வெற்றி, தோல்வியை கடந்தும் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது -எம். பௌஸர்!!

Read Time:15 Minute, 48 Second

timthumbவெற்றி, தோல்வியை கடந்தும் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது
ஜனாதிபதித் தேர்தல் 2015, எனது கருத்துக்கள்
-எம். பௌஸர்
——————————————————————
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்? என்கிற கருத்துக் கணிப்புகளும் வாதப்பிரதிவாதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. என்னைப் பொருத்தவரை யார் வெற்றி பெறுவார் என்பதற்கு முன்னால், இத்தேர்தலில் ஒவ்வொருவரும் (மக்கள், தனி நபர்கள், கட்சிகள், அமைப்புகள் ) எடுத்திருக்கும் நிலைப்பாடுகளே முக்கியமானதாகும்.

வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் மகிந்த ராஜபக்ச வெல்லப்போகிறார் அல்லது மைத்திரி வெல்லப்போகிறார். ஆகவே வெல்பவரின் பக்கம் நிற்போம் என்கிற பார்வை மட்டும் , அரசியல் கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டுக்கு வெகு தூரமானது என்பதுடன் , அதிகார நலனுடன் சேர்ந்த எதிர்பார்ப்புடன் வெற்றியை மட்டும் ஆராதிக்கும் மனோ நிலையுமாகும்.

இன்னொரு வகையில் சொல்வதானால் மைத்திரி தோல்வி அடைந்து விட்டால், மகிந்தவின் ஜனநாயக விரோத,இனவாத, ஊழல்மிகு அரசாங்கமும் கொள்கையும் வெற்றி அடைந்து விட்டதாக கருதமுடியாது. உண்மையில் மகிந்த ஜனாதிபதித் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு முன் நடத்த எடுத்த முடிவே அவரது தோல்வியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவேயாகும்.

தானும் தனது குடும்பமும் நடாத்தி வருகின்ற பாசிச அரசாங்கம் தொடர்ச்சியாக அரசுக் கட்டிலில் வீற்றிருக்குமானால் , தனது பதவிக் காலத்தின் இறுதியில் (2016)தேர்தல் நடைபெற்றால் தன்னால் அதில் வெல்ல முடியாது எனக் கருதித்தான் இரண்டு வருடங்களுக்கு முன்னால் இத் தேர்தலை முன் கூட்டியே அறிவிக்க நேர்ந்தது.

இரண்டாவதாக, தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னிருந்த புற நிலைமைகளும் தனக்கு சாதகமாக இருப்பதாக கணக்குப் பண்ணினார். தனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டிணைய முடியாது, பலமான பொது வேட்பாளரை நிறுத்த முடியாது, அதிகாரத்தினையும் பலத்தினையும் காட்டி எதிர்க்கட்சி பிரதி நிதிகளை தேர்தல் நேரத்தில் மேலும் வாங்க முடியும், தனது கட்சி சர்வாதிகாரத்திற்குப் பயந்து தன்னுடன் இணைந்திருக்கும் யாரும் எதிரணிக்கு போக வாய்ப்பில்லை. இலங்கை சிங்கள தேசத்தின் மகாவம்ச காலத்து நவீன பாதுகாவலன் தான் என்பதால் சிங்கள மக்களிடம் தனக்கு உள்ள செல்வாக்கு வீழ்ச்சி அடைய வாய்ப்பில்லை . இவற்றுடன் அம்பு, படை ,சர்வ அதிகாரம், பணம் எல்லாம் உள்ளது . ஆகவே இலகுவில் வெற்றி பெறலாம் என்பதே மகிந்தவின் கணிப்பாக இருந்தது.

ஆனால் அந்த இலகு வெற்றி, ஒரு கனவு என்பது தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின் ஒவ்வொரு நாளும் மகிந்தவுக்கு முன் பெரும் சவாலாக மாறி இருக்கிறது. இப்போது இலகு வெற்றி அல்ல , வெற்றியை மிகக் கஷ்டமாகவே பெற வேண்டும் என்ற நிலைமைக்கு மகிந்தவையை இலங்கையின் அரசியல் நிலைமை தள்ளி இருக்கிறது.இது மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பாரிய நெருக்கடி.

இத் தேர்தலில் மகிந்தவின் இதுவரையான செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. யாரும் தன்னையும் , தனது அதிகார இருப்பையும் அசைக்க முடியாது என, அகங்காரமும் ஆணவமும் கொண்டு செயற்பட்ட இந்த பாசிச சர்வாதிகாரி ஆட்டம் கண்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

தனது அரசுக் கொள்கை மூலம் எந்த சிறுபான்மை தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கினானோ , அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை வெளிப்படையாகவும் , மறைமுகமாகவும் முன்னெடுத்தானோ அந்த மக்களிடம் தனக்கு வாக்குப் பிச்சை கேட்டு செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சிகளை உடைத்து பலரையும் தன்வசப்படுத்தலாம் என்கிற நிலை மாற்றப்பட்டு, தனக்கு கீழ் உள்ளவர்களை தன்னுடன் வைத்திருப்பதே சவாலாக மாறியது. சுருக்கமாக சொல்வதானால் தாக்குப் போரை நடாத்த வியூகம் வகுத்திருந்த மகிந்த, தற்காப்பு போரை முழு அளவில் முன்னெடுக்க வேண்டி வந்தது.

ஜாதிக ஹெல உறுமய, ஜே.வீ.பீ போன்ற சிங்கள தேசியவாதக் கட்சிகள் எடுத்த நிலைப்பாடு , சிங்கள மக்கள் மத்தியில் பரந்தளவில் இனவாதத்தினை தூண்டுவதற்கான வாய்ப்பினை குறைத்தது. இதில் ஜாதிக ஹெல உறுமயவின் மாற்றம் மகிந்தவால் போடப்பட்டிருந்த இனவாத அரசியல் பிரச்சாரத்தினை பாழடித்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின், முஸ்லிம் காங்கிரசின் ஆதரவை இப்போதே பெருமளவில் இனவாத அடிப்படையில் பிரச்சாரப்படுத்தும் மகிந்தவின் பிரச்சாரத்திற்கான மறுப்புக் குரலாக எதிர்பக்கம் ஜாதிக ஹெல உறுமய பயன்படுவது மகிந்தவுக்கு எதிர்பாராத அரசியல் சிக்கலாகும்.

தனது மதிப்பீடுகள் சார்ந்த கணிப்பீடுகள் ஒன்றன் பின் ஒன்றாக பொய்த்துப் போனதில் ஆட்டம் கண்டுள்ள மகிந்த, இப்போது முற்று முழுதாக நம்பி இருப்பது தன்னிடம் இன்னும் உள்ள அரச அதிகாரமும் அதன் பலம் என்பவற்றுடன் கிராமப் புற சிங்கள மக்களின் வாக்குகளிலுமாகும். இவை மகிந்தவுக்கு கை கொடுக்கும் என்றே நான் கருதுகிறேன்.எனது தனிப்பட்ட கருத்தின்படி தேர்தல் முடிவுகள் இரு வேட்பாளரிடையேயும் நெருக்கமாகவே அமைவதுடன் சிறிய பெரும்பான்மையுடன் மகிந்த வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றே நம்புகிறேன். ஆனால் மைத்திரி வென்றால் சர்வாதிகார, ஊழல்மிகு குடும்ப ஆட்சி தொலைந்தது, இலங்கையில் ஜனநாயகத்திற்கான சிறிய இடைவெளி கிடைத்துள்ளது என்பதில் மிக்க மகிழ்ச்சியே.

யாரும் இத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை பெற முடியாத நிலை இருப்பதை பல நோக்கர்கள் வெளிப்படுத்துகின்றனர். 2010 ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த பெற்ற வெற்றியை இம்முறை அடைய முடியாது. மகிந்த அந்த தேர்தலில் 57.88 சதவீத வாக்குகளை பெற்றார்.அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகா 40.15 சதவீத வாக்குகளை பெற்றார். மகிந்த 2010 இல் அடைந்த வெற்றியே அவரது மிகப் பெரிய வெற்றியாகும். இம்முறை மகிந்த 2005 இல் பெற்ற வாக்கினையே அல்லது அதற்கு கிட்டியே வாக்கினையே பெறுவதற்கு வழி உள்ளது. 2005 இல் மகிந்த 50.29 சதவீத வாக்குகளையும் ரணில் 48.43 சதவீத வாக்குகளையும் பெற்றனர். அத்தேர்தலில் மகிந்தவின் வெற்றி மயிரிழையிலேயே சாத்தியமானது.

தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளிலும், அவருடன் பொது அணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் வாக்குகளையும் கருத்திற் கொண்டு 51% தொடக்கம் 52% சதவீத வாக்குகளை இத் தேர்தலில் மைத்திரி பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். மைத்திரி வெல்வதற்கான வாய்ப்பு தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல, அது சிங்கள மக்களின் பெருமளவு வாக்கு ஆதரவுடன் பிணைந்தது. மகிந்தவின் வாக்கு வங்கியே சிங்கள மக்களில்தான் தங்கி உள்ளது. 72 சதவீத சிங்கள வாக்குகளில் மகிந்தவுக்கு அதிகப் பெரும்பான்மையான வாக்குகள் அளிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. சிங்கள மக்களின் வாக்குகளில் 40% தொடக்கம் 44% வீதத்தினை அவர் பெற முயல்வதுதான் மகிந்தவுக்கு சாதகமானது.

கணிப்பீடுகள் நிரூபணமாவதற்கு இரண்டு தினங்கள் காத்திருப்பது மிக சுலபமானதே. நான் நடந்துள்ள, நடந்து வருகின்ற மாற்றங்கள் பற்றியே அதிகம் ஆர்வம் காட்டுகிறேன். எனது ஈடுபாடும் மதிப்பீடுகளும் இதனையொட்டியதே.ஒரு அரசியல் கருத்தாளர் எழுதினார், ” மகிந்த ஆளும் குழுமத்தினை மிகக் குறைந்த விலையிலும் குறைந்த உழைப்பிலும் அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கான ஒரு சந்தர்ப்பமே இத் தேர்தலாகும். இதில் இருந்து மக்கள் தவறுவார்களேயானால், மகிந்த ஆளும் குழுமத்தினை அதிகாரத்தில் இருந்து அகற்ற மக்கள் பெரும் விலையினை கொடுக்க வேண்டிவரும் என்று.”இது இலங்கையின் எதிர்காலம் தொடர்பான மிகப் பெரும் உண்மை என நான் நம்புகிறேன்.

இப்பத்தி இந்த சந்தர்ப்பத்தில் எழுதப்படுவதற்கான பிரதான நோக்கம் இதுதான்.மைத்திரியை ஆதரிக்கும் பெருமளவிலானோர் அவரது வெற்றியைப் பற்றி மட்டுமே பிரச்சாரப்படுத்துகின்றனர். இதில் உள்ள இன்னுமொரு சுவராஸ்யம் மகிந்தவின் தோல்வியையும் காட்சிப்படுத்துகின்றனர். நாங்களும் மகிந்தவை நிராகரிப்போம், தோற்கடிப்போம் என எம்மால் முடிந்த அரசியல் பணிகளை செய்கிறோம்.எங்களுடன் வேலை செய்யும் பெருமளவிலான நண்பர்களுக்கும் நான் மேற் சொன்ன பார்வையே இருக்கிறது.

மைத்திரியுடன் பொது அணியில் அரசியல் அதிகாரத்திற்காக வேலை செய்பவர்களுக்கு , கட்சிகளுக்கு மேற் சொன்ன பிரச்சாரப் பாங்கும் தேவையும் இருக்கலாம். இந்த அதிகார வெளிக்கு வெளியில் அரசியல் மாற்றத்திற்கான வேலையில் ஈடுபடுவோருக்கு இதனைக் கடந்த பார்வையும் அவசியமானது. நான் முதலில் சொன்னது போல் வெற்றி , தோல்வியை கடந்தும் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது. அதனை சொல்லவே இக்குறிப்பினை எழுதுகிறேன்.

இத் தேர்தல் நிலைமையால் இலங்கையில் ஜனநாயகத்திற்கான குரல், அணிச்சேர்க்கை பலப்பட்டுள்ளது. இன, மத, மொழி வேறுபாடுகளை பெருமளவில் கடந்த கூட்டு சேர்க்கை உருவாகி உள்ளது. மகிந்தவின் ஆளும் குழுமம் உலுப்பபட்டுள்ளது. மகிந்தவின் சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் உணர்வுகள் வழியாக தெளிவாக வெளிப்பட்டுள்ளது.பாராளுமன்ற ஜனநாயகம் முன் கையெடுத்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கேள்விகுள்ளாக்கப்பட்டுள்ளது. மகிந்தவை எதிர்த்து போராடலாம் என்கிற பலமான நம்பிக்கை மக்கள் மத்தியிலும் , ஜனநாயக நிறுவனங்கள் மத்தியிலும் ஆழ விதைக்கப்பட்டுள்ளது. பலமான எதிர்க்கட்சி அரசியல் மீள உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாற்றத்திற்கான மக்கள் எழுச்சி வீறுகொண்டெழும் முக்கிய தருணம் இதுவென வர்ணிக்கலாம்.

இவைகள் மகிந்தவின் ஆளும் குழுமத்திற்கு எதிராக நிகழ்ந்துள்ள பலமானதும் முக்கியமானதுமான ஜன நாயக மாற்றங்கள் எனலாம்.மகிந்த இத் தேர்தலில் சிறிய பெரும்பான்மையில் வென்றாலும் கூட மகிந்தவால் இனி சர்வாதிகாரம் படைத்த மன்னனாக செயற்படவே முடியாது.. மகிந்த தோற்றால் அவருக்கும் அவரை பூஜிப்போருக்கும் வரலாற்றின் சமாதியும் அதற்கான முதல் அத்திவாரமே இத் தேர்தல்.

மாற்றத்திற்கான மக்கள் எழுச்சி தோற்காது… இதுவொரு நீண்ட பயணம். அனைத்து அடையாளங்களையும் தாண்டி அனைவரும் இணைந்து வேலை செய்ய வேண்டிய வாசலை இத் தேர்தல் நமக்கு திறந்திருக்கிறது .வெற்றியும் தோல்வியும் மட்டுமல்ல இங்கு முக்கியம் . ஒடுக்குதலுக்கு எதிரான தொடர்ச்சியான வேலை முறையையே சமகாலம் எம்மிடம் கோரி நிற்கிறது. அளவு, பண்புகளில் சிறு வேறுபாடு இருக்கலாம். நாம் ஒடுக்குவோருடன் இருக்கிறோமா அல்லது ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக பணி செய்வோருடன் இருக்கிறோமா என்பதே முக்கியமானதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுவானில் விமானத்தை உடைக்க முயன்ற இராணுவ வீரர்: நடந்தது என்ன?
Next post டி.கல்லுப்பட்டி அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது!!