கள்ளக்காதலனை சந்திக்க விடாமல் கெடுபிடி செய்ததால் கணவரை கொன்றேன்: மனைவி வாக்குமூலம்!!
திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 43). இவரது மனைவி பரமேஸ்வரி (32). 10.11.2014 காலை தங்கராசு வீட்டில் மர்மமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். வீட்டில் இருந்த மனைவி பரமேஸ்வரி எனக்கு தெரியாமல் யாரோ எனது கணவரை கொலை செய்துவிட்டார்கள் என்று கூறினார்.
போலீசாருக்கு பரமேஸ்வரி மீது சந்தேகம் வந்தது. அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். அதில் பரமேஸ்வரி தனது கள்ளக்காதலனை ஏவி தங்கராசை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
பரமேஸ்வரியின் கள்ளக்காதலனின் பெயர் ரவிச்சந்திரன் (38). இவர் பரமேஸ்வரியின் தூரத்து உறவினர் ஆவார்.
பரமேஸ்வரி ஏற்பாட்டின்படி ரவிச்சந்திரன் கூலிப்படை அமைத்து இந்த கொலையை செய்தது தெரியவந்தது. அதையடுத்து பரமேஸ்வரி, ரவிச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பரமேஸ்வரி போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
எனது சொந்த ஊர் திருமலை அகரம். நாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். நான் பிளஸ்–2 படித்து கொண்டிருந்த போது 1999–ம் ஆண்டு தங்கராசு வீட்டில் இருந்து என்னை பெண் கேட்டு வந்தனர். உடனே என்னை தங்கராசுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
அப்போது தங்கராசு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். திருமணம் முடிந்ததும் சில மாதங்கள் கழித்ததும் தங்கராசு வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் எனது தங்கைக்கு திருமணம் நடந்தது. அந்த திருமண ஏற்பாட்டை எனது உறவினர் ரவிச்சந்திரன் செய்தார். அவர் எனக்கு முறைக்கு மாமன் மகன் ஆவார். தங்கை திருமணத்தின் போது எங்கள் வீட்டிலேயே இருந்து தேவையான உதவிகளை செய்தார்.
அப்போது ரவிச்சந்திரனுடன் பேச வேண்டியிருந்தது. இருவரும் நண்பர்கள் போல பழகினோம். எனது கணவர் வெளியூரில் இருந்ததால் ரவிச்சந்திரனின் ஆதரவு எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது. எனவே அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இருவரும் காதலர்களாக மாறினோம்.
அதைத்தொடர்ந்து அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம். இது எனது கணவருக்கோ, குடும்பத்தினருக்கோ தெரியாது. ஆனால் இந்த விஷயம் 4 ஆண்டுகளுக்கு முன்பு ரவிச்சந்திரனின் மனைவிக்கு எப்படியோ தெரிந்து விட்டது.
அவர் தனது தந்தையிடம் சென்று கூறினார். ரவிச்சந்திரனின் மனைவி வீட்டார் திரண்டு வந்து ரவிச்சந்திரனிடம் தகராறு செய்தார்கள். என்னையும் எச்சரித்தார்கள். இதனால் எங்கள் கள்ளக்காதல் விவகாரம் ஊரில் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அவர்கள் வெளிநாட்டில் இருந்த எனது கணவருக்கு தெரிவித்து விட்டனர்.
இதனால் கணவர் தங்கராசு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்துவிட்டார். என்னை மிகவும் கண்டித்தார். எனது செல்போனையும் பறித்து கொண்டார். இதன் பிறகு என்னால் ரவிச்சந்திரனை சந்திக்க முடியவில்லை. பேசவும் முடியவில்லை.
இதையடுத்து ரவிச்சந்திரன் எனக்கு செல்போன் சிம்கார்டு ஒன்று ரகசியமாக வாங்கி கொடுத்தார். ஊரில் உள்ள தோழிகளின் போனை வாங்கி அதில் சிம்கார்டை போட்டு ரவிச்சந்திரனுடன் பேசி வந்தேன்.
எனது கணவர் ஊரில் இல்லாத நாட்களில் அவரை வீட்டுக்கு வரவழைத்தேன். இருவரும் உல்லாசமாக இருந்தோம். இந்த விஷயம் கணவருக்கு தெரிந்துவிட்டது. எனவே என்னை துன்புறுத்தினார். எனது செல்போன் சிம்கார்டையும் பறித்துக் கொண்டார். ஆனாலும் எப்படியாவது ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு பேசி வந்தேன்.
இதை அறிந்த கணவர் என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். நான் வெளியே எங்கும் செல்லவிடாமல் பார்த்து கொண்டார். காதலனை சந்திக்க முடியாமல் தவித்தேன். இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது, இவரை தீர்த்து கட்டினால் தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்று கருதினேன்.
இதுபற்றி ரவிச்சந்திரனை ரகசியமாக தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் கணவரை கொலை செய்வதற்கு ஒத்துக்கொண்டார். அவர் தங்கராசை கொல்ல கூலிப்படையை ஏற்பாடு செய்தார்.
9–ந்தேதி இரவு 10.30 மணியளவில் ஊரில் அனைவரும் தூங்கிவிட்ட நிலையில் கூலிப்படையை ரவிச்சந்திரன் அனுப்பி வைத்தார். எனது கணவர் எப்போதுமே வீட்டு வராண்டாவில் படுப்பது வழக்கம். அவர் தூங்கிவிட்டதை உறுதி செய்து கூலிப்படையினருக்கு தகவல் கொடுத்தேன்.
அவர்கள் வீட்டுக்குள் வருவதற்காக கதவை திறந்து வைத்தேன். எனது மகனை உள் அறைக்குள் படுக்க வைத்திருந்தேன். கூலிப்படையினர் உள்ளே வந்ததும் அவரை சரமாரியாக வெட்டினார்கள். அவருடைய அலறல் சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக டி.வி. ஒலியை அதிகப்படுத்தி வைத்தேன்.
ஆனாலும் வீட்டின் அறைக்குள் படுத்திருந்த எனது மகன் சத்தம் கேட்டு வெளியே வந்தான். அவனிடம் ஒன்றுமில்லை. நீ படுத்துக்கொள் என்று கூறி அறைக்குள் அனுப்பி வைத்தேன்.
கூலிப்படையினர் அவரை கொன்றுவிட்டு வெளியே புறப்பட்டார்கள். நான் படுத்துள்ள அறையை வெளியே பூட்டிவிட்டு செல்லுமாறு அவர்களிடம் கூறினேன். அதன்படி அவர்கள் அறையை பூட்டிவிட்டு சென்றனர். வழக்கம் போல காலையில் எழுந்து எதுவும் தெரியாதது போல நாடகம் ஆடினேன். ஆனால் எல்லா விஷயத்தையும் போலீசாரிடம் சொல்ல வேண்டியது வந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரவிச்சந்திரன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
நானும் பரமேஸ்வரியும் கள்ளக்காதலர்களாக இருப்பதை தெரிந்ததில் இருந்தே பரமேஸ்வரியை தங்கராசு மிகவும் கொடுமைப்படுத்தி வந்தார். இதுபற்றி பரமேஸ்வரி என்னிடம் அடிக்கடி சொல்லி அழுதார்.
கொடுமை அதிகமானதால் அவரை எப்படியாவது கொன்றுவிடுமாறு என்னிடம் கூறினார். அதற்கு அதிக பணம் தேவைப்படும் என்று சொன்னேன். தனது 3½ பவுன் நகையை என்னிடம் கழற்றி கொடுத்தார். கொலை செய்ததற்கு பிறகு மேலும் பணம் தருவதாக கூறினார். அந்த நகையை அடகு வைத்து பணம் வாங்கினேன். பின்னர் கூலிப்படையை ஏற்பாடு செய்தேன். 3 பேர் இதற்கு சம்மதித்தனர். அவர்களுக்கு முன்பணமாக ரூ.10 ஆயிரம் கொடுத்தேன். அதைத்தொடர்ந்து அவர்கள் நாங்கள் திட்டமிட்டு கொடுத்தபடி தங்கராசை கொலை செய்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைதான பரமேஸ்வரி, ரவிச்சந்திரன் இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
தங்கராசை கொலை செய்த கூலிப்படை 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பெயர் விவரத்தை வெளியிடவில்லை.
Average Rating