மெக்சிகோவை வீழ்த்தி அர்ஜென்டினா கால் இறுதிக்கு தகுதி
18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. இதன் விறுவிறுப்பான `நாக்அவுட்’ சுற்று நேற்று தொடங்கியது. நேற்று நடந்த ஆட்டத்தில் `சி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த அர்ஜென்டினா `டி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த மெக்சிகோ அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்திலேயே 2 முறை சாம்பியனான அர்ஜென்டினாவுக்கு மெக்சிகோ அதிர்ச்சி கொடுத்தது. `பிரீகிக்’ வாய்ப்பை பயன்படுத்தி பாவெல் பேட்ரோ அடித்த பந்தை ஹெனிஸ் தலையால் முட்டினார். அந்த பந்து மெக்சிகோ கேப்டன் மார்ச்சுக்கு வசதியாக அமைந்தது. அவர் அதை கோலாக்கினார். இந்த கோல் மூலம் மெக்சிகோ 1-0 என்ற முன்னிலை பெற்றது.
கோல் வாங்கிய அதிர்ச்சியால் அர்ஜென்டினா வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டார்கள். 10-வது நிமிடத்தில் இதற்கு பலன் கிடைத்தது. கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினா வீரர் ரிக்குலமி பந்தை தூக்கி அடித்தார். இதை மெக்சிகோ வீரர் போர்கெடி தலையால் தடுக்கவும், அதே நேரத்தில் அர்ஜென்டினா முன்கள வீரர் கிரஸ்போ காலால் உதைக்கவும் பந்து கோல் வளைக்குள் புகுந்தது.
இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. கிரஸ்போ இந்த உலக கோப்பையில் அடித்த 3-வது கோலாகும். பின்னர் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சி பலன் இல்லாமல் போனது. முதல் பகுதி ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை இருந்தது.
2-வது பாதி கட்டத்தில் அர்ஜென்டினா வீரர்கள் மிகவும் அருமையாக பந்தை `பாஸ்’ செய்து முன்னேறினார்கள். ஆனால் அவர்களால் கோல் ஏரியா பகுதிக்குள் செல்ல முடியாத வகையில் மெக்சிகோவின் பின்களம் மிகவும் வலுவாக இருந்தது. அதே நேரத்தில் மெக்சிகோ வீரர்கள் முன்னேறி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு கோல் அடிக்க போராடினார்கள்.
இரு அணியிலும் 2-வது பாதி ஆட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அர்ஜென்டினா அணியில் கிரஸ்போ, கேம்பியாசோ, சவியோலா ஆகியோருக்கு பதிலாக டெவிஸ், அய்மர், மெஸ்ஸி இடம் பெற்றனர். 2-வது பகுதியில் மேலும் கோல் எதுவும் விழவில்லை. 1-1 என்ற சமநிலையே இருந்தது. குறிப்பிட்ட 90 நிமிட நேரத்தில் சமநிலை இருந்ததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.
இந்த உலக கோப்பையில் கோல்டன் கோல் விதி நீக்கப்பட்டது. கோல்டன் கோல் என்பது எந்த அணி கூடுதல் நேரத்தில் முதலில் கோல் அடிக்கிறதோ அதோடு ஆட்டம் முடிந்து விடும். கூடுதல் நேரம் 30 நிமிடம் ஆகும். இது 2 பாதியாக நடைபெறும். எந்த அணி கோல் அடித்தாலும் 30 நிமிடம் நடைபெறும்.
கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினா 2-வது கோலை அடித்தது. 8-வது நிமிடத்தில் (ஆட்டத்தின் 98-வது நிமிடம்) அந்த அணி கேப்டன் சொரின் அடித்த பந்தை மெக்சி ரோட்ரிக்ஸ் மார்பில் வாங்கி மிகவும் அருமையாக கோல் அடித்தார். அவரது 3-வது கோல் இதுவாகும். பதில் கோல் அடித்து சமன் செய்ய மெக்சிகோ வீரர்கள் எவ்வளவோ போராடினார்கள். ஆனால் முடியவில்லை.
இறுதியில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை தோற்கடித்தது. இந்த வெற்றி மூலம் அர்ஜென்டினா கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
முன்னதாக நடந்த ஆட்டத்தில் `ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த ஜெர்மனி-`பி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த சுவீடன் மோதின. இதில் ஜெர்மனி 2-0 என்ற கணக்கில் வென்று கால் இறுதியில் நுழைந்தது.