உயிர்க்கொல்லி எபோலா டெல்லியை எட்டியது: லைபீரியாவில் இருந்து வந்த இந்திய வாலிபருக்கு தீவிர சிகிச்சை!!
ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள கினியா, லைபீரியா, சியாராலோன், நைஜீரியா, மாலி ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது.
இந்த நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் மற்றும் பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை. இதுவரை இந்த நோய்க்கு சுமார் 5 ஆயிரத்து 160 பேர் பலியாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
சாவு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 200 பேர் பலியாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
லைபிரீயா நாட்டில்தான் இந்த நோயின் தாக்குதல் அதிகமாக உள்ளது. அங்கு மட்டும் 2830 பேர் உயிரிழந்துள்ளனர். கினியா நாட்டில் 1100 பேர் உயிரிழந்துள்ளனர். மாலி நாட்டில் நோய் தாக்குதல் இப்போது தான் தொடங்கி உள்ளது.
தற்போது இந்த நாடுகளில் 14 ஆயிரம் பேர் எபோலா நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களை காப்பாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களை பாதுகாப்பாக புதைப்பதற்கு மட்டும் 370 பயிற்சி பெற்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், லைபீரியாவில் இருந்து கடந்த 10-ம் தேதி டெல்லி விமான நிலையத்துக்கு வந்த ஒரு இந்தியருக்கு எபோலா தொற்று இருப்பதாக அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
26 வயது வாலிபரான அவரிடம் நடத்தப்பட்ட ரத்தப்பரிசோதனை உள்ளிட்ட இதர பரிசோதனைகளில் பெரிய அளவிலான எபோலாத் தொற்று ஏதும் தென்படவில்லை. இருப்பினும், அவரது விந்தணுக்களில் எபோலா தொற்று உள்ளது, மேம்படுத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தொற்று நீங்கி அவர் பூரணமாக நோய்த்தொற்றில் இருந்து விடுபட சுமார் 90 நாட்கள் ஆகலாம் என மருத்துவ துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரது விந்தணுவின் மூலம் எபோலா நோய் பிறருக்கும் பரவலாம் என்பதால், அவரது உடலின் திரவங்கள் அனைத்தும் சீரான நிலையை எட்டும் வரையில் டெல்லி விமான நிலையத்தையொட்டியுள்ள எபோலா தடுப்பு சிறப்பு சிகிச்சை பகுதியில் அவரை தங்கவைத்து, தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க மருத்துவ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
எனினும், இந்த தகவலால் மக்கள் பீதியடைய தேவை இல்லை எனவும், சர்வதேச சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த வாலிபருக்கு நடத்தப்பட்ட மூன்று வகை ரத்த பரிசோதனையில், இவருக்கு ஏற்பட்டுள்ள எபோலா தொற்று குணப்படுத்திவிடும் வகையிலானது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நபர் லைபீரியாவில் எபோலாவுக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும், பின்னர் பூரண நலமடைந்து விட்டதாகவும் அந்நாட்டு அரசு இவருக்கு சான்றிதழ் அளித்துள்ள நிலையில், எபோலாவால் தாக்கப்பட்டு இந்தியாவுக்குள் நுழைந்த முதல் இந்தியர் இவர், என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating