சேலத்தில் பிளஸ்–2 மாணவியிடம் ‘சில்மிஷம்’: பள்ளி நிர்வாகிக்கு பெண்கள் செருப்படி
சேலம் சுவர்ணபுரி அனெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஏசுராஜ் (40), இவர் அந்த பகுதியில் மழலையர் பள்ளி வைத்து நடத்தி வருகிறார். இவர் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெண்களிடமும், அந்த வழியாக வந்து செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளையும் கேலி, கிண்டல் செய்து வந்தார்.
நாளுக்கு நாள் இவரது தொல்லை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் இவர் தனியாக வரும் பெண்களை ஆபாசமாக பேசி சில்மிஷமும் செய்ய முயன்றாக தெரிகிறது. மேலும் இரவில் மது குடித்துவிட்டு ரோட்டில் செல்லும் பெண்களை பார்த்து டார்லிங் என்று அழைத்து கையை பிடித்தும் இழுத்து தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
நேற்று இரவு 7 மணி அளவில் ஏசுராஜ் தனது வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக பிளஸ்–2 படிக்கும் ஒரு மாணவி டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். இதைப்பார்த்த ஏசுராஜ் அந்த மாணவியிடம் சில்மிஷம் செய்ய முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் போய் சொல்லி அழுதார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம், பக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானபேர் ஏசுராஜ் வீட்டிற்கு திரண்டு வந்தனர்.
இதை எதிர்பார்க்காத ஏசுராஜ் வீட்டின் மாடிக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டு உள்ளே பதுங்கி கொண்டார். வெளியே நின்று கொண்டு இருந்தவர்கள் அவரை வெளியே வர சொல்லி சத்தம் போட்டனர். இதனால் அங்கு மேலும் கூட்டம் கூடிவிட்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் சூரமங்கலம் போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் அழைத்தும் ஏசுராஜ் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை.
இதனால் கோபம் அடைந்த இளைஞர்கள் சிலர் வீட்டு சுவர் ஏறி குதித்து மாடிக்கு சென்று கதவை உடைக்க முயன்றனர். இதை தெரிந்து கொண்ட ஏசுராஜ் மாடியில் இருந்து கீழே குதித்து ஓட ஆரம்பித்தார். இதையடுத்து இளைஞர்கள், பெண்களும் அவரை விரட்டி சென்று பிடித்தனர்.
ஆவேசம் அடைந்த பொதுமக்கள் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு ஏசுராஜை அடித்து துவைத்தனர். செருப்பு, துடைப்பம், ஆகியவற்றால் அவரை தாக்கினர். பின்னர் ஒரு வழியாக போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஏசுராஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தாக்கியதால் அவருக்கு கண், தலை, மூக்கு என உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. முகம் வீங்கி உள்ளது. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஏசுராஜ் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து போலீசாரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:–
ஏசுராஜ் மீது இதுவரை யாரும் புகார் செய்யவில்லை. புகார் கொடுத்தால் வழக்குப்பதிவு செய்து அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்ததும் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்தனர். பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த ஏசுராஜை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க கோரி போலீஸ் தரப்பில் இருந்து மெமோ மட்டும் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:–
ஏசுராஜ் தினமும் வீட்டின் முன்பு நின்று கொண்டு அந்த வழியாக வந்து செல்லும் பெண்களை பார்த்து டார்லிங்…டார்லிங்… என்று பேசுவதும், அவர்களின் கையை பிடித்து இழுப்பதுமாக இருந்து வந்தார். இது குறித்து போலீசாரிடம் 2 முறை சொல்லியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியே இரவு முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
பொதுமக்கள் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஏசுராஜின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆகும். திருமணமான இவர் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சேலத்திற்கு வந்து விட்டார். கடந்த 8 ஆண்டுகளாக இவர் சுவர்ணபுரி அனெக்ஸ் பகுதியில் குடியிருந்து வருகிறார்.
இவர் நடத்தி வரும் மழலையர் பள்ளிக்கு அதிகளவில் குழந்தைகள் வந்தனர். அப்போது குழந்தைகளை அழைத்து வரும் அவர்களின் தாயிடம் சில்மிஷம் செய்து வந்தார். இதையடுத்து பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பும் இவர் இதே போல் வீட்டின் முன்பு குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை கட்டிப்பிடித்து முத்தும் கொடுத்தார்.
இதையடுத்து அப்போதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவரை தாக்கினர். பின்னர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அப்போது அவர் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார் அவரை பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க சொல்லி அனுப்பிவிட்டனர். இதேபோல் மீண்டும் அவர் ஒருபுகாரில் சிக்கியதாக கூறப்படுகிறது. இது 3–வது சம்பவம் ஆகும்.
இந்த சம்பவத்தில் தான் அவர் வசமாக பொது மக்களிடம் சிக்கினார்.
Average Rating