பழம் பெரும் வில்லன் நடிகர் ராமதாசின் பேத்திக்கு பள்ளியில் கொடுமை!!
பள்ளிக் குழந்தைகளை பிரம்பால் அடிக்க கூடாது, கடுமையான தண்டனைகளை வழங்ககூடாது என சட்டம் இருந்தாலும் அதை சிலர் பின்பற்றுவது இல்லை. 100 சதவீத தேர்ச்சிவிகிதத்திற்காக மாணவர்களை கசக்கி பிழியும் தனியார் பள்ளிகளின் தவறான நடை முறையால் மாணவர்கள் மன அழுத்தத்துடன் காணப்படுகின்றனர்.
மாணவர்களை கண்டிக்கும் விதிமுறைகள் நிறைய இருந்தாலும் அதனை ஆசிரியர்கள் பின்பற்றாமல் சிறு சிறு சாதாரண விஷயங்களுக்கு மிகப் பெரிய அளவிலான தண்டனை வழங்குவதால் சில சமயங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னையை அடுத்த மதுரவாயலில் பழம்பெரும் வில்லன் நடிகர் எஸ்.வி. ராமதாசின் பேத்திக்கு பள்ளியில் நேர்ந்த கொடுமை பெற்றோர்களை வேதனை அடையச் செய்துள்ளது.
மறைந்த வில்லன் நடிகர் எஸ்.வி.ராமதாஸ். இவரது மகன் வேணுகோபால். இவர் மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி மீனா. மகள் அஸ்வினி (வயது 9). கோயம்பேட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வருகிறாள்.
கடந்த வாரம் புதன்கிழமை மாணவி அஸ்வினிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், பள்ளிக்கு செல்லவில்லை. மறுநாள் அவள் பள்ளிக்கு சென்ற போது விடுப்பு எடுத்தற்கான கடிதம் கொண்டு செல்லவில்லை. இதனால், மாணவியை வகுப்பு ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியை கண்டித்தனர். விடுப்பு எடுத்ததற்கான கடிதம் நாளை கொடுத்து விடுகிறேன் என்று அஸ்வினி கூறினாள். ஆனால், அவர்கள் அதை ஏற்கவில்லை.
அவளை வகுப்பு செல்ல அனுமதிக்கவில்லை. காலையில் வகுப்பு தொடங்கிய நேரம் முதல் மாலையில் பள்ளி முடியும் வரை ‘பெஞ்ச்’ மீது நிற்கும்படி ஆசிரியை கூறினார். நீ செய்த தவறுக்கு உனக்கு இதுதான் தண்டனை என்று கூறி அஸ்வினியை பெஞ்ச் மீது ஏறி நிற்க கூறினார்.
அவள் 6 மணி நேரம் கால் கடுக்க நின்றாள். வலி தாங்க முடியாமல் கண்ணீர் விட்டபடியே ஆசிரியை கொடுத்த தண்டனையை ஏற்றுக் கொண்டார். வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கதறி அழுதாள்.
உடம்பெல்லாம் வலிப்பதாக கூறிய அஸ்வினியை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவிக்கு முதுகு தண்டில் எளிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக டாக்டர் கூறியுள்ளார்.
அஸ்வினியால் தற்போது நிற்கவோ, நடக்கவோ முடிய வில்லை. அவள் படுத்த படுக்கையாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
இதுபற்றி அஸ்வினியின் தந்தை வேணுகோபால் கோயம்பேடு போலீசில் புகார் கொடுத்தார். கல்வித்துறை அதிகாரிகளிடமும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார்.
இதுபற்றி மாணவியின் பெற்றோர் கூறும் போது, எம் மகள் படித்த பள்ளியில் எல்லா குழந்தைகளுக்கும் இது போன்ற கடுமையான தண்டனை வழங்கி கொடுமை படுத்துகிறார்கள். தவறு செய்யும் குழந்தைகளை தண்டிக்க வேண்டும். அதில், தவறில்லை.
ஆனால், எந்த முறையில் எப்படி தண்டிக்க வேண்டும் என்பது ஆசிரியர்களுக்கு தெரியவில்லை. கண்மூடித் தனமாக நடவடிக்கை எடுக்கிறார்கள். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating