ஐ படத்தை எதிர்த்து திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்!!
டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘ஐ’ திரைப்படத்தில் திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதற்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
‘ஐ’ படத்தில் திருநங்கைகளுக்கு எதிராக காட்சிகளை நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த நிலையில் நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவன் வளாகத்தில் மத்திய தணிக்கை துறை அலுவலகம் முன்பு திருநங்கைகள் இன்று திரண்டனர்.
இதில் திருநங்கையும் நடிகையுமான ரோஸ், பானு, டாக்டர் செல்வி உள்பட 15 பேர் குவிந்தனர். அவர்கள் ‘ஐ’ படத்துக்கு எதிராகவும் திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சிக்கு அனுமதி கொடுத்த தணிக்கை துறையை கண்டித்தும் கோஷம் எழுப்பினார்கள்.
இதுகுறித்து திருநங்கை பானு நிருபர்களிடம் கூறியதாவது:– ‘ஐ’ படத்தில் இடம் பெற்றுள்ள திருநங்கைகளுக்கு எதிரான காட்சிகளை நீக்குவதுடன் டைரக்டர் ஷங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த படத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இதுபோன்ற படங்கள் இனிமேல் வெளிவராத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். திருநங்கைகளை இழிவுபடுத்துவது போன்று காட்சிகள் இடம் பெற்று இருந்தால் அந்த படத்தை திருநங்கைகளுக்கு திரையிட்டு காட்ட வேண்டும். தணிக்கை குழுவில் திருநங்கைகள் இடம்பெற வழிவகை வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் திருநங்கைகள் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்களை சந்தித்து மனு அளித்தனர். இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தோழி அமைப்பின் இயக்குனர் திருநங்கை சுதா தலைமையில் 20 திருநங்கைகள் திரண்டனர்.
இதில் ‘காஞ்சனா’ படத்தில் நடித்த திருநங்கை பிரியா மற்றும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நமிதா, ரகசியா, வைசூ, ஷபானா, சுவேதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருநங்கை சங்கரி கூறியதாவது:–
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவான விக்ரமும், நகைச்சுவை நடிகர் சந்தானமும் திருநங்கைகளை கொச்சைப்படுத்தி பேசுவது போன்ற வார்த்தைகள் டைரக்டர் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் இடம் பெற்றுள்ளது கண்டிக்கத்தக்கது.
காஞ்சனா, தெனாவட்டு போன்ற பாடங்கள் சமூகத்தில் திருநங்கைகளின் அந்தஸ்தை உயர்த்துவதாக இருந்துள்ளன. திருநங்கைகளை 3–ம் பாலினமாக கருத வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் சமூக சிந்தனையுடைய ஷங்கர் போன்ற இயக்குனர் எங்களை இழிவுபடுத்துவது போன்று காட்சிகள் அமைத்திருப்பது வருத்தமளிக்கிறது.
எங்களது எதிர்ப்புக்கு டைரக்டர் ஷங்கர் இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. எனவே அடுத்தக்கட்டமாக நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் வருகிற 22–ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதில் முக்கிய பிரமுகர்கள், மாணவர்கள், வக்கீல்கள் பங்கேற்க உள்ளனர். போராட்டத்துக்கு அனுமதி கேட்டு கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
திருநங்கைகள் வருகையையொட்டி கமிஷனர் அலுவலகம் முன்பு கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இதற்கிடையே திருநங்கைகள், டைரக்டர் சங்கர் வீட்டு முன்பும் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் பரவியது. இதையடுத்து தி.நகர் போக் ரோட்டில் உள்ள அவரது வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தி.நகர் துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் மாம்பலம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
சாஸ்திரிபவன் முன்பு நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் பாண்டியன் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
Average Rating