ஒரே நேரத்தில் பா.ஜ.க., காங்கிரசுடன் பேசும் விஜயகாந்த்: எந்த பக்கம் பாய்வார்?
கேப்டன்… இன்னும் ரெடியாகவில்லை….தமிழக அரசியல் களத்தில் 3 கூட்டணி கப்பல்கள் தயாராக உள்ளது. எந்த கப்பலில் கேப்டன் ஏறுவார்…? என்பது சஸ்பென்சாகவே உள்ளது. தேசிய கட்சிகளான பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுக்க போட்டா போட்டி போடுகின்றன.
கடந்த 8–ந்தேதி மோடி சென்னை வந்தபோது விஜயகாந்த் அந்த கூட்டத்தில் பங்கேற்பார். பா.ஜனதா கூட்டணியை உறுதி செய்வார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென்று ஜகா வாங்கினார். திடீரென்று காங்கிரஸ் பக்கம் திரும்பினார். அவர்களுடனும் கூட்டணி பேச்சை தொடங்கினார். அதன் விளைவாக நேற்று டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தமிழக பிரச்சினைகளுக்காக மனு கொடுத்தார். கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் ரகசிய சந்திப்பு நடந்ததாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று நாராயணசாமி கூறினார். கூட்டணி பற்றி விஜயகாந்திடம் நிருபர்கள் கேட்டதற்கு ‘‘நான் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தால் உங்களுக்கு என்ன?’’ என்று ஆத்திரத்தில் கேட்டுள்ளார். என்னதான் நினைக்கிறார்? என்னதான் எதிர்பார்க்கிறார்? கட்சிகளுக்கும் புரிய வில்லை.
இந்த காட்சிகளை கூர்ந்து கவனித்து வரும் தமிழக மக்களுக்கும் தலை சுற்றாத குறைதான். பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் ஒவ்வொரு கட்சியை பற்றியும், அந்த கட்சியின் செயல்பாடுகளையும், விரல் நுனியில் வைத்து இருப்பார்கள். எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது பலன் தரும் என்பதும் கட்சி தலைவர்களுக்கு தெரிந்த விசயம் தான். ஆனால் விஜயகாந்த் மட்டும் இந்த விஷயத்தில் இன்னும் ஒரு தெளிவான முடிவுக்கு வராதது ஏன்? என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
கூட்டணி முயற்சிகள் நடக்கும் போது ஓரிரு முறை குறிப்பிட்ட இரு கட்சி தலைவர்களும் சந்தித்து பேசினாலே கூட்டணி முடிவுக்கு வந்து விடும். ஆனால் விஜயகாந்திடம் ஒவ்வொரு கட்சியும் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி விட்டன. ஆனால் இன்னும் எந்த பலனும் இல்லை.
இதுபற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறும்போது, ‘‘விஜயகாந்த் நல்ல ஸ்டண்ட் நடிகர் அவர் பிடி கொடுக்காமல் இருக்கிறார் என்பதிலிருந்து ஸ்டன்ட் நடிகராக இருக்கிறபோது எப்படி எதிரிகளுக்கு பிடி கொடுக்காமல் நடிப்பாரோ, அதேபோல் இப்பொழுதும் பிடிகொடுக்காமல் இருக்கிறார்‘‘ என்றார். அதே நேரத்தில் தி.மு.க. அணிக்கு விஜயகாந்த் வர வேண்டும் என்றும் கருணாநிதி அழைப்பும் விடுத்தார்.
இதேபோல பா.ஜனதா எங்கள் பக்கம் வருவார் என்கிறது. காங்கிரசும் எங்கள் பக்கம்தான் வருவார் என்கிறது. தி.மு.க.வும் வலையை விரித்து காத்திருக்கிறது. ஆனால் விஜயகாந்த் இரு கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் பேசிக் கொண்டிருப்பதால் எந்த பக்கம் சாய்வார் என்பது சஸ்பென்சாகவே இருந்து வருகிறது.
Average Rating