ஆன்லைன் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் 3 பேரை கொன்றேன்: கைதான கொலையாளி வாக்குமூலம்!!
நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடம் வேம்பத்தூர் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது 58). நெல்லை சுங்க இலாகா அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி வசந்தி (53). இவர்களது வளர்ப்பு மகள் அபிஸ்ரீ (12).
இவர்கள் 3 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டனர். வசந்தி, அபிஸ்ரீ ஆகிய இருவரும் வீட்டுக்குள்ளேயே பிணமாக கிடந்தனர். சுப்பையாவின் உடல் 2 நாட்களுக்கு முன்பு முப்பந்தல் அருகே அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது.
விசாரணையில் சுப்பையா வீடு அருகே வசித்த ராஜேந்திரன் என்ற மெரின் (29) என்பவர் தான் 3 பேரையும் கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் ஒருவரே 3 பேரையும் கொலை செய்ய முடியுமா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டதால் அவரது பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்று போலீசார் மெரினை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.
இதில் மெரின் தான் 3 பேரையும் கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
எம்.ஏ. பி.எட். பட்டதாரியான நான் ‘ஆன்லைன்’ வர்த்தகத்தில் ஈடுபட்டேன். நாகப்பட்டினம் பகுதியில் தங்கியிருந்து தொழில் செய்தேன். இதில் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. எனவே நாகப்பட்டினத்தில் இருந்து சொந்த ஊரான ஆரல்வாய்மொழிக்கு வந்தேன். சுப்பையா வீடு அருகே தங்கியிருந்தபடி இங்கும் ஆன்லைன் வர்த்தகத்தை தொடங்கினேன்.
துரதிருஷ்டம் காரணமாக இங்கும் எனக்கு நஷ்டமே ஏற்பட்டது. இதை சமாளிக்க என்ன செய்யலாம்? என்று யோசித்தபோது சுப்பையாவிடம் பல கோடி பணமும், தங்க பிஸ்கட்டுகளும் இருப்பதாக தகவல் கிடைத்தது. எனவே அவரிடம் நெருங்கி பழக முடிவு செய்தேன். இதற்காக ஒரு யுக்தியை கையாண்டேன்.
அதன்படி ஆன்லைன் வர்த்தகத்தில் எனக்கு ரூ.35 லட்சம் லாபம் கிடைத்ததாகவும், அந்த பணத்தை பாதுகாப்பாக வைக்கும்படி சுப்பையாவிடம் கூறினேன். அதற்காக இணையதளத்தில் போலி கணக்கு தொடங்கி எனக்கு ரூ.35 லட்சம் வருவாய் வந்ததுபோல தகவலை அனுப்பி அதனை சுப்பையாவிடம் காண்பித்தேன்.
அவரும் என்னை நம்பத்தொடங்கினார். அதன் மூலம் அவரிடம் இருக்கும் பணத்தை ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இன்னும் பல கோடி சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டினேன். அவரும் என்னை நம்ப தொடங்கினார்.
கடந்த 19–ந் தேதி அவரது வீட்டுக்குள் புகுந்து அங்கிருக்கும் நகை, பணத்தை கொள்ளையடித்து விட முடிவு செய்தேன். இதற்காக எனது நண்பர் ஒருவரை துணைக்கு அழைத்தேன். அவர் விவரத்தை அறிந்து கொண்டதும் அதற்கு உடன்பட மறுத்து விட்டார்.
எனவே நான் தனியாகவே சுப்பையா வீட்டுக்கு சென்று அவர்களை தீர்த்து கட்டி விட்டு பணத்தை அபகரிக்க முடிவு செய்தேன். அதன்படி சம்பவத்தன்று சுப்பையாவை வீட்டை விட்டு வெளியே வருமாறு அழைத்தேன்.
மோட்டார்சைக்கிளில் வெளியே வந்த அவருடன் நானும் ஏறிக்கொண்டேன். இருவரும் முப்பந்தல் நோக்கி சென்றோம். கண்ணுப்பொத்தை அருகே சென்றதும் நான் பின்னால் இருந்தபடி சுப்பையாவின் குரல் வளையை அறுத்தேன். அவர் பைக்கில் இருந்தபடியே கீழே விழுந்தார். அவரை அந்த இடத்திலேயே மீண்டும் குத்தி கொலை செய்து விட்டு உடலை அருகில் இருந்த புதரில் வீசினேன்.
பின்னர் அவரது செல்போனையும், மோட்டார்சைக்கிளையும் எடுத்துக்கொண்டேன். அந்த செல்போனில் சுப்பையாவின் மனைவி வசந்தியை தொடர்பு கொண்டு சுப்பையா பேசுவது போல் பேசினேன். வீட்டுக்கு வருவதாகவும், முன்பக்க கதவை திறந்து வைத்து விட்டு விளக்குகளை மட்டும் அணைத்து விடுமாறும் கூறினேன்.
வசந்தியும் அவ்வாறே வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்திருந்தார். விளக்கும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. நான் வீட்டுக்கு சென்றபோது வசந்தியும், அவரது வளர்ப்பு மகள் அபிஸ்ரீயும் சேர்ந்து நின்றனர். இருவரையும் ஒரே நேரத்தில் கொல்ல முடியாது என்பதால் அபிஸ்ரீயிடம் குடிக்க தண்ணீர் எடுத்து வரும்படி கூறினேன்.
அவர் சமையல் அறைக்கு சென்றதும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வசந்தியை கத்தியால் குத்திக்கொன்றேன். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அபிஸ்ரீயை வீட்டின் முன் அறையில் தடுத்து நிறுத்தி அவரையும் கத்தியால் குத்திக்கொன்றேன்.
இருவரும் பிணமானதும் வீட்டுக்குள் சென்று ரகசிய அறைகளை திறந்து பார்த்தேன். வீட்டுக்குள் பாதாள அறைகள் இருக்கிறதா? என்றும் பார்த்தேன். படுக்கை விரிப்புகள், பூஜை அறை, பீரோக்கள், லாக்கர்கள், அனைத்தையும் திறந்து பார்த்தேன். எதிலும் சல்லிக்காசு கூட இல்லை. வசந்தியின் 15 பவுன் நகைகள் மட்டுமே கிடைத்தது. அதனை மட்டும் எடுத்துக்கொண்டு சுப்பையாவின் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து வெளியேறினேன்.
மறுநாள் போலீசார் சுப்பையா வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தியபோது நானும் அருகில் நின்று வேடிக்கை பார்த்தேன். ஆனால் தனிப்படை போலீசார் என்னை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
போலீசார் மெரினிடம் இருந்து 15 பவுன் நகைகளை கைப்பற்றினர். அவற்றையும், மெரினையும் இன்று நிருபர்கள் முன்பு அடையாளம் காட்டினர். அப்போது மெரின் கண்ணீர் விட்டு கதறி அழுதார். பணத்துக்கு ஆசைப்பட்டு கொலையாளி ஆகி விட்டதாக கூறினார்.
கொலையாளி சிக்கியது பற்றி போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறும்போது 3 பேரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் என்ற மெரின் தொடர்பான வழக்கை விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்வோம். குற்றப்பத்திரிகையை துரிதமாக தயாரித்து வழக்கை விரைவில் முடித்து குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்வோம்’ என்றார்.
Average Rating