நாகரீக சென்னையில் சேலையில் வலம் வரும் கல்லூரி மாணவிகள்!!
ஆறு முழம் சேலையை நேர்த்தியாக மடித்து… பார்டரை ஒழுங்குபடுத்தி… முந்தானை தலைப்பையும் அழகுபடுத்தி கட்டுவதற்குள்… அப்பப்பா… ஒரு வழியாயிடும்.
காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு ஓடுவது போல் இயந்திர கதியாகி விட்ட வாழ்க்கை சூழலில் இதற்கெல்லாம் நேரம் ஏது? என்பது தான் புதுமைப் பெண்களின் வாதம்.
சேலை கட்டினால் வேலை இல்லை என்று சொல்லும் நிறுவனங்கள் உள்ளன.
நவநாகரீகம் என்றால் விதவிதமான ஜீன்சும், ஸ்லீவ்லெஸ் மேலாடையும் தான் என்ற வறட்டு சிந்தனை இந்த கால இளம் பெண்களிடம் பரவி வருவது மறைக்க முடியாத உண்மை.
கொண்டாட்டங்கள் என்றால் இந்த மாதிரியான ஆபாச உடைகளுக்குத் தான் நட்சத்திர ஓட்டல்களில் அனுமதி. சேலைக்கு அங்கே வேலை இல்லை.
இதுதான் புது நாகரீகத்தின் வெளிப்பாடா? என்று சமூக ஆர்வலர்களை முகம் சுளிக்க வைக்கிறது.
எப்படியோ, இளவட்டங்களை பிடித்து ஆட்டும் இந்த மேலை நாட்டு நாகரீகமோகப் பேய் விரட்டியடிக்கப்பட வேண்டும்.
உலகுக்கே நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கற்றுத்தந்த நமது பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வு எல்லோரிடமும் உள்ளது.
பொதுவாக ஆடை விஷயத்தில் இந்த எண்ணம் எல்லோரிடமும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் எழாமல் இருக்காது. காரணம் இந்த பாரம்பரியம் நம் உயிரோடும், உணர்வோடும் கலந்தது.
கோட்டு, சூட்டு அணிந்தாலும் பட்டு வேட்டி அணிந்த மாப்பிள்ளை அழகும், பட்டு புடவையில் தேவதையாய் தெரியும் மணமகளின் அழகும் தனி அழகுதானே!
– இது ஒரு வசீகர ஆடை. கட்டிளம் காளையர்களை கூட வீழ்த்தி விடும் ஆற்றல் சேலைக்கு உண்டு.
அதனால் தான் கல்லுக்கு சேலை கட்டினால் கூட காதல் வயப்படும் கல்லூரி பருவம், என்பார் பாரதிராஜா. அந்த அளவுக்கு காதல் நிறைந்தது புடவை.
இந்த புடவை தான் தமிழ் பெண்ணின் அழகுக்கு அழகு சேர்க்கும். மறந்து போன – மறைந்து போன இந்த சேலை கட்டும் கலாச்சாரத்தை இளம் பெண்களிடம் வளர்க்க வள்ளியம்மாள் கல்லூரி தனி முயற்சி எடுத்து வருகிறது.
அந்த முயற்சிக்கு மாணவிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வாரம் ஒரு நாள் (வெள்ளிக்கிழமை) சேலை கட்டி கலக்கும் இந்த கல்லூரி மாணவிகள் சேலையே அழகு என்று அடித்து சொல்கிறார்கள்.
நெசவாளர்களுக்கு உதவுவதற்காக இன்று ஒரு நாள் அனைவரும் கைத்தறிப்புடவை கட்டி வந்தார்கள்.
எத்தனை மார்டன் டிரஸ் வந்தாலும் நம்ம சேலைக்கு நிகர் ஏதுமில்லை சார் என்பது இந்த கல்லூரி மாணவிகளின் வாதம்.
பி.ஏ. படிக்கும் அனிதாவிடம் 100 சேலை இருக்கிறதாம். சுடியிலும், ஜீன்சிலும் வரும் தோழிகளோடு நாங்களும் செல்லும் போது தமிழ் பெண் என்ற கவுரவம் கிடைக்கிறது. சேலை கட்டி செல்வதை யாரும் வெறுப்புடன் பார்ப்பதில்லை. ‘பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்’ என்று ஒரு முன் மாதிரியாகத்தான் எங்களை அடையாளம் காட்டுகிறார்கள் என்றார்கள் மோனிசாவும், நிகிதாவும்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கைத்தறி புடவையில் மைதானத்தில் அணிவகுத்து சென்றது பல வண்ண பட்டாம்பூச்சிகளாய் பரவசப்படுத்தியது. 22 நாடுகளை சுற்றி வந்து விட்டேன். நம்ம சேலையும், வசீகர தோற்றமும், சிரித்து பேசும் அன்பான உபசரிப்பும் தான் உலக நாடுகளில் நமக்கு அங்கீகாரத்தை தருகிறது என்றார் கல்லூரி முதல்வர் டி.வி.எஸ். பத்மஜா.
அவர் மேலும் கூறும் போது, நமது பாரம்பரிய உடையை பெண்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக வாரம் ஒரு நாள் சேலை கட்டும் பழக்கத்தை அறிமுகப்படுத்தினோம். இப்போது பல மாணவிகளுக்கு அதுவே பிடித்து விட்டது. தினமும் கூட சேலை அணிந்து வருகிறார்கள் என்றார்.
கலாச்சாரத்தின் பின்னணியில் நெசவாளர்களின் உயர்வுக்கும் கைகொடுப்போம் என்ற உணர்வு போற்றுதலுக்குரியது.
Average Rating