முதல் சுற்றில் தோல்வி…!!
முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, திடீரென தாம் எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்ததோடு, அதுவரை ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்த ஜாதிக ஹெல உறுமய கட்சித்தலைவர்களும் எதிர்க்கட்சிகளுக்காக பொது வேட்பாளர் ஒருவரை தேடி அலைந்த மாதுளுவாவே சோபித தேரரும் ஊடகங்களினால் மறக்கப்பட்டுவிட்டதைப் போலாகிவிட்டார்கள்.
அதுவரை ஜனாதிபதித் தேர்தலின் போது என்ன செய்வோமோ என்று நாளுக்கொரு கதையைக் கூறிக் கொண்டிருந்த எதிர்க் கட்சிகள், இப்போது வெற்றி மனப்பாங்கோடு காணப்படுகிறார்கள். அதுவரை தனிக் குதிரையின் போட்டியைப் பற்றி கனவு கண்டுகொண்டிருந்த ஆளும் கட்சியினர் இப்போது திகைதத்துப் போய் இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக உறுதியானதோர் வேலைத்திட்டம் இல்லாத காரணத்தால், ஒருவரோடு ஒருவர் சண்டை பிடித்துக் கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்கள், திடீரென ஏற்பட்ட இந்த திருப்பத்தை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டு சகல கருத்து வேறுபாடுகளையும் தீர்த்துக் கொண்டதைப் போல் இருக்கிறார்கள்.
ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறுவதற்கு நிச்சயிக்கப்பட்டு இருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்காக, இரு பிரதான போட்டியாளர்களும் இதன் படி தீர்மானிக்கப்பட்டுவிட்டார்கள். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிரணி சார்பில் மைத்திரிபால சிறிசேனவுமே அவ்வாறு களத்தில் இறங்கியிருக்கிறர்கள்.
இப்போது இரு சாராருக்கும் இடையே கொள்கை மற்றும் சித்தாந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது சில நாட்களில் வெறும் வாய் வீச்சுகளாகவும் தனிப்பட்ட தாக்குதல்களாகவும் மாறலாம். அதேவேளை, வதந்திகளில் கூறப்படுவதைப் போல் கட்சித் தாவல்களும் இடம்பெறலாம். அவை இந்தக் கொள்கை பற்றிய விவாதத்தை முற்றாக மூடி மறைத்து, வாக்காளர்களை குழப்பிவிடலாம். இந்த நிலையில் வாக்காளர்கள் அலை எங்கு வீசுகிறதோ அங்கு அடித்துச் செல்லப்படலாம்.
தற்போதைய கொள்கை மாற்றம், சித்தாந்தப் போராட்டத்தில் ஆளும் கட்சி ஏற்கெனவே தோல்வியடைந்துள்ளது என்றே கூற வேண்டும். அதேவேளை, ஆளும் கட்சியிலேயே பலர் இந்த தோல்வியை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.
மைத்திரிபால சிறிசேன, கடந்த 21ஆம் திகதி ஆளும் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள், ஒரு பிரதி அமைச்சர் மற்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களோடு, கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாடொன்றில் தாம் எதிர்க் கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக திடீரென அறிவித்தார். ஐ.தே.க.வின் உதவியோடு மைத்திரிபாலவை இந்தப் போட்டியில் நிறுத்துவதற்கான இத் திட்டத்தை வகுப்பதில் முன்னணியில் செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் அதில் கலந்து கொண்டார்.
மைத்திரிபால, அப்போது தமது கொள்கைகளையும் திட்டங்களையும் விவரித்தார். தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 100 நாட்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வேன் என்றும் தற்போதைய தேர்தல் முறையை இரத்துச் செய்து நாட்டுக்கு பொருத்தமான தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவதாகவும் 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இரத்துச் செய்து 17ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீண்டும் அமுலாக்கி சுதந்திர ஆணைக்குழுக்களை மீண்டும் செயற்படுத்துவதாகவும் ஊடக சுதந்திரத்தை உறுதிப் படுத்துவதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய ஆட்சியின் கீழ், அமைச்சர்கள் அதிகாரமற்ற பொம்மைகளாக மாறியிருப்பதாகவும் நாட்டின் முழுப் பொருளாதாரமே ஒரு குடும்பத்தின் கையில் இருப்பதாகவும் நாட்டில் ஊழல் மலிந்திருப்பதாகவும் சட்டத்தின் ஆதிக்கம் முடக்கப்பட்டுள்ளதாகவும் குடும்ப ஆட்சி, போதைப் பொருட்கள் ஆகியன ஸ்தாபனமயமாக்கப்படுள்ளதாகவும் அங்கு உரையாற்றிய, மைத்திரிபாலவுடன் அரசாங்கத்திலிருந்து விலகிய, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் ஹெல உறுமயவினதும் பிவிதுரு ஹெட்டக் (தூய நாளை) அமைப்பினதும் தவிசாளர் அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோர் தமது இத்திட்டத்தை வகுக்க பங்களிப்பு வழங்கியதாக கூறிய மைத்திரிபால, தாம் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் விக்கரமசிங்கவை பிரதமராக நியமிப்பதாக கூறினார். 100 நாட்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வது உட்பட ஏனைய அரசியலமைப்பு மாற்றங்களை செய்துவிட்டதன் பின்னர் அரசியல் கட்சிகள் அரச நிர்வாகத்தைப் பற்றி முடிவொன்றை எடுக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இக் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டத்தை ஆளும் கட்சி வெற்றிகரமாக எதிர்கொள்வதாக தெரியவில்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வது தொடர்பான விடயத்தைப் பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்காக நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் அதில் கலந்து கொள்ளாததால், அந்த நோக்கத்தை அடைய முடியாது போய்விட்டதாகவும் கூறியிருக்கிறார்.
உண்மையிலேயே தெரிவுக்குழுவொன்றின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யும் எண்ணம் இருந்தால், அரசாங்கம், 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அம் முறையை மேலும் பலப்படுத்தி, ஜனாதிபதியின் அதிகாரங்களை ஓரளவுக்காவது கட்டுப்படுத்திய அரசியலமைப்புச் சபையையும் இரத்துச் செய்து, நிறைவேற்று ஜனாதிபதி எத்தனை முறையேனும் பதவியில் இருக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்குமா என்ற கேள்வி இங்கு எழுகிறது.
மறுபுறத்தில் தமது தேர்தல் வாக்குறுதியொன்றை நிறைவேற்ற தெரிவுக் குழுக்கள் எதற்கு? அதற்குத் தான் தேர்தலில் மக்கள் ஆணையே கிடைத்திருக்கிறதே.
தமிழ்த் தேசியக் கூட்மைப்பும் புலம் பெயர் தமிழர்களும் இன்னமும் தமிழீழத்துக்;காக செயற்பட்டு வருவதால், இப்போது நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய முடியாது என அண்மையில் ஜனாதிபதி கிளிநொச்சியில் ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார். அவ்வாறாயின் அதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் இந்தத் தெரிவுக்குழுவை ஏன் நியமிக்க வேண்டும்?
மற்றொரு முக்கிய விடயம் என்னவென்றால், தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கு மேலாகியும் அது நிறைவேற்று ஜனாதிபதி முறையையும் இரத்துச் செய்வதற்காக நியமிக்கப்பட்டதாக இப்போது தான் அரசாங்கம் கூறுகிறது. இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அது நியமிக்கப்பட்டதாகவே இதுவரை கூறப்பட்டது.
இதேவேளை, தாமும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதை விரும்புவதாகவும் ஆனால், தாம் அதற்காக அரசாங்கத்துக்குள்ளிருந்தே போராடுவதாகவும் சில அமைச்சர்கள், ஊடகவியலாளர்கள் மாநாடொன்றை கூட்டி கூறியிருந்தனர். அதேவேளை, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இப்போது இரத்துச் செய்வது பொருத்தமானதல்ல என்றும் அவர்கள் கூறினர்.
அரசாங்கததுக்குள் இருந்தே நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்காக போராடுவதாகக் கூறும் இந்த அமைச்சர்கள் தான் 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள வாக்களித்தார்கள். அதேவேளை, தாமும் இம் முறையை இரத்துச் செய்ய விரும்புவதாக இருந்தால் ஜனாதிபதியும் அந்த நோக்கத்துக்காக தெரிவுக் குழுவொன்றையே நியமித்திருந்தால் எதிர்க்கட்சிகளும் இம் முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்று கூறுவதாக இருந்தால் இந்த அமைச்சர்கள் யாரை எதிர்த்து போராடப் போகிறார்கள்?
இம் முறையை இரத்துச் செய்ய தெரிவுக் குழுவொன்றை நியமித்திருப்பதாக ஜனாதிபதியே கூறும் போது, இந்த முறையை இப்போது இரத்துச் செய்யக் கூடாது என இந்த அமைச்சர்கள் கூறுவது நகைப்புக்குரியதாகவே தெரிகிறது. அந்த வகையில் இந்த நோக்கத்துக்காக ஜனாதிபதி தான் இவர்களை எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது.
அமைச்சர்கள் சுயமாக இயங்க முடியாது என்ற மைத்திரிபாலவின் குற்றச்சாட்டையும் இதுவரை எந்தவொரு அமைச்சரும் மறுக்கவில்லை. மாறாக அவர்களிலும் சிலர் ஊடகவியலாளர்கள் மாநாடுகளை நடத்தி தமக்கும் பிரச்சினை இருப்பதாகவும் தாமும் மனம் நொந்து இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
தமது பதவிக்காலத்தில் நான்காண்டுகள் முடிவடைந்தவுடன் மற்றுமொரு ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியுமா என ஜனாதிபதி கடந்த 5ஆம் திகதி, உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை கோரியதை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான சட்டத்தரணியான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் ஊடகங்கள் மூலமாகவே அறிந்து கொண்டார் என்று மைத்திரிபால கூறியதை அமைச்சர் சில்வா இன்னமும் மறுக்கவில்லை.
ஊழலைப் பற்றி மைத்திரிபாலவும் ஐ.தே.க.வும் சுமத்தும் குற்றச்சாட்டுகளையும் ஆளும் கட்சியில் எவரும் மறுப்பதில்லை. மாறாக அவர்களும் அதனை உறுதிப்படுத்துகிறார்கள். அரசாங்கத்தில் இருந்து விலகியவர்களின் ‘பைல்கள்’ (கோப்புகள்) தம்மிடம் இருப்பதாக ஜனாதிபதி கூறியிருந்தார். இவை அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கூறுவதைப் போல் அமைச்சர்களின் ‘பேர்சனல் பைல்கள்’ அல்ல. தம்மிடம் விலகிச் சென்றவர்களின் ஊழல்களைப் பற்றிய கோவைகள் இருப்பதையே ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதைப் பற்றி அரசாங்கத்தில் இன்னமும் இருக்கும் சிறு ஏற்றுமதிப் போக அபிவிருத்தி அமைச்சர் ரெஜினோல்ட் குரே குறிப்பிடுகையில், அவ்வாறு ‘பைல்கள்’ இருப்பதாக இருந்தால் அவற்றை வைத்துக் கொண்டிருந்தமை தவறு எனக் கூறியிருந்தார். ‘பைல்கள்’ இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே அவர் கூறுகிறார் போலும். விலகிச் செல்வோர் ‘பைல்களை’ கண்டு பயப்படப் போவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆளும் கட்சியினரின் ஊழல்களைப் பற்றி விசித்திரமான கருத்தொன்றை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.
கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலளர் மாநாடொன்றின் போது உரையாற்றிய அவர,; ஐ.ம.சு.கூ.காரர்கள் போதியளவு சம்பாதித்திருப்பார்கள் என்றும் எனவே அவர்கள் இனி மேல் ஊழல்களில் ஈடுபடுவார்கள் என்று அச்சப்படத் தேவையில்லை என்றும் ஐ.தே.க. பதவிக்கு வந்தால் அவர்கள் புதிதாக ஊழல்களை ஆரம்பிப்பார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். ஐ.ம.சு.கூ. அரசாங்கத்தின் ஊழல்களை இவ்வளவு அழகாக அமைச்சர் ஒருவரே ஏற்றுக் கொண்ட ஒரு சந்தர்ப்பம் வேறில்லை.
இவ்வாறு பார்க்கையில், நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யாமை, அமைச்சர்களை பொம்மைகளாக்குதல் மற்றும் ஊழல் ஆகிய எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் முன் அரசாங்கம் தடுமாறுவதாகவே தெரிகிறது.
மறுபுறத்தில் மைத்திரிபாலவையும் எதிர்க்கட்சிகளையும் பார்த்து அரச தலைவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அவ்வளவாக எடுபடுவதாகவும் தெரியவில்லை. மைத்திரிபால தாம் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடப் போவதாக அறிவித்தவுடன் ஊடகவியலாளர்கள் மத்தியில கருத்து தெரிவித்த சில அமைச்சர்கள் இது வெளிநாட்டு சதி என்றார்கள். இதற்கு முன்னர் மற்றவர்களைப் பார்த்து இதே குற்றச்சாட்டை சுமத்திய ஹெல உறுமய தலைவர்களே இப்போது இதற்கு பதிலளிக்க முன்வந்திருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் அரசாங்கத்தில் இருந்து முற்றாக விலகவும் இல்லை.
கடந்த திங்கட்கிழமை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன் மக்களை சந்தித்த ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் கடந்த வாரம் அமைச்சர் பதவியிலிருந்து விலகியவருமான சம்பிக்க ரணவக்க, இந்தக் குற்றச்சாட்டைப் பற்றிக் குறிப்பிடுகையில், புலிகளைக் காட்டி மான்களை கொல்ல இடமளிக்க முடியாது என்றார்.
அனேகமாக வெளிநாட்டு சதிகளைப் பற்றி குறிப்பிடும் மக்கள் விடுதலை முன்னணியும் இந்தக் குற்றச்சாட்டை ஏளனம் செய்கிறது. இப்போது இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதற்காக, அரசாங்கம் இதற்கு முன்னர் எடுத்ததற்கெல்லாம் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியிருக்கக் கூடாது என்று ம.வி.மு. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஏளனமாக கூறியிருந்தார்.
எனவே, இந்த வாதப்பிரதிவாதங்களை கவனிக்கும் போது கொள்கை மற்றும் சித்தாந்தப் போராட்டத்தில் அரசாங்கம் தோல்வியடைந்திருப்பதாகவே தெரிகிறது. ஆனால், யதார்த்தம் என்னவென்றால் தேர்தல்களின் போது இது போன்ற கொள்கை மற்றும் சித்தாந்தப் பிரச்சினைகள் சாதாரண வாக்காளர்களின் மனப்போக்கை அவ்வளவாக வழிநடத்துவதில்லை என்பதே. மக்கள் இவற்றை முக்கிய விடயங்களாக கருதுவதில்லை என்பதே உண்மையாகும். இந் நாட்டு படித்தவர்களும் இவற்றை கவனத்தில் கொண்டு வாக்களிப்பதில்லை.
இதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை எடுத்துக் காட்டலாம். தமிழ் மக்களுக்கு தனியான பிரச்சினைகள் இருப்பதாகவோ அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்பதையோ பெரும்பாலான சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
ஆனால், தமிழ் மக்களுக்கு தனியான பிரச்சினைகள் இருப்பதாகவும் அவற்றை தீர்க்க அதிகார பரவலாக்கலை முறையாக செயற்படுத்தப் போவதாகவும் கூறி, அந்த நோக்கத்துக்காக தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் பேச்சுவார்ததைகளையும் ஆரம்பித்து, 1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சந்திரிகா குமாரதுங்க, அத் தேர்தலில் பெரும்பாலான சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்று 62 சதவீத வாக்குகளுடன் வெற்றியடைந்தார்.
அந்தத் தேர்தல் பிரசார காலத்தில், புலிகளின் குண்டுத் தாக்குதலால் ஐ.தே.க. வேட்பாளர் காமினி திஸாநாயக்க உட்பட அறுபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருந்த நிலையிலேயே சிங்கள மக்கள் சந்திரிகாவை அவ்வாறு ஆதரித்தனர். அந்தவிடத்தில் கொள்கை மற்றும் சித்தாந்தங்களுக்கு இடமிருக்கவில்லை. அதைத் தான் அரசியல் அலை என்பார்கள்.
கடந்த மத்திய, தென், மேல் மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தல்களின் போது ஆளும் ஐ.ம.சு.கூ.வின் வாக்கு வங்கி வேகமாக சரிந்து வருவது காணக்கூடியதாக இருந்தமை உண்மை தான். ஆனால், மைத்திரிபாலவின் செல்வாக்கால் ஸ்ரீ.ல.சு.க.வின் வாக்குகளில் குறிப்பிடத்தக்க ஓர் அளவை பெற்றுக் கொள்ளாவிட்டால் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் இத் தேர்தலில் வெற்றிபெறுவது சந்தேகமே.
இந்த விடயத்தில் ‘ரணிலை கதிரையில் அமர்த்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள் வாக்களிக்க வேண்டுமா’ என்று அரசாங்கத்தின் தலைவர்கள் முன்வைக்கும் வாதமானது எதிர்க் கட்சிகளுக்கு பெரும் சவாலாகவே அமையும். ஏனெனில், அந்த வாதமானது பெரும்பாலான சுதந்திரக் கட்சிக்காரர்களின் மனதை குழப்பிவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நாட்டில் சாதாரண நிலைமை இருந்தால் மட்டுமே இந்த விடயங்கள் தேர்தல் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும். அவ்வாறில்லாது இனிவரப்போகும் வாரங்களில் இம்பெறுவதாகக் கூறப்படும் கட்சித் தாவல்கள் மற்றும் வன்முறைகள் மூலம் போலி அரசியல் அலையொன்றும் உருவாகலாம். அவ்வாறாயின் இந்தக் கொள்கைகள் மற்றும் வாதப்பிரதிவாதங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு மக்கள் அந்த அலையில் அடித்துச் செல்லப்படவும் கூடும்.
Average Rating