கோபி அருகே மூதாட்டி வீட்டில் பணம் கொள்ளை!!
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பொம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 75). இவரது மகன் செல்வகுமார். வக்கீலான இவர் திருப்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சுப்புலட்சுமி தனக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் பொம்மநாயக்கன் பாளையத்தில் வசித்து வந்தார். மேலும் அவருக்கு துணையாக கண்ணம்மாள் (55) என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் சுப்புலட்சுமி வீட்டுக்குள் 3 கொள்ளையர்கள் புகுந்தனர்.
அவர்கள், அங்கு வீட்டில் தூங்கி்க்கொண்டிருந்த வேலைக்காரி கண்ணம்மாளை தட்டி எழுப்பினர். பின்னர் கொள்ளையர்கள், வீட்டின் முதலாளியம்மா, எங்கே இருக்கிறார்? என்று கத்தியை வைத்து கண்ணம்மாளை மிரட்டினர்.
இதனால் பயந்து போன அவர், சுப்புலட்சுமி உள்ளே தூங்கிக்கொண்டிருக்கிறார் என்று கூறினார்.
இதைதொடர்ந்து வேலைக்காரி கண்ணம்மாளை, கொள்ளையர்கள் 3 பேரும் சேர்ந்து, ஒரு தூணில் கயிற்றால் கட்டி வைத்தனர்.
அதன் பின்னர் சுப்புலட்சுமி, தூங்கிக்கொண்டிருந்த அறைக்கு கொள்ளையர்கள் சென்றனர்.
அங்கு சுப்புலட்சுமியை தட்டி எழுப்பினர். இதனால் திடுக்கிட்டு விழித்த அவர், கொள்ளையர்களை பார்த்து கூச்சல் போட்டார்.
அப்போது கொள்ளையர்கள், ‘‘வீட்டில் பணம், நகையை எங்கே வைத்துள்ளாய்? உடனே சொல்லி விடு, இல்லை, உன்னை குத்தி கொன்று விடுவோம்’’ என்று மிரட்டினர். ஆனால் சுப்புலட்சுமி வீட்டில் பணம். நகை ஒன்றும் இல்லை” என்று கூறினார்.
இதில் திருப்தி அடையாத கொள்ளையர்கள், வீட்டில் இருந்த பீரோ, மற்றும் மேஜைகளை திறந்து பார்த்தனர். அப்போது பீரோவில் பணம் ரூ.3 ஆயிரம் மட்டும் இருப்பதை பார்த்தனர். ஆனால் நகை எதுவும் இல்லை.
இதனால் பணத்தை மட்டும் கொள்ளையர்கள் எடுத்துக்கொண்டனர். பின்னர் பெரியதாக பணம் மற்றும் நகை எதுவும் சிக்காததால் கொள்ளையர்கள், கடும் ஆத்திரம் அடைந்தனர்.
உடனே அருகில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து சுப்புலட்சுமி முகத்தில் போட்டனர். இதில் முகத்தில் காயமடைந்த அவர் அலறினார். உடனே கொள்ளையர்கள் 3 பேரும் மின்னல் வேகத்தில் வீட்டை விட்டு தப்பி சென்று விட்டனர்.
சுப்புலட்சுமி ரத்தகாயத்துடன் கூச்சல் போட்டார். இதை கேட்டு அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
அங்கு வேலைக்காரி கண்ணம்மாள் தூணில் கட்டி போடப்பட்டு இருந்ததையும், சுப்புலட்சுமி உயிருக்கு போராடி கொண்டு இருந்ததையும் கண்டு அவர்கள் திடுக்கிட்டனர்.
உடனே சுப்புலட்சுமியை மீட்டு கோபியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சுப்புலட்சுமியிடம் விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து போலீஸ் சூப்பிண்டு சிபி சக்கரவர்த்தி கூறும் போது, “இன்று அதிகாலை 3 கொள்ளையர்கள், சுப்புலட்சுமி முகத்தில் அம்மிக்கல்லை போட்டு பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். வேலைக்காரி கண்ணம்மாள் வேலைக்கு சேர்ந்து சில தினங்கள் தான் ஆகி உள்ளது. மேலும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம்’’ என்று கூறினார்.
மூதாட்டியின் முகத்தில் அம்மிக்கல்லை போட்டு கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating