எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால கடந்து வந்த பாதைகள்!!

Read Time:5 Minute, 2 Second

530354858Untitled-1பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேன 1951-ம் ஆண்டு, செப்டம்பர் 3-ம் திகதி பொலன்னறுவையில் பிறந்தார்.

இவர்களது குடும்பம் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர்.

உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்திரிபால சிறிசேன, 1973ம் ஆண்டில் கண்டி குண்டசாலை விவசாயக் கல்லூரியில், விவசாயப் பாடநெறி ஒன்றைப் பயின்றார்.

அதன் பின்னர் கிராம சேவை உத்தியோகத்தராகவும் சிறிதுகாலம் அவர் பணியாற்றியிருந்தார்.

மாணவர் பருவத்திலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூர் இளைஞர் அணி செயற்பாட்டாளராக இருந்துள்ள மைத்திரிபால சிறிசேன, 1970களில் இறுதியில் அந்தக் கட்சியின் தீவிர உள்ளூர் அரசியல் குழுக்களில் அங்கம் வகித்துள்ளார்.

அதன் பின்னர், 1980களின் தொடக்கத்திலிருந்தே கட்சியின் தேசிய மட்ட அமைப்புகளில் முக்கிய பதவிகளை வகிக்கத் தொடங்கினார்.

இதில் 1982-ம் ஆண்டில் அகில இலங்கை இளைஞர் அணித் தலைவராகவும் பின்னர் கட்சியின் பொலிட் பீரோவிலும் உறுப்பினரானார்.

1989-ம் ஆண்டு, தனது 38வது வயதில் பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்று பாராளுமன்றதுக்கு வந்துள்ளார் மைத்திரிபால சிறிசேன.

பின்னர், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994-ம் ஆண்டில் அமைத்த அரசாங்கத்தில் துணை நீர்ப்பாசனத்துறை அமைச்சராக நியமனம் பெற்ற மைத்திரிபால, மூன்று ஆண்டுகளில் கெபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியொன்றுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணைச் செயலாளராகவும் வளர்ச்சி கண்டார்.

பின்னர், அடுத்த மூன்று ஆண்டுகளில் கட்சியின் துணைத் தலைவராக நியமனம் பெற்ற இவர், 2004-ம் ஆண்டில் சந்திரிகா தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் நியமனம் பெற்றார்.

அதன்பின்னர், தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைக் காலத்திலும் அதே பதவிநிலையில் நீடித்துவந்த மைத்திரிபால, விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அதன் பின்னர், விவசாயம் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் பல்வேறு அமைப்புகளுக்கு தலைமை தாங்கிய இவர், 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் படி, சுகாதார அமைச்சராக பதவி ஏற்றார்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் உச்சகட்டத்தைத் தொட்டிருந்த காலத்தில் 2008-ம் ஆண்டில் கொழும்பின் புறநகர்ப்பகுதியான பிலியந்தலையில் மைத்திரிபால சிறிசேன தற்கொலை குண்டுத் தாக்குதல் முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் திகதி நடைபெறவுள்ள, ஜனாதிபதி தேர்தலில், எதிரணிகள் சேர்ந்து பொது வேட்பாளராக தன்னை தெரிவு செய்துள்ளதாக, நேற்று அறிவித்தார்.

நகர மண்டபத்தில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க மற்றும் ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் பதவி வகித்த சில முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில் இதனை அவர் குறிப்பிட்டார்.

63 வயதான மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது மனைவியான ஜயந்தி புஸ்பா குமாரி தம்பதியருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மைத்திரிபாலவின் பதவி அனுரபிரியதர்ஷன யாப்பாவிற்கு!!
Next post துப்பாக்கிச் சூடு – ஐ.தே.கவைச் சேர்ந்த ஒருவர் காயம்!!