சக்களத்தியாக அறிமுகமானவர் அம்பிகா!!
மலையாளப் படங்களில் நடித்து வந்த அம்பிகா, 1979-ம் ஆண்டில் தமிழ்ப்பட உலகில் அடியெடுத்து வைத்தார். படத்தின் பெயர் “சக்களத்தி.” இதில் ஷோபா, சுதாகர் ஆகியோர் ஜோடியாக நடித்தனர். இரண்டாவது கதாநாயகியாக அம்பிகா நடித்தார்.
கே.பாக்கியராஜ் நடித்து டைரக்ட் செய்த “அந்த 7 நாட்கள்” படத்தில் கதாநாயகியாக நடித்தார், அம்பிகா. இது சூப்பர் ஹிட் படம். இந்தப் படத்தில் அம்பிகாவின் நடிப்பும் சிறப்பாக அமைந்தது. அதனால் பெரும் புகழ் பெற்றார்.
இசையில் நாட்டம் கொண்ட மலையாள இளைஞனாக பாக்கியராஜ் நடித்தார். வாடகைக்கு வீடு தேடி அலையும் அவருக்கு அம்பிகாவின் வீட்டில் இடம் கிடைக்கும்.
சிறு சிறு நìகழ்ச்சிகளால், பாக்கியராஜ் மீது அம்பிகாவுக்கு காதல் ஏற்படும். இருவரும் வீட்டை விட்டு ஓட முடிவு செய்வார்கள். ஆனால், அம்பிகாவின் பெற்றோர் அதைக் கண்டுபிடித்து, அம்பிகாவை வேறு மாப்பிள்ளைக்கு (ராஜேஷ்) திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.
பாக்கியராஜை காதலித்த அம்பிகா, ராஜேஷின் மனைவியாக வாழ விரும்பாமல், தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பார். தக்க சமயத்தில் அவரை ராஜேஷ் காப்பாற்றுவார். “இன்னும் சில நாட்கள் பொறுத்துக்கொள். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்கிறேன்” என்று ராஜேஷ் கூறுவார்.
பாக்கியராஜ்க்கு அம்பிகாவை திருமணம் செய்து வைக்கத் தயாராவார், ராஜேஷ். ஆனால், பாக்கியராஜின் நல்ல உள்ளத்தால், ராஜேசும், அம்பிகாவும் ஒன்று சேருவார்கள்.
புரட்சிகரமான – அதே சமயத்தில், `சென்டிமெண்ட்’டும் கலந்த கதை. மலையாளம் கலந்த தமிழ் பேசி அனைவரையும் அசத்தினார், பாக்கியராஜ்.
“கணவனா, காதலனா?” என்ற மனப்போராட்டத்தை அழகாகச் சித்தரித்தார், அம்பிகா. இந்தப் படத்தின் மூலம், முதல் வரிசை கதாநாயகிகள் வரிசையில் இடம் பெற்றார்.
இந்தப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி அம்பிகா கூறியதாவது: “அந்த 7 நாட்கள் படத்தில் நடிக்க, பாக்கியராஜ் சார் என்னை அழைத்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். கதைச் சுருக்கத்தை என்னிடம் கூறியபோது, கதாநாயகிதான் மலையாளம் கலந்த தமிழில் பேச வேண்டி இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், பாக்கியராஜ்தான் மலையாளியாக நடித்தார். மலையாளப் பெண்ணான நான், தமிழ்ப் பெண்ணாக நடித்தேன்!
பாக்கியராஜ் சார், மலையாளமும் தமிழும் கலந்து டயலாக் பேசுவார். “நான் சரியாகப் பேசுகிறேனா” என்று அவ்வப்போது என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.
இந்தப் படத்திலேயே மிக முக்கியமானது “கிளைமாக்ஸ்” காட்சிதான். அதைப் படமாக்குவதற்கு, ஒரு மாத இடைவெளி விட்டார்கள்.
“காதலனுக்காக கதாநாயகி தாலியை கழற்றுவதா? அல்லது, கணவனுக்காக தாலியை கழற்றாமல் இருப்பதா?” என்று, பாரதிராஜா சாருடன் பாக்கியராஜ் கலந்து பேசினார். இருவரும் தீவிரமாக யோசித்து, ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
கிளைமாக்சில், நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை பாரதிராஜா நடித்துக் காட்டினார். நானும் சிரமப்பட்டு நடித்தேன். அக்காட்சி நல்லபடி அமைந்தது. படம், எல்லோருக்கும் பெயர் வாங்கித் தந்தது.” இவ்வாறு அம்பிகா கூறினார்.
இதன்பின், “தரையில் வாழும் மீன்கள்” என்ற படத்திலும், எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ஷனில் “இதயம் பேசுகிறது” படத்திலும் அம்பிகா நடித்தார்.
இதற்கிடையே, “அலைகள் ஓய்வதில்லை” படம் பாரதிராஜா டைரக்ஷனில் உருவாயிற்று. இந்தப்படத்தில் கார்த்திக் அறிமுகமானார்.
கதாநாயகியாக அம்பிகாவை நடிக்க வைக்கத்தான், முதலில் பாரதிராஜா திட்டமிட்டிருந்தார். அந்த சமயத்தில், தன் குடும்ப போட்டோவை பாரதிராஜாவிடம் அம்பிகா காண்பித்தார்.
அதில் இருந்த அம்பிகாவின் தங்கை ராதாவை பார்த்த பாரதிராஜா, கதாநாயகியாக அவரை அறிமுகப்படுத்த முடிவு செய்தார்.
ஆனால், ராதா நடிக்க விரும்பவில்லை. படித்து, ஆசிரியை ஆக வேண்டும் என்று விரும்பினார். பாரதிராஜா டைரக்ஷனில் அறிமுகமானால் பெரிய நடிகையாகலாம் என்று ராதாவிடம் அம்பிகா எடுத்துக் கூறினார்.
அதன்பின், ராதா தன் மனதை மாற்றிக்கொண்டு, நடிக்க சம்மதித்தார். “அலைகள் ஓய்வதில்லை” படத்தில் கதாநாயகியாக சிறப்பாக நடித்து, ஒரே படத்தில் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார்.
அதன்பின், அக்கா அம்பிகாவும், தங்கை ராதாவும் சில ஆண்டுகள் வரை தமிழ்ப்பட உலகில் ஒரே நேரத்தில் கொடிகட்டிப் பறந்தனர்.
Average Rating