3 முறை சாம்பியனான இத்தாலி கால் இறுதிக்கு தகுதி பெறுமா?- ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்
ஜெர்மனியில் நடைபெற்று வரும் 18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கால் இறுதிக்கு தகுதி பெறுவதற்கான நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் தொடங்கி விட்டன. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் `பி’ பிரிவின் முதல் இடம் பிடித்த இங்கிலாந்து, `ஏ’பிரிவில் 2-வது இடம் பிடித்த ஈக்வடார் அணிகள் மோதுகின்றன. மற்றொறு ஆட்டத்தில் `டி’ பிரிவில் முதல் இடத்தை போர்ச்சுகல், `சி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஆலந்து அணியை எதிர்கொள்கிறது. நாளை நடைபெறும் நாக் அவுட் சுற்றின் முதல் ஆட்டத்தில் `இ’ பிரிவில் உள்ள இத்தாலி, `எப்’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா அணியை சந்திக்கிறது. கெய்சர்லாட்ரான் நகரில் நடைபெறுகிறது. இத்தாலி லீக் ஆட்டத்தில் கானாவை 2-0 என்ற, கணக்கிலும் செக்குடியரசை 2-0 என்ற, கணக்கிலும் தோற்கடித்து இருந்தது. அமெரிக்காவுடன் 1-1 என், கணக்கிலும் `டிரா’ செய்தது.
2-வது முறையாக உலக கோப்பையில் களம் இறங்கியுள்ள ஆஸ்திரேலியா ஜப்பானை 3-1 என்ற, கணக்கில் தோற்கடித்தது. பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில் 0-2 என தோல்வி கண்டது. குரோசியாவுக்கு எதிரான ஆட்டத்தை போராடி 2-2 என்ற கணக்கில் `டிரா’ செய்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
1934, 38, 82 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணியுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியா அணி சற்று பலவீனமானது தான். ஆஸ்திரேலியா தற்போது தான் 2-வது சுற்றுக்கு முதன் முறையாக முன்னேறி உள்ளது. அந்த அணி தான் அறிமுகமான 1974 ஆண்டு உலககோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறியது. ஆனால் இம்முறை ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டம் துடிப்புடன் உள்ளது. அந்த அணியில் டிம்ககில் 2 கோல்கள் அடித்துள்ளார்.
இத்தாலி அணியில் வின் சென்சோ, பிலிப் போடூனி, டோடி, அல்பர்ட்டோ ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்குகின்றனர். பராகுவேக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி கடைசி நேரத்தில் ஆக்ரோசமாக ஆடியது. இதனால் இத்தாலி அணிக்கு ஆஸ்திரேலியா சற்று நெருக்கடி கொடுக்கும் எனத் தெரிகிறது.
நள்ளிரவு நடைபெறும் ஆட்டத்தில் `ஜி’பிரிவில் முதலிடம் பிடித்த சுவிட்சர்லாந்து `எச்’ பிரிவில் 2-வது இடம்பிடித்த உக்ரைனுடன் மோதுகிறது. சுவிட்சர்லாந்து லீக் ஆட்டத்தில் டோகாவை 2-0 என்ற கணக்கிலும் தென்கொரியாவை 2-0 என்ற கணக்கிலும் தோற்கடித்தது. பிரான்சுக்கு எதிரான ஆட்டத்தை கோல் ஏதுமின்றி டிரா செய்தது.
8 முறை உலக கோப்பையில் ஆடி உள்ள சுவிட்சர்லாந்து அணி 1934, 1938 மற்றும் 1954 ஆகிய ஆண்டுகளில் கால் இறுதி வரை மட்டுமே முன்னேறி உள்ளது. இதுவே அந்த அணியின் சிறப்பான ஆட்டம். அணியில் பிரெய் அலெக்சாண்டர், சென்டராஸ் முன்னணி வீரர்களாக திகழ்கின்றனர்.
உக்ரைன் அணிக்கு இதுதான் முதல் உலககோப்பை. தான் பங்கேற்றுள்ள முதல் போட்டியிலே 2-வது சுற்றுக்கு தகுதி பெற்று அந்த அணி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த அணியில் முன்கலம் சிறப்பாக உள்ளது. எனினும் அனுபவம் இல்லாததால் சுவிட்சர்லாந்துடன் தாக்குபிடிக்குமா என்பது சற்று சந்தேகம்தான்.