மீனவர்களின் உறவினர்கள் பாராளுமன்றம் முன் போராட்டம் நடத்த முடிவு!!
இராமேசுவரத்தில் இருந்து கடந்த 2011 நவம்பர் மாதம் 27–ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் அகஸ்டஸ், வில்சன், எமர்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய ஐந்து மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் போதைப்பொருள் கடத்தியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த ஐந்து இந்திய மீனவர்களுக்கும் மூன்று இலங்கை மீனவர்களுக்கும் மரண தண்டனை விதித்து கடந்த 30–ம் திகதி தீர்ப்பளித்தது.
இதனால் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஐந்து மீனவர்களின் மரண தண்டனையை இரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும் என்று வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பிரதமர் நரேந்திரமோடி, இலங்கை ஜனாதிபதியைத் தொடர்பு கொண்டு 5 மீனவர்களின் விடுதலை குறித்து பேசியதாகவும் முன்னர் செய்திகள் வௌியாகின.
இதன் பலனாக, 5 மீனவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி, மரண தண்டனையை இரத்து செய்ய, இலங்கை ஜனாதிபதி முன்வந்துள்ளதாகவும், கொழும்பு உச்சநீதிமன்றத்தில் இந்திய தூதரகம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை மீளப் பெற்றதும், 5 மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், உவா மாகாண உள்கட்டமைப்பு துறை அமைச்சருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இந்நிலையில் 5 மீனவர்கள் விடுதலை குறித்து மத்திய அரசு சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வராததால் அவர்களுடைய குடும்பத்தினர் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மீனவர் பிரசாத்தின் மனைவி ஸ்கெனிட்டா, அகஸ்டஸ் மனைவி பாக்கியசெல்வி, எமர்சனின் மனைவி லாவண்யா, வில்சன் மனைவி ஜான்சி, லாங்லெட்டின் தாயார் இன்பென்டா ஆகியோரும், 15 மீனவப்பெண்களும் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் முன்பு நேற்று மதியம் உண்ணாவிரத போராட்டம் இருந்தனர்.
இது பற்றி அவர்கள் கூறியதாவது:–
“கடந்த மாதம் 30–ம் திகதி இலங்கை நீதிமன்றத்தில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டதில் இருந்து இன்று வரையிலும் நாங்கள் பலவித போராட்டங்களை நடத்தி வருகிறோம். இப்போது 5 மீனவர்கள் விடுதலை குறித்து பத்திரிகை, தொலைக்காட்சிகளில் செய்தி வந்துள்ளது.
ஆனால் இதுவரையிலும் 5 மீனவர்களின் விடுதலை குறித்து மத்திய, மாநில அரசுகளோ, இந்திய வெளியுறவுத் துறையோ, தூதரக அதிகாரிகளோ, மீன்துறை அதிகாரிகளோ யாருமே அதிகாரபூர்வமாக உறுதியாக தெரிவிக்கவில்லை.
இதனால் எங்களுக்கு தொடர்ந்து குழப்பமாகவே இருந்து வருவதுடன் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றோம். சிறையில் இருக்கும் மீனவர்களோடு நாங்கள் செல்போன் மூலமாக பேச ஏற்பாடு செய்வதாக, தூதரக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் இதுவரையிலும் சிறையிலும் உள்ள மீனவர்களோடு ஒருமுறை கூட நாங்கள் யாரும் பேசியது கிடையாது.
ஆகவே, 5 மீனவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசு சார்பில் இன்னும் 3 நாட்களுக்குள் தெரிவிக்காவிட்டால் 18–ம் திகதி அன்று டெல்லிக்கு சென்று பாராளுமன்றம் முன்பு அமர்ந்து 5 குடும்பத்தை சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.” இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Average Rating