(PHOTOS) ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை திருமணமே செய்து விட்டாரா புடின்…?
மாஸ்கோ: இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபயேவாவை ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் திருமணம் செய்து விட்டதாக புதுத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பெண்ணுடன், புடினுக்கு ரகசிய உறவு இருப்பதாக ஏற்கனவே செய்திகள் உலா வந்தபடி இருந்தன.
இந்த நிலையில் தற்போது அலினாவை புடின் ரகசியத் திருமணம் செய்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன. கடந்த செப்டம்பர் மாதம் வல்தாய் என்ற ஊரில் வைத்து இவர்கள் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை உறுதிப்படுத்துவது போல அலினாவின் வலது கை விரலில் திருமண மோதிரம் ஜொலிக்கிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அலினாவும் தனது மோதிரத்தை கேமராக்கள் முன்பு தூக்கிக் காட்டியபடி பெருமை பொங்க போஸும் கொடுத்தார்.
புடினுக்கு 61.. அலினாவுக்கு 30
புடினுக்கு 61 வயதாகிறது. அலினாவுக்கோ ஜஸ்ட் 30 தான் ஆகிறது.
அதேபோல புடினும் தனது திருமண விரலில் அதாவது வலது கை விரலில் மோதிரத்துடன் காணப்படுகிறார். கடநத் வாரம் எகிப்து பாதுகாப்பு அமைச்சர் அவரை சந்திக்க வந்தபோது மோதிரத்துடன் காணப்பட்டார் புடின்.
ரஷ்யாவில் திருமணமானவர்கள் தங்களது வலது கை விரலில் மோதிரம் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புடின் கடந்த ஆண்டு ஜூன் மாதம்தான் தனது மனைவி லுட்மிலாவை விட்டுப் பிரிவதாக அறிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
ஆனால் புடினுக்கும், அலினாவுக்கும் திருமணம் நடந்ததாக கூறப்படுவதை ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மறுத்துள்ளது.
புடின் திருமணச் செய்தியை ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவலானிதான் டிவிட்டரில் போட்டு உடைத்தார். அவர் வெளியிட்ட செய்தியில், புடினும், அலினாவும் வல்தாயில் உள்ள இவெர் மானஸ்டரியில் திருமணம் செய்து கொண்டுள்ளதாக எனக்குத் தகவல் வந்துள்ளது. வல்தாய் நகரம் சீல் வைக்கப்பட்டுள்ளதாம் என்று கூறியிருந்தார்.
ஆனால் இதுகுறித்து புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வெளியிட்ட அறிக்கையில், இன்டர்நெட்டில் வெளியாகும் செய்திகள் எல்லாம் போரடிக்காமல் இருப்பதற்காக பரப்பி விடப்படும் பொய் செய்திகள் ஆகும் என்றார்.
ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் வல்தாய் நகரில்தான் புடின் முகாமிட்டிருந்தார். அங்கு நடந்த சர்வதேச மாநாட்டுக்காக அவர் வந்திருந்தார். அந்த சமயத்தில்தான் திருமணம் நடந்தேறியதாக கருதப்படுகிறது.
அதேசமயம், புடினுக்கும் அலினாவுக்கும் திருமணத்திற்கு முன்பே குழந்தைகள் இருப்பதாக நீண்ட காலத்திற்கு முன்பே செய்திகள் வெளியாகியிருந்தன.
புடின் 2018ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம். தற்போது அவர் 3வது முறையாக அதிபராக இருக்கிறார். இதற்கு முன்பு வரை அதிபர் பதவிக்காலம் 4 ஆண்டு காலமாக இருந்தது. தற்போது அது 6 ஆண்டு காலமாக உயர்த்தப்பட்டுள்ளபது என்பது நினைவிருக்கலாம்.
Average Rating