‘ஹலோ.. சொல்லி பணம் பறிக்கும் திருவிளையாடல்!! -எம்.எப்.எம்.பஸீர்
அன்று ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி…. நுகேகொடை பிரதேசத்தை சேர்ந்த விரிவுரையாளரின் வீடது. வீட்டில் அவரது மனைவி மட்டுமே இருந்தார். அப்போது தான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது.
‘ஹலோ…. நான் பொத்துவில் பொலிஸ் பரிசோதகர் அஜித்குமார பிடிகல கதைக்கின்றேன். உமது கணவர் எங்கே? என வினவியது அந்த கம்பீரமான ஆண் குரல்.
தனது கணவர் வெளிநாட்டு விஜயமொன்றினை மேற்கொண்டு ஐக்கிய இராச்சியத்துக்கு சென்றுள்ளதாகவும் சில நாட்களில் மீண்டும் வருவார் எனவும் விரிவுரையாளரின் மனைவி பதில் கூறுவதற்குள் பொத்துவில் பொலிஸ் பரிசோதகராக தன்னை அறிமுகம் செய்து கொண்ட அந்த நபர் மீண்டும் கதைக்கத் தொடங்கினார்.
‘சரி உங்கள் கணவர் தொடர்பில் ஒரு பிரச்சினை உள்ளது. அது தொடர்பில் விசாரணை செய்ய அவர் அவசியமாகிறார்’ நபர் கூறியதுமே விரிவுரையாளரின் மனைவி பதறிப் போனார்.
எனினும் அந்த மர்ம பொலிஸ் பரிசோதகர் தனது கதையை தொடர்ந்தார் ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரான முருகேஷ் என்பவரை நாம் கைது செய்து தடுப்பில் வைத்து விசாரித்து வருகிறோம். அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் உமது கணவர் தன்னுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். எல்.ரீ.ரீ.ஈ.யுடன் தொடர்பை பேணுவது கொஞ்சம் பெரிய பிரச்சினை தான்.
முருகேஷின் கையடக்க தொலைபேசியை பரீட்சித்த போது, உமது கணவரின் இலக்கமான 077 xxxxxxx எனும் இலக்கத்துடன் சந்தேக நபர் தொடர்பிலிருந்துள்ளார். அதனால் உமது கணவரை கண்டிப்பாக விசாரணை செய்ய வேண்டியுள்ளது. அவர் எப்போது வருவார்? என மர்ம பொலிஸ் பரிசோதகர் வினவ மனைவி அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இன்னும் சில நாட்களில் தனது கணவர் நாடு திரும்பி விடுவார் என அதிர்ச்சிக்கு மத்தியில் பதிலளித்த விரிவுரையாளரின் மனைவிக்கு அப்படியாயின் அவரை நாட்டினுள் வரும் போதே கைது செய்ய வேண்டி வரும் என்ற மர்ம பொலிஸ் பரிசோதகரின் பதில் நிலை குலைய வைத்தது.
இதன்போதே விரிவுரையாளரின் மனைவி பயத்துடன் தான் தற்போது என்ன செய்வது என அப்பாவித்தனமாக வினவியுள்ளார்.
தொலைபேசியில் மறுமுனையில் இருந்த மர்ம பொலிஸ் பரிசோதகர் ‘சரி…மெடம்… உங்களுக்காக ஒரு உதவி செய்யலாம். இந்த பிரச்சினையை முழுமையாக நாங்கள் தான் கையாள்கிறோம். இதனை நாங்கள் 6 பேர் கொண்ட குழுவே விசாரிக்கிறோம். இப்போது பைல்கள் எங்களிடம் தான் உள்ளன. பிரச்சினையிலிருந்து மீள வேண்டுமாயின் உங்கள் கணவரின் பெயரை என்னால் பைலிலிருந்து நீக்க முடியும். இது இரகசியமானது எனினும் எங்களை கொஞ்சம் கவனிக்க வேண்டும் என முடித்தார்.
இதனையடுத்து விரிவுரையாளரின் மனைவி, எவ்வளவு தொகை என வினவ தனது கணக்கை கூறத் தொடங்கினார் அந்த மர்ம பொலிஸ் பரிசோதகர். நாங்கள் 6 பேர் உள்ளோம். எல்லோருக்கும் கொடுக்க வேண்டி வரும். எனக்கு 40 தேவை. ஏனையோருக்கு 20- வீதம் மொத்தம் ஒரு இலட்சத்து 40ஆயிரம் வேண்டும். அவசரமாக தந்தால் மட்டுமே எங்களால் செய்ய முடியும் மிக அவசரமாக அட்வான்ஸ் செலுத்தினால் சரி’ என்றார்.
உடனே வங்கிக் கணக்கிலக்கத்தினை கேட்டுக் கொண்ட விரிவுரையாளரின் மனைவி உடனடியாக 40ஆயிரம் ரூபாவை குறித்த கணக்கில் வைப்பிலிட்டதுடன் மறுநாள் தனது காதணி மற்றும் வளையல்களை அடகு வைத்து மீதமுள்ள ஒரு இலட்சத்தில் 85ஆயிரம் ரூபாவை செலுத்தியுள்ளார்.
நான் செலுத்திய பணம் கிடைத்ததா என அறிந்து கொள்ள விரிவுரையாளரின் மனைவி தன்னை தொடர்பு கொண்ட அந்த இலக்கத்தை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அந்த இலக்கமோ தொடர்ந்தும் செயலிழந்திருந்தது. இதனையடுத்து சந்தேகம் கொண்ட விரிவுரையாளரின் மனைவி பொலிஸில் அது குறித்து முறையிட்டுள்ளார்.
இதேபோன்று நவம்பர் நான்காம் திகதி கோட்டே, ஒபஹேன வீதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற வைத்தியர் ஒருவருக்கு அழைப்பொன்று வந்தது.
‘ஹலோ…நான் பொத்துவில் பொலிஸ் பரிசோதகர் அஜித் குமார பிடிகல கதைக்கிறேன் .படகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற தமிழீழ விடுதலை புலி உறுப்பினர் ஒருவரை நாம் கைது செய்துள்ளோம். அவரிடமிருந்து வலி நிவாரண மருந்துகளை நாம் மீட்டுள்ளோம். அந்த மருந்துகளை உறுதி செய்துள்ள தகவல் அடங்கிய மருந்து துண்டை நீரே வழங்கியுள்ளீர்.
1988இல் இந்த மருந்து துண்டை நீர் எழுதியுள்ளீர் தமிழீழ விடுதலை புலிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் உம்மை கைது செய்ய வேண்டியுள்ளது. அதற்கான மாஜிஸ்திரேட் ஆணையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம் என அந்த மர்ம பொலிஸ் பரிசோதகர் தெரிவிக்க அதனை வைத்தியர் முழுமையாக நிராகரித்துள்ளார்.
எனினும் மர்ம பொலிஸ் பரிசோதகர் புலி உறுப்பினராக கைது செய்யப்பட்டவருக்கு சிகிச்சையளிக்க உதவியவருக்கு சிங்கள பெண் என கூறியதும் வைத்தியர் வாயடைத்து போயுள்ளார்.
இந்த பிரச்சினையிலிருந்து மீளுவதற்கு விசாரணைகளை மேற்கொள்ளும் குழுவினரை கவனிக்குமாறு தமது பாணியில் குறிப்பிட்ட அந்த மர்ம பொலிஸ் பரிசோதகர் 6 இலட்சம் ரூபாவை தமக்கு வழங்குமாறு கேட்டுள்ளார்.
இதனால் அச்சமடைந்த வைத்தியர் உடனடியாக பெலவத்தையிலுள்ள அரச வங்கியொன்றுக்கு சென்று தனது நிலையான வைப்பிலிருந்து மூன்று தவணைகளில் பணத்தை பெற்று 5 இலட்சம் ரூபாவை கப்பமாக செலுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும் இதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த வைத்தியர் இது தொடர்பில் தனது உறவினர் ஒருவரிடம் தெரிவித்ததையடுத்தே விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது ஒரு மோசடி என்பதை தெரிந்த அந்த உறவினரின் உதவியுடன் கொழும்பு தெற்குக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவிடம் இது தொடர்பில் முறையிட்டுள்ளார்.
ஏற்கனவே விரிவுரையாளரின் மனைவி பொலிஸில் செய்திருந்த முறைப்பாட்டையும் இந்த முறைப்பாட்டையும் இணைத்துப் பார்த்த பொலிஸார் பொத்துவில் பொலிஸ் பரிசோதகர் அஜித்குமார பிடிகல என்ற பெயரில் யாரோ ஒருவரோ அல்லது ஒரு குழுவோ இதனை செய்கின்றனர் என்ற அனுமானத்தில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைகள் மிரிஹான விசேட குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிமல் கருணா ரத்னவின் கீழ் நியமிக்கப்பட்ட குழுவுக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மிரிஹான விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் துரித கதியில் செயற்படலாயினர்.
குறித்த விடயம் தொடர்பில் கடுவலை மற்றும் கங்கொடவில நீதிவான் நீதிமன்றங்களில் விஷேட அறிக்கையொன்றினை சமர்ப்பித்த மிரிஹான விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார், கப்பம் கோரப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் குறித்தான முழுமையான விபரங்களை அடங்கிய தகவல்களை தொலைபேசி சேவை நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
எங்கிருந்து யார்? எப்போது போன்ற கப்பக்காரர்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் தேடும் முகமாகவே இந்த தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் பொலிஸார் முழுமையான தகவல்களை சேகரித்தனர். அத்துடன் சீ.சீ.டீ. கமரா பதிவுகள் சிலவற்றையும் நீதிமன்ற அனுமதியைப் பெற்று விசாரணைப் பொலிஸ் குழு பரீட்சித்தது.
இதன் விளைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் கடந்த புதனன்று பத்தரமுல்லையில் பொருள் அங்காடியொன்றில் வைத்து பெண்ணொருவரையும் ஹோமாகம மாவத்தக பிரதேசத்தில் வைத்து மற்றுமொரு பெண்ணையும் மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.
இதனையடுத்து தொலைபேசியில் மிரட்டும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு தொடர்பில் பல தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்தது.
இந்த கண்ணாமூச்சி விளையாட்டின் பிரதான சந்தேக நபர் பலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதை விசாரணைகளில் தெரிந்து கொண்ட பொலிஸார் அவரையும் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் மிரிஹான விசேட குற்றத்தடுப்புப் பிரிவு அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனைவிட கைது செய்யப்பட்டுள்ள இரு பெண்களும் வழங்கியுள்ள தகவலின் படி மற்றுமொரு பெண்ணையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.
பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள பலப்பிட்டியவைச் சேர்ந்த நபர் மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் இடம்பெற்ற வாகனக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 10 வாகனக் கொள்ளைகள் தொடர்பில் பிரதான சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
நாடளாவிய ரீதியில் சுமார் 500 பேர் வரையில் இந்த குழுவினரால் தொலைபேசியில் இவ்வாறு மிரட்டப்பட்டு உள்ளதாக சந்தேகிக்கும் பொலிஸார் அதன் மூலம் பல இலட்சங்களை இவர்கள் சுருட்டி இருக்கலாம் எனவும் குறிப்பிடுகின்றனர். எனினும் இது தொடர்பில் 50 முறைப்பாடுகள் வரையில் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலானவர்கள் பயம் மற்றும் வெட்கம் காரணமாக பொலிஸில் முறைப்பாடளிக்க முன்வருவதில்லையென விசாரணைப் பிரிவினர் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான ஹலோ…. கப்பம் காரர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் அது தொடர்பில் மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு மிரிஹான விஷேட விசாரணைப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான இரு பெண்களும் கடுவலை பிரதான நீதிவான் வஸந்த ஜினதாஸ முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் டிசெம்பர் ௫ ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மிரிஹான விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் சந்தேக நபர்கள் கப்பமாக பெற்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணம், போலி அடையாள அட்டை பல வங்கிக் கணக்கு புத்தகங்கள், இரண்டு கையடக்க தொலைபேசிகள் என்பன பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றன.
பொத்துவில் பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் குமார பிடிகல என்ற பெயரில் பிரதான சந்தேக நபரே அப்பாவிகளை தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கும் பொலிஸார் கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உள்ளிட்டவர்கள் இந்த கப்பம் பெறும் குழுவில் உறுப்பினர்கள் என தெரிவிக்கின்றனர்.
பயங்கரவாத விசாரணை என்ற பெயரில் அப்பாவிகளை அச்சுறுத்தி பல இலட்சங்களை காக்கிச் சட்டைக்காரர்களாய் தம்மை அடையாளப்படுத்தி கப்பமாக பெற்ற இந்த குழுவினருக்கு எதிராக விசேட விசாரணைகள் தொடர்கின்றன.
மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமித் எதிரிசிங்கவின் ஆலோசனைக்கமைய மிரிஹான விசேட குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிமல் கருணாரத்ன உப பொலிஸ் பரிசோதகர் ஹேமன்த குமார சார்ஜன்டுகளான சான்த லக் ஷ்மன், வங்ஷஜய பியல், கான்ஸ்டபிள்களான பிரசன்ன அமரகீர்த்தி கிஹான், அனில், லோரன்ஸ் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் விசாரணைகளில் ஈடுபட் டிருந்தனர்.
எம்.எப்.எம்.பஸீர்
Average Rating