ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் தலைவிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – லோரண்ஸ்!!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே என அந்தக் கட்சியின் தலைவி சாந்தினி சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (19) மாலை தலவாக்கலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை பொறுப்பாளர் வே.இராதாகிருஷ்ணன் அரசாங்கத்திலிருந்து விலகி எதிரணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள நிலையில், மலையக மக்கள் முன்னணியின் தலைவி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
அங்கு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு சாந்தினி சந்திரசேகரன் தெரிவித்த பதில்கள்,
கேள்வி – மலையக மக்கள் முன்னணி கட்சியின் ஆதரவு யாருக்கு என ஏற்கனவே தெரிவித்திருந்தார்கள். ஆனால் மறுபடியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவிக்கின்றீர்கள் இதற்கான காரணம் என்ன?
பதில் – எங்களது கட்சி ஆரம்பத்திலேயே எடுத்த முடிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவிப்பது என்பது தான் இதற்காக நாங்கள் ஜனாதிபதியை நேரில் சந்தித்து எங்களுடைய கட்சியினூடான சில கோரிக்கைகளையும், மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாகவும் அவருக்கு விளக்கமாக எடுத்து சொன்னோம்.
ஜனாதிபதியும் நாங்கள் வைத்த கோரிக்கைகளுக்கும், மக்களின் பிரச்சினைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அந்தவகையிலேயே என்னுடைய நிலைப்பாடு இறுதி வரைக்கும் அவருக்கு ஆதரவளிப்பது.
கேள்வி – கட்சியின் பொது செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த தீர்மானம் தவறானதா? அவர்கள் உங்களிடம் அனுமதி பெறாமல் எடுத்த தீர்மானமா?
பதில் – சில காரணங்களுக்காக எதிரணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஒரு கொள்கையாக கொண்டு வந்தார்கள். ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை காரணம் இவ்வாறான கட்சி தாவல்கள் தேர்தல் காலத்தில் இடம்பெறுகின்றமை குறித்து எனக்கு உடன்பாடு இல்லை. எனினும் கட்சியினுடைய உயர் மட்ட குழு ஒன்றிணைந்து ஒரு முடிவு எடுத்தார்கள்.
ஆனாலும் அவ்வப்போது என்னுடைய கருத்துக்களையும் அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் எடுத்த அந்த முடிவுக்கு தடை போட முடியாமல் இருந்தது. இருந்தாலும் என்னுடைய முடிவில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
கேள்வி – மலையக மக்கள் முன்னணி கட்சியின் பலம் பொது செயலாளரிடம் இருக்கின்றதா? அல்லது தலைவியாகிய உங்களிடம் இருக்கின்றதா?
பதில் – நிச்சயமாக என்னிடம் தான் பலம் இருக்கின்றது. பொதுசெயலாளர் என்ற வகையில் அவர் அவருடைய கடமைகளை மேற்கொள்கின்றார். எங்களுடைய யாப்பின் படி சில அதிகாரங்கள் அவரிடம் இருந்தாலும் கூட கட்சியின் முழு அதிகாரமும் தலைவியாகிய என்னிடமே இருக்கின்றது.
கேள்வி – நீங்கள் இரண்டு முடிவில் இருக்கின்றீர்கள் அதாவது அவர்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், நீங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் இதனால் கட்சியில் பிளவு ஏற்படுமா?
பதில் – நிச்சயமாக இல்லை. அப்படியான பிளவுகளுக்கும், பிரிவுகளுக்கும் நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. இதன் காரணமாகத்தான் மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களிடம் கலந்துரையாடி நான் எனது நிலைப்பாட்டு பற்றி விளக்கமளித்தேன்.
அத்தோடு இந்த தேர்தலை வைத்து நாங்கள் எதனையும் தீர்மானிக்க முடியாது. இது நாட்டில் நடக்கின்ற ஒரு ஜனாதிபதி தேர்தல் இதில் எங்களின் கட்சியினுடைய நிலைப்பாட்டைதான் அவதானிக்க வேண்டும்.
அந்தவகையில் என்னுடைய கட்சியின் எதிர்கால நன்மையை கருதி அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொடுத்த ஆதரவில் நான் உறுதியாகயிருக்கின்றேன்.
கேள்வி – உங்களுடைய மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களுக்கு எதுவும் கூற விரும்புகின்றீர்களா?
பதில் – ஆமாம். ஆதரவாளர்கள் குழப்பமடைய தேவையில்லை. தலைவர் சந்திரசேகரனின் கொள்கையை மதிக்கின்றவர்கள், அவரின் மீது மரியாதை வைத்திருப்பவர்கள் எல்லோரும் என்னுடைய கருத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.
அந்தவகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன். எந்தவிதமான பிரிவுக்கோ, பிளவுக்கோ எங்களுடைய கட்சியில் நீங்கள் இடமளிக்க கூடாது என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டுமென்பதையும் கேட்டுக்கொள்கின்றேன்.
இதேவேளை இவ்விடயம் தொடர்பாக மலையக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் ஏ.லோரண்ஸிடம் தொடர்பு கொண்டு வினவியபோது,
தீடிரென கூட்டம் ஒன்று கூட்டி கலந்துரையாடி இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவிப்பது என்பது ஒரு நியாயமான செயல் அல்ல.
பொது செயலாளராகிய எனக்கும் இது சம்பந்தமாக எதுவும் அறிவிக்கவில்லை. இது சட்டவிரோதமான ஒரு செயலாகும். ஆரம்பத்தில் எதிரணிக்கு ஆதரவு தெரிவிப்போம் என தீர்மானம் எடுத்ததையடுத்து இப்படி தீடிரென மாறுவது குறித்து நான் கவலையடைகின்றேன்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவி எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த பின் இப்படி தாவியமை குறித்து ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக பொது செயலாளர் ஏ. லோரண்ஸ் தெரிவித்தார்.
Average Rating