தொட்டால் தொடரும்!!
கேபிள் சங்கர் இயக்கத்தில் தமன் குமார், அருந்ததி உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் தொட்டால் தொடரும்.
துவார் G.சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் காதல், பாசம் எனத் தொடங்கி கூலிப்படை நெட்வொர்க் உட்பட பல முக்கிய செய்திகளை பேசுகிறது.
படத்தின் முதல் காட்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் செல்லும் காரை சிலர் ஜீப்பில் வந்து தொந்தரவு செய்ய, அவர்களை துரத்திச் சென்று விபத்தில் சிக்கி இறந்துவிடுகிறார் அமைச்சர். இந்த சம்பவத்தை அமைச்சரின் கார் டிரைவரின் செல்ஃபோன் படமாக்க, இதிலிருந்து போலிஸுக்கு துப்பு கிடைக்கிறது.
அமைச்சருக்கு ஏற்பட்டது விபத்தா? திட்டமிட்ட கொலையா? டிரைவர் ஏன் வீடியோ எடுத்தார்? என்ற கேள்விகளுடன் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது கதை.
அம்மா இல்லாமல் வளர்ந்து ஒரு கால் சென்டரில் பணிபுரிந்து வரும் அருந்ததிக்கு சித்தி கொடுமையும் இருப்பதால் மன உளைச்சலுடன் வாழ்கிறார்.
சித்திக்கு பிறந்தாளும் உடன்பிறந்த தம்பியாகவே தனது சித்தி மகனை பாவித்து வருகிறார். வங்கிக்கடன் வேண்டுமா? என்று ஃபோன் செய்து தொந்தரவு செய்வார்களே! அது போன்றதொரு கம்பெனியில் தான் அருந்ததி வேலை செய்து வருகிறாள்.
அப்படி ஒருவருக்கு தனது தோழி ஃபோன் செய்யும் போது தான் ஹீரோ தமன் குமாரின் அறிமுகம் உண்டாகிறது அருந்ததிக்கு.
குறும்பான பேச்சாலும், அலட்டல் இல்லாத பழக்கத்தினாலும் நேரில் பார்க்காமலேயே காதலா? நட்பா? என்று யோசிக்கும் நிலைக்கு வளர்ந்துவிடுகிறது இவர்களது உறவு.
தங்களிடையே இருக்கும் காதலை சொல்ல இருவரும் முடிவெடுக்கும் சமயத்தில் நடந்துவிடுகிறது அந்த அசம்பாவிதம்.
அருந்ததி தனது தம்பியுடன் கடைக்குச் சென்றுவரும்போது இருவரும் ஒரு விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். சிறு காயங்களுடன் அருந்ததி தப்பித்துக்கொள்ள, அருந்ததி தம்பி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது நிலை மோசமாகிறது.
பெரிய ஆபரேஷன்கள் செய்ய வேண்டும் 30 இலட்ச ரூபாய் கட்டுங்கள் என மருத்துவர் தரப்பு சொல்லிவிட என்ன செய்வதென்றே தெரியாமல் நிற்கிறார் அருந்ததி.
சந்தித்தே தீரவேண்டும் என தமன் குமார் ஒருபுறம் கட்டாயப்படுத்த, 30 இலட்ச ரூபாயை கட்டவேண்டும் என மருத்தவர்கள் ஒருபுறம் நெருக்க அவசரத்தில் விபரீதமான காரியத்தை செய்யும் அருந்ததியின் உயிருக்கு என்ன நேர்ந்தது? அவர் தம்பி பிழைத்தாரா? காதல் கைகூடியதா? இவருக்கும் அமைச்சர் விபத்திற்கும் எப்படி தொடர்பு உண்டானது என்பது தொடர்ந்து வரும் விறு விறு க்ளைமேக்ஸ்.
அருந்ததியை சுற்றித்தான் கதை முழுவதும் நகர்கிறது என்றாலும் தங்களுக்கான பகுதியை மிகச்சிறப்பாக செய்து அனைத்து நடிகர்களும் கவனத்தை ஈர்க்கின்றனர். ஆனாலும் மொத்தமாக அருந்ததி தான் மனதில் நிற்கிறார்.
‘வசனத்து வசனம் பஞ்ச் பேச நான் என்ன சந்தானமா?” எனக் கேட்கும் பாலாஜி உண்மையிலேயே நல்ல காமெடி நடிகர் தான். நீங்க நல்லா வரணும் பாஸ். பின்னணி இசையில் P.C.ஷிவன் மிரட்டியிருக்கிறார்.
காதல், பாசம், ஆக்ஷன் என திரைக்கதையின் விறுவிறுப்பிற்கு ஏற்ப இசையை அமைத்து சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். இயக்குனர் கேபிள் சங்கர் உண்மையிலேயே பாராட்டப் படவேண்டியவர் தான்.
சும்மா ஃபோன் பண்ணி டார்ச்சர் பன்றாங்கப்பா என நாம் கடந்து சென்றுவிடும் கால் சென்டரில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களையும், விபத்து என்ற பெயரால் கூலிப்படையினர் செய்யும் அட்டகாசங்களையும் பகிரங்கமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
ஆனால் அமைச்சரின் டிரைவர் எதற்காக வீடியோ பதிவு செய்தார் என்பதை கடைசிவரை சொல்லவே இல்லையே இயக்குனரே.
எவ்வித சோர்வும் இல்லாமல் முதல் படம் என்று தெரியாத விதத்தில் திரைக்கதையை அமைத்திருக்கிரார் இயகுனர். விமர்சகனால் விமர்சனம் மட்டும் செய்யமுடியும் என்பதில்லை. நினைத்தால் படமும் எடுக்கமுடியும் என்று நிரூபித்திருக்கும் உங்களது வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்.
தொட்டால் தொடரும் – தொய்வில்லாத திரைக்கதை!
Average Rating