11–வது பிரசவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு கட்டாய கருத்தடை!!
திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்து கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன். இவரது மனைவி சித்ரா(வயது 35). 4 ஆண், 6 பெண் என 10 குழந்தைகளை பெற்ற இவர் 11–வது முறையாக கர்ப்பம் தரித்தார்.
தொடர்ந்து குழந்தைகளை பெற்றதால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கர்ப்பத்தின்போது தடுப்பூசி போட்டு கொள்ளாததாலும் சித்ரா வயிற்றில் இருந்த குழந்தை இறந்தது. இதையடுத்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சித்ரா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சித்ராவின் மாமியார் பழனியம்மாள் கூறியதாவது:–
சித்ரா மரணத்திற்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது. அவள் தலைவலிக்கு கூட மாத்திரை சாப்பிட மாட்டார். ஊசி போட பயந்து ஆஸ்பத்திரிக்கு செல்லமாட்டாள். தொடர்ந்து குழந்தைகளை பெற்றதால் அவளை குடும்ப கட்டுப்பாடு செய்ய சொன்னோம். குடும்ப கட்டுப்பாடு செய்தால் உயிர்போய் விடும். பிள்ளைகளை யார் காப்பாற்றுவார்கள்? என்று கூறி மறுத்துவிட்டாள். இதனால் என் மகனிடம் கூறினேன். குடும்ப கட்டுப்பாடு செய்தால் வேலைக்கு போக தெம்பு இருக்காது. பெண்கள் செய்தால் பாதிக்காது. எனவே அவளை கருத்தடை செய்ய சொல்லு என்று மறுத்துவிட்டான். சித்ராவும் கடைசி வரை போகவில்லை. தொடர்ந்து பிள்ளைகள் தான் பெற்றாள்.
10 குழந்தைகளையும் தவிக்க விட்டு சென்றுவிட்டாள். அவர்களை காப்பாற்ற கஷ்டப்படுகிறோம். கடவுள் தான் கருணை காட்ட வேண்டும். அரசாங்கம் உதவ வேண்டும். அல்லது யாராவது உதவினால்தான் காப்பாற்ற முடியும் என்று கண்ணீர் மல்க கூறினார்.
சித்ராவின் மூத்த மகன் முத்தமிழன்(வயது 15) 10–ம் வகுப்பை தொடராமல் வேலைக்கு செல்கிறான். 2–வது குழந்தை சத்தியலெட்சுமி 9–ம் வகுப்பு படிக்கிறாள். மற்ற குழந்தைகள் 7–வது, 6–வது, 5–வது, 3–வது வகுப்பு படிக்கின்றனர். கடைசி குழந்தை மாரீஸ்வரி இன்னும் புட்டிபால் கூட மறக்கவில்லை.
சித்ராவின் மரணம் தொடர்பாக சுகாதாரபணிகள் இணை இயக்குனர் ரவிகலா கூறியதாவது:–
சுகாதார நிலையத்தின் அருகில் வசித்து வந்த சித்ராவுக்கு 10 பிரசவங்களும் வீட்டிலேயே நடந்துள்ளது. இதுகுறித்த தகவலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் செவிலியர்கள் இருந்துள்ளனர். 11–வது கர்ப்பத்தில் சித்ரா உயிரிழந்ததால் தோட்டனூத்து ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களிடம் இணை இயக்குனர் வரதராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.
உயிரிழந்த சித்ராவின் கணவர் மணிகண்டனுக்கு கஞ்சா மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. போதை பழக்கத்திற்கு அடிமையான அவர் யார் சொல்லையும் கேட்காமல் செயல்பட்டு வந்துள்ளார். தற்போது சித்ரா உயிரிழந்து விட்டதால் அவரது 10 குழந்தைகளும் ஆதரவற்றவர்களாக நிற்கின்றனர். அவர்கள் விரும்பும்பட்சத்தில் மதுரை திருப்பரங்குன்றத்தில் செயல்பட்டு வரும் அறக்கட்டளைக்கு சொந்தமான ஆசிரமத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சித்ராவின் கணவர் மணிகண்டன் 2–வது திருமணம் செய்ய முயற்சிக்கலாம். எனவே அதனை தடுக்கும் வகையில் அவருக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
Average Rating