த தேவா என்கிற வேதாச்சலம் (38), கண்ணன் என்கிற பிரபு (28), ராஜா (30) என தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கடந்த 19–ந் தேதி நடந்த பள்ளிகொண்டா நிதி நிறுவன அதிபர் இளங்கோ கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதாக ஒப்புக்கொண்டனர். அவர்கள் தெரிவித்த விவரங்களை போலீசார் கூறியதாவது:–
நிதி நிறுவன அதிபர் இளங்கோவுக்கும், பள்ளிக்கொண்டாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மனைவியான மாலதி (40) என்பவருக்கும் பல ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இளங்கோ, மாலதியுடன் நெருங்கி பழகியதை மறக்க முடியவில்லை. இளங்கோ, மாலதிக்கு அவ்வப்போது பணம் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் இளங்கோவுக்கு திருமணம் நடக்க இருப்பதை அறிந்த மாலதி அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தனது தோழி மலர்கொடியிடம் கூறி இளங்கோவை பழி வாங்க திட்டமிட்டார். அதற்காக மாலதி தனது தோழியின் உதவியை நாடியுள்ளார். இதுபற்றி மலர்கொடி தனது தாய் மாமன் வெட்டுவாணத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான முத்து என்கிற பிச்சமுத்துவிடம் தெரிவித்துள்ளார்.
தனக்கு கிடைத்த சுகம் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்பதில் மாலதி உறுதியாக இருப்பதாகவும், அதுபற்றி தன்னிடம் அடிக்கடி புலம்புவதாகவும் மலர்கொடி பிச்சமுத்துவிடம் தெரிவித்துள்ளார். அதனை கேட்ட பிச்சமுத்து, மாலதியிடம் ரூ.50 ஆயிரம் பணம் கேட்டு, அப்துல்லாபுரத்தை சேர்ந்த குணசீலபாண்டியனிடம் சொல்லி, இளங்கோவை தீர்த்துக்கட்ட கூலிப்படையை அமைத்துள்ளார்.
அவருக்கு உதவியாக கண்ணன், தேவா, ராஜா ஆகியோரை அழைத்து வந்து பள்ளிகொண்டாவில் உள்ள ஒரு அறையில் தங்க வைத்து, இளங்கோவின் நடவடிக்கைகளை கவனித்து வந்துள்ளனர்.
கடந்த 19–ந் தேதி நள்ளிரவு 1 மணியளவில் 5 பேரும் சென்று அறையில் தனியாக படுத்து தூங்கிய இளங்கோவை கதவை தட்டி எழுப்பி தாங்கள் கொண்டு வந்த உருட்டு கட்டை, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொலை செய்துள்ளனர். பின்னர் 5 பேரும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள சாலை வழியாக சென்று தப்பி சென்று விட்டனர். அவர்கள் வேப்பங்கால் பஸ் நிறுத்தத்தில் கும்பலாக நின்றிருந்தபோது தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இவ்வாறு கொலையாளிகள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து இளங்கோ கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கள்ளக்காதலியான மாலதி, தோழி மலர்கொடி மற்றும் கொலையை செய்த பிச்சமுத்து, குணசீலபாண்டியன், கண்ணன் என்கிற பிரபு, தேவா என்கிற வேதாச்சலம், ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating