சாவிலும் இணைபிரியாத தம்பதி: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பரிதாப சாவு!!
ஸ்ரீகாளஹஸ்தி 17–வது வார்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அருகில் வசித்து வந்தவர் சித்தய்யா (வயது 67). இவரின் மனைவி அல்லூரம்மா (62). கணவன், மனைவி இருவரும் வயது முதிர்ந்த நிலையிலும் ஒருவருக்கொருவர் அன்போடும், இணைபிரியாமலும் வாழ்ந்து வந்தனர். இருவரும், கடந்த சில ஆண்டுகளாக ஆந்திர அரசின் முதியோர் உதவித்தொகை பெற்று வந்தனர். அப்போது அவர்களுக்கு தலா ரூ.200 வழங்கப்பட்டது.
சந்திரபாபுநாயுடு ஆட்சிக்கு வந்ததும், முதியோர் உதவித்தொகை 200 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலம் முழுவதும் முதியோர் உதவித்தொகை பெறுவோர் கணக்கெடுக்கப்பட்டு தகுதியில்லாதவர்களின் பெயர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
அதன் காரணமாக சித்தூர் மாவட்டத்தில் சில இடங்களில் கடந்த 2 மாதங்களாக சித்தய்யா, அல்லூரம்மா உள்பட பலருக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.
முதியோர் உதவித்தொகையை நம்பி வாழ்ந்து வந்த கணவன், மனைவி இருவரும் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. குடும்ப கஷ்டத்தால் அவர்கள் சரியான முறையில் சாப்பிட கூட முடியவில்லை. இதனால் சித்தய்யாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 18–ந்தேதியில் இருந்து முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து ஸ்ரீகாளஹஸ்தி தலைமை தபால் நிலையத்தில் கடந்த 20–ந்தேதி முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தகவலை கேள்விப்பட்ட கணவன், மனைவி இருவரும் கடந்த 20–ந்தேதி காலை தபால் நிலையத்துக்கு சென்று மாலை வரை முதியோர் உதவித்தொகைக்காக வரிசையில் மாலை வரை காத்திருந்தனர்.
அவர்களின் பெயரை பரிசீலனை செய்தபோது, பட்டியலில் பெயர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பினர். அன்று சரியாக சாப்பிடாமலும், வரிசையில் வெகுநேரம் காத்திருந்ததாலும் சித்தய்யாவுக்கு மேலும் உடல்நலம் குன்றியது. அவர், ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.
தன்னுடைய கணவர் உறங்கும்போது வழக்கம்போல் படுக்கையில் குறட்டை சத்தம் விடுவார். ஆனால் குறட்டை சத்தமும் எழவில்லை. உடல் அசைவுகளும் இல்லாததால் கணவர் படுத்த படுக்கையிலேயே மரணம் அடைந்து விட்டதாக உணர்ந்த மனைவி அல்லூரம்மா தனது கணவரின் மேல் படுத்து அழுது புலம்பினார்.
தகவலை கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் விரைந்து வந்து சித்தய்யாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். சித்தய்யா மரணம் அடைந்ததால் மீளா துயரத்தில் இருந்த அல்லூரம்மா நேற்று அதிர்ச்சியில் உறவினர்கள் மத்தியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.
வாழ்க்கையில் இணை பிரியாமல் வாழ்ந்து வந்த கணவன், மனைவி இருவரும், சாவிலும் இணை பிரியாமல் மரணம் அடைந்ததை எண்ணி பெரும் சோகத்தில் மூழ்கினர்.
Average Rating