விவசாயி வீட்டில் கொள்ளை: சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேர் கைது!!
கோவையை அடுத்த கிணத்துக்கடவு அருகேயுள்ள கோதவாடி பிரிவில் உள்ள தென்னந்தோப்பு பண்ணை வீட்டில் வசித்து வருபவர் மகாலிங்கம்(வயது 55). விவசாயி. இவரது மனைவி பச்சைநாயகி. இவரது மகன்கள் கவின்சங்கர், கவுதம், மகள் காவியா.
கடந்த 13–ந் தேதி இரவு மகாலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். 14–ந் தேதி அதிகாலை மகாலிங்கம் எழுந்து வெளியே வந்தார்.
அப்போது 7 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி, அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த மகாலிங்கம் வெலவெலத்துப் போனார்.
மறுநிமிடமே அந்த கும்பல் மகாலிங்கத்தை அப்படியே வீட்டுக்குள் தள்ளிச்சென்றது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மகாலிங்கத்தின் மனைவி, மகன்கள், மகள் ஆகியோரை துப்பாக்கி முனையில் மிரட்டினர்.
பின்னர் வீட்டில் இருந்த பீரோவைத் திறந்து அதிலிருந்த 2½ பவுன் நகை, 8 பட்டுச்சேலைகள், வெள்ளி விளக்கு மற்றும் பொருட்களை சுருட்டிக்கொண்டனர். பின்னர் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த மகாலிங்கத்துக்கு சொந்தமான காரில் தப்பிச்சென்று விட்டனர்.
கொள்ளையர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராஜன் மேற்பார்வையில் தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி வேட்டையில் இறங்கினர். அப்போது விவசாயி வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த வரதன், ரகுவரன், ராமநாதன், மாயகிருஷ்ணன், கவுதமன், மலையாண்டி, மாரிராஜன் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்த நகை, மற்றும் பொருட்கள், கார் ஆகியவையும் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.4 லட்சத்து 8 ஆயிரம் ஆகும்.
கைதான கொள்ளையர்களில் ரகுவரன் தற்போது பெங்களூரில் வக்கீலுக்கு படித்து வருகிறார். இதேபோல் கவுதமன் மதுரை சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்.
மாரிராஜன் மதுரையில் உள்ள கல்லூரியில் இலக்கியம் படித்து வருகிறார். இவர்கள் 7 பேரும் கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் 10–க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது.
கொள்ளை கும்பல் இதற்கு முன்னதாக செட்டிபாளையத்தில் உள்ள தாமஸ் என்பவர் வீட்டில் புகுந்த கைவரிசை காட்டியது. அப்போது தான் அவர்கள் துப்பாக்கியை திருடிச்சென்றுள்ளனர்.
அந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி தான் மற்ற இடங்களில் கைவரிசை காட்டியுள்ளனர். தற்போது வசமாக மாட்டிக் கொண்டனர். கொள்ளை சம்பவத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயி வீட்டில் கொள்ளையடித்தவர்களை ஒரு வாரத்துக்குள் மடக்கிப் பிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பாராட்டினார்.
Average Rating