சுவிஸ் ‘தாய் வீடு’ உரிமையாளர் கொழும்பு மேல் நீதிமன்றால் விடுதலை!!

Read Time:8 Minute, 10 Second

54(29)சுவிஸ் பிரஜையும், பேர்ன் மாநிலத்தில் ‘தாய் வீடு’ பணமாற்று நிறுவனத்தின் உரிமையாளருமான நடராஜா கருணாகரன் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டே சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசதரப்பு சாட்சியங்களையும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் நிராகரித்த மேல் நீதி மன்ற நீதிபதி லலித் ஜயசூரிய அவரை நேற்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தார்.

மனுதாரர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டார்.

சந்தேகநபரான நடராஜா கருணாகரன் இலங்கை வங்கியுடன் பணமாற்று வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை வங்கியின் வேண்டுகோளையடுத்து இலங்கை வந்தார்.

அவர் கொழும்பு இன்டர்கொண்டினல் ஹோட்டலில் தங்கியிருக்கையில் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்புப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாதத் தடுப்புப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட கருணாகரன் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் தடுப்புக் காவல் உத்தரவின்; கீழ் தடுத்து வைக்கப்பட்டு பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் சட்டத்தரணிகளான கௌரி சங்கரி, தவராசா நடராஜா ஆகிய இருவரும் கருணாகரனின் கைதும் தடுப்புக் காவலும் சட்டரீதியற்றதென உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தனர்.

அதைத் தொடர்ந்து அரச விரோத இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் டிசெம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 228 மில்லியன் ரூபா நிதி உதவி பெற்றுக் கொடுத்து அவ்வியக்கத்தின் செயல்பாடுகளுக்கு உடந்தையாய் செயல்பட்டதாக அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கக் கூடிய 2(1) (ஏ) பிரிவின் கீழ் குற்றச் சாட்டுப் பத்திரம் சட்டமா அதிபரினால் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28 ஆம் 29ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில், நடராசா கருணாகரனிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்ற பொலிஸ் அதிகாரி ஜகத் பொன்சேகா குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மொழி பெயர்த்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் சியாப்டீன் பொலிஸ் தட்டெழுத்தாளர் லலிதா ஆகியோர் அரச சாட்சிகளாக சாட்சியமளித்தனர்.

இந்த சாட்சிகள் எதிரி தரப்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணியினால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

பின்னர் நடராசா கருணாகரன் சுயவிருப்பத்தில் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் பொன்சேகாவிற்கு வழங்கியதாக அரசு தரப்பினால் முன் வைக்கப்பட்ட முக்கிய சான்றான குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக வழங்கப் பட்டதா அல்லது பொலிஸ் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது சுயவிருப்பமின்றி; பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலமா என வினவப்பட்டது.

குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த பொலிஸ் அத்தியட்சகர் இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பிரதிவாதி சுயவிருப்பத்தில் தனக்கு வழங்கியதாக சாட்சியமளித்துள்ளார்.

எனினும், பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியின் குறுக்கு விசாரணையில் பொலிஸ் அத்தியட்சகரின்; சாட்சியத்தில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன என்று உண்மை விளம்பல் விசாரணையின் தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்படுவதற்கு முன்னரும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்பட்ட பின்னரும் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் சியாப்டீன் எதிரி தமிழில் கூறியதை சிங்களத்தில் பொலிஸ் அத்தியட்சகருக்கு மொழி பெயர்த்ததில் பல குறைபாடுகள் காணப்படுகின்றது. அத்துடன், குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்பட்ட பின்னர் பதிவின் இறுதியில் மொழி பெயர்பாளர் சியாப்டீன் மொழி பெயர்த்ததாக ஒப்புறுதிப்படுத்தி கையொப்பம் இடவில்லை என்பதையும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி குறுக்கு விசாரணையில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

பயங்கரவாதத் தடைப் பிரிவில் 15 வருடங்கள் கடமையாற்றி 50 மேற்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களுக்கு மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றிய மொழிபெயர்ப்பாளர் சியாப்டீன் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை மொழி பெயர்த்ததாக ஒப்புறுதிப்படுத்தி கையொப்பம் இடாமை சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

தட்டெழுத்தாளரான லலிதாவிடம் மேற்கொள்ளப்பட்ட குறுக்கு விசாரணையில் பொலிஸ் அத்தியட்சகர் கூறியவற்றை தான் தட்டெழுத்து செய்ததாக சாட்சியமளித்துள்ளாரேயன்றி பிரதிவாதி கூறியவற்றை தட்டெழுத்து செய்தததாக கூறவில்லை. சட்டரீதியாக இதிலிருந்து இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்படவில்லை என்பது தெளிவாகின்றது.

அரச தரப்பு சாட்சிகளது சாட்சியங்கள் நம்பகத்தன்மை அற்றைவையாக காணப்படுகின்றமையால் அரசதரப்பு சாட்சியங்களையும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் நிராகரித்து பிரதிவாதியை விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணால் தாக்கப்பட்டு காயமடைந்த இரு பெண்கள்!!
Next post இணக்கம் எட்டப்படாத யோசனைகளை செயற்குழுவுக்கு அனுப்ப ஐ.தே.கட்சி தீர்மானம்!