ஊக்கமருந்து பாவனையால் ஆண் தோற்றத்துக்கு மாறிய யுவதி
பிரிட்டனைச் சேர்ந்த யுவதியொருவர் பொடி பில்டிங் ஆர்வத்தில் அதிக ஊக்கமருந்துகளை பயன்படுத்தியதன் காரணமாக அவரின் உடல் ஆண்களின் தோற்றத்துக்கு மாறியுள்ளது.
28 வயதான கென்டிஸ் ஆம்ஸ்ட்ரோங் எனும் இந்த யுவதி லண்டனைச் சேர்ந்தவர். உடலின் மேல்பகுதியிலும் கைகளிலும் பெரிய தசைகளைப் பெறுவதற்காக இவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தார்.
உடற்பயிற்சி மாத்திரம் போதாது எனக் கருதிய அவர் ஊக்கமருந்துகளையும் பயன்படுத்தினார். அதன்பின் கென்டிஸின் உடல் முறுக்கேறியது.
ஆனால் ஊக்கமருந்தின் விளைவாக படிப்படியாக அவரின் உடல் ஆண்களின் தோற்றத்துக்கு மாறியுள்ளது.
முகத்திலும் மார்பிலும் உரோமங்களும் வளர ஆரம்பித்துள்ளன. ஊக்கமருந்து பாவனையின் பின்விளைவுகள் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கான ஆவணப்படமொன்றிலும் கென்டிஸ் ஆம்ஸ்ட்ரோங் தோன்றியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்னர் சாதாரண பெண்ணாக காணப்பட்டவர் கென்டிஸ் ஆம்ஸ்ட்ரோங். மதுபான விடுதியொன்றில் ஊழியராக அவர் பணியாற்றினார்.
தனது உடலை அழகுபடுத்திக்கொள்ளும் நோக்குடன்தான் அவர் உடற்பயிற்சி நிலையமொன்றில் இணைந்தார். போல் டான்ஸிங் வகுப்புகளுக்கும் செல்ல ஆரம்பித்தார்.
மேலும் கவர்ச்சிகரமான பெண்ணாக வேண்டும் என்பதே அவரின் இலக்காக இருந்தது.
ஆனால் பெரிய உடற்தசைகளை விரைவாகப் பெறவேண்டும் என்ற ஆர்வத்தில் தசை வளர்ச்சிக்கான ஊக்கமருந்துகளை பயன்படுத்த ஆரம்பித்தாராம்.
அதன்பின் விளைவாக அவர் மேலும் அழகான பெண்ணாக மாறுவதற்குப் பதிலாக ஆண்களின் தோற்றத்துக்கு அவரின் உடல் மாறத் தொடங்கியது.
‘இப்போது நான் ஆணை போன்று தோற்றமளிக்கிறேன். இத்தோற்றத்தை நான் வெறுக்கிறேன். நான் இப்போது அழகானவளாக இல்லை என எனது தாயார்கூட கூறுகிறார்.
நான் ஆணாக மாற விரும்பவில்லை. சாதாரணமாக பெண்ணாகவே இருக்க விரும்புகிறேன்’ என கென்டிஸ் ஆம்ஸ்ட்ரோங் கூறுகிறார்.
சுமார் 2 வருடங்களாக தினமும் 3 மணித்தியாலங்களாக உடற்பயிற்சியில் தான் ஈடுபட்டு வந்த நிலையில், அந்த உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற வேறு சிலர்தான் ஊக்கமருந்து பயன்படுத்தும் யோசனையை தெரிவித்ததாக கென்டிஸ் கூறுகிறார்.
‘முன்னர் எனக்கு இடுப்பும் கால்களும் பெரிதாகவும் உடலின் மேல்பகுதியும் கைகளும் சிறிதாகவும் இருந்தன. அதனால் உடலின் மேற்பகுதியை பெரிதாக்க உடற்பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன்.
ஓரு வருடத்தின் பின்னர் எனது கைககள் மடோனாவின் கைகள் போல் இருப்பதாக அனைவரும் கூறினர்.
எனது கைகள் பெரிதாக வேண்டுமென நான் விரும்பினேன். அப்போதுதான் ஊக்கமருந்துகள் குறித்து அறிந்து இணைத்தளங்கள் மூலம் அவற்றை வாங்கினேன். ஊக்கமருந்துகளை உட்கொண்டதுடன் தீவிரமாக பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தேன்.
அதன் மூலம் மேலும் தசைகளை வளர்த்துக்கொள்ள முடிந்தது. இதனால் நான் மகிழ்ச்சியடைந்தேன்.
ஆனால் சில வாரங்களில் பிரச்சினை ஆரம்பமாகத் தொடங்கியது. எனது முகத்தில் உரோமங்கள் வளர ஆரம்பித்தன. எனது குரலில் மாற்றம் ஏற்பட்டது. எனது மாதவிடாய் நின்றது.
ஆனால் நான் முகத்தில் உரோமங்களை மழித்துக்கொண்டு தொடர்ந்தும் ஊக்கமருந்தை பயன்படுத்தியதுடன் பயிற்சிகளில் ஈடுபட்டேன்.
எனக்கு தினமும் 5000 கலோரி உணவு தேவைப்பட்டது. அதனால் தினமும் 6 முதல் 7 தடவை உணவு உட்கொண்டேன்’ என கென்டிஸ் ஆம்ஸ்ட்ரோங் தெரிவித்துள்ளார்.
ஆண் தோற்றத்துக்கு மாறத் தொடங்கியவுடன் இவர் எதிர்கொண்ட இன்னல்கள் கொஞ்சமல்ல.
‘நான் பெண்களின் கழிவறைக்குச் சென்றால் ஓர் ஆண் உள்ளே நுழைந்துவிட்டதாகக் கருதி பலரும் கூச்சலிட்டனர். என்னை அங்கிருந்து வெளியேறுமாறு கூறினர்.
எனது கைப்பையுடன் நான் வீதியில் நடந்து சென்றால் சிலர் அசிங்கமாக திட்டுகின்றனர். அதனால், இப்போது நான் ஆண் போன்று ஆடையணிகிறேன்.
‘நான் ஆணாக மாறுவதற்கு பாலின மாற்றம் செய்துகொள்ள விரும்புகிறேனா என மருத்துவர்கள் கேட்கின்றனர். அவர்களும் இவ்விடயத்தில் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது போன்ற நிலைமை ஏற்பட்டவரை தாங்கள் முன்னர் கண்டதில்லை என அவர்கள் கூறுகின்றனர்’ என்கிறார் கென்டிஸ் ஆம்ஸ்ட்ரோங்.
Average Rating