வளமான எதிர்காலத்திற்கு வடக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்!!

Read Time:6 Minute, 14 Second

1617859878unnamedஇலங்கையில் முப்பதாண்டுகால இருண்ட யுகத்திற்கு முடிவுகட்டி, அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள வேளையில், நாடு பின்னோக்கிச் செல்வதற்கு இடமளிக்க முடியாது என்றும், மேலும் வளம் நிறைந்த ஓர் எதிர்காலத்தை நோக்கி இலங்கை முன்னேறிச் செல்வதற்கு வடபகுதி மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையில் நடைபெற்ற, ஜனாதிபதி தேர்தலுக்கான வட மாகாணத்திற்கான முதலாவது பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இனவாதம் பேசுவதாகக் குற்றம்சாட்டியுள்ள ஜனாதிபதி, இனவாத அரசியல் மிக மிக மோசம் என்றும் எமக்குத் தேவை சகோதர பாசம் என்றும் தெரிவித்துள்ளார்.

“இனவாதம் பேசும் டிஎன்ஏ தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில். உங்களுடைய பிள்ளைகள்தான் இங்கு இருக்கின்றார்கள். அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும். கடந்த முறை எனக்கு நீங்கள் வாக்களித்தீர்கள். வளமான அபிவிருத்தியை நாங்கள் உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றோம். எதிர்காலத்திலும் வளமான அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு நீங்கள் எனக்கு ஆதரவளிக்க வேண்டும்” என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

முப்பது ஆண்டுகள் யுத்தம் நடைபெற்றது என்றும் ஆனால் ஐந்து ஆண்டுகளாகவே அபிவிருத்திச் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்த அவர், இந்த ஐந்து ஆண்டுகாலத்தில் வடகுதிக்கு பெருமளவு நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் பல அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி, சுகாதாரம், சாலை அபிவிருத்தி என பல துறைகளிலும் இன்று வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

யுத்த காலத்தைப் போலல்லாமல், இப்போது யாரும் நாட்டின் எந்தப்பகுதிக்கும் சென்று வரலாம் என்றும் உயிர்ப் பாதுகாப்பு குறித்து அச்சமடையமத் தேவையில்லை என்றும் இருபத்தேழு ஆண்டுகளின் பின்னர் வடமாகாணத்தில் ஒரு மாகாண அரசுக்கான தேர்தலை தாங்களே நடத்தினோம் என்றும் வடமாகாண சபைக்கென பெருமளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

“கடந்து போன இருண்ட யுகத்திற்கு திரும்பிச் செல்வதற்கு அனுமதிக்க முடியாது. குரோதம் நிறைந்த அந்தக் காலத்தை மறந்து, எல்லா மத மக்களும், எல்லா இன மக்களும், நாம் எல்லோரும் ஒன்றுபட வேண்டும். ஒருவர் மற்றவர்களுடைய கலாசாரத்தை, மதத்தை மதித்து வாழ வேண்டும். அதற்காக எனக்கு ஆதவரளிக்க வேண்டும்” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.

தற்போதுள்ள அமைதியான நிலைமையை இல்லாமல் செய்வதற்கு சிலர் முயற்சிப்பதாக குற்றம் சுமத்திய அவர், “தலைவர்கள் பலர் வருவார்கள், பலதையும் கூறுவார்கள், அவர்கள் இங்கு வசிப்பவர்களல்ல, அவர்களுடைய பிள்ளைகள் வெளிநாடுகளில் படிக்கின்றார்கள், எனவே இங்கு வருபவர்கள் உங்கள் மீதோ உங்கள் பிள்ளைகள் மீதோ அக்கறை கொள்ளமாட்டார்கள். இந்த நாட்டில் உள்ள எல்லா இன மக்களையும் நாட்டில் உள்ள எல்லா சிறுவர்களையும் பாதுகாக்க வேண்டிய உரிமை எனக்குத்தான் இருக்கின்றது என்று நான் நம்புகிறேன். எனவே வளமான ஓர் எதிர்காலத்தை நோக்கி நீங்கள் எல்லோரும் என்னுடன் கரம் கோர்த்துச் செயற்படுவதற்கு முன்வர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

முள்ளியவளையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் கிளிநொச்சியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, யுத்தகாலத்தின்போது இழந்திருந்த காணிகளையும் விடுதலைப்புலிகளின் வங்கிகளில் அடகு வைத்திருந்த தங்க நகைகளையும் தமது அரசு மக்களுக்கு மீண்டும் திருப்பிக் கொடுத்ததைப் போன்று வடபகுதி மக்களுக்கு என்னென்ன தேவையோ அவற்றையெல்லாம் வழங்குவதற்குத்தாம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

வடமாகாண சபையின் ஊடாக வடபகுதி மக்கள் நன்மையடைய வேண்டும் என்றும், அதற்கு பெருமளவு நிதியைத் தாங்கள் ஒதுக்கியிருப்பதாகவும், அவற்றின் மூலமான நன்மைகள் வடபகுதி மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரவிந்தடி சில்வாவின் வீட்டில் கொள்ளையிட்டவர் சிக்கினார்!!
Next post தபால் ஊழியர்களுக்கு ஜனவரி 8 வரை விடுமுறை கிடையாது!!