தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிளவு: முதல்மந்திரி விக்னேஸ்வரனுக்கு சிக்கல்
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு கவுன்சில் தேர்தல் சமீபத்தில் நடந்தது. அதில், தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி 30 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
அதை தொடர்ந்து கடந்த 7–ந்தேதி கொழும்பில் நடந்த விழாவில் மகிந்த ராஜபக்சே முன்னிலையில் வடக்கு மாகாண முதல்–மந்திரியாக சி.வி.விக்னேஸ்வரன் பதவி ஏற்றுக் கொண்டார். இவர் இலங்கை சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி ஆவார்.
இந்த நிலையில் வடக்கு மாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் மந்திரிகள் பதவி ஏற்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த விழா நடைபெற்றது.
விழாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமை தாங்கினார். முதல்–மந்திரி சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலை வகித்தார். அப்போது உறுப்பினர்களும், மந்திரிகளும் பதவி ஏற்று கொண்டனர்.
அந்த விழாவில் வடக்கு மாகாண மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியை சேர்ந்த 5 உறுப்பினர்கள், பிளாட்டில் அங்கம் வகிக்கும் 2 உறுப்பினர்களும், ரெலோவில் அங்கம் வகிக்கும் 2 உறுப்பினர்களும் ஆக 9 பேர் பங்கேற்காமல் விழாவை புறக்கணித்தனர்.
வடக்கு மாகாண சபையில் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சிக்கு மந்திரி பதிவு வழங்கவில்லை. மாறாக தனிப்பட்ட நபருக்கு மந்திரி பதவி வழங்கிவிட்டு அதனை கட்சிக்கு வழங்கியதாக கூறுவது தவறு என அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மொத்தம் 30 உறுப்பினர்களை கொண்டது. இதில் இலங்கை தமிழரசு கட்சிக்கு 14 உறுப்பினர்களும், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சிக்கு 9 உறுப்பினர்களும், ரெலோவுக்கு 5 உறுப்பினர்களும் பிளாட்டுக்கு 2 உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்த நிலையில் உறுப்பினர்கள் மற்றும் பதவி ஏற்பு விழாவில் 9 உறுப்பினர்கள் வராமல் புறக்கணித்துள்ளனர். மேலும், பதவி பிரமாணமும் செய்து கொள்ளாதது தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இது, வடக்கு மாகாண முதல்–மந்திரி பதவி வகிக்கும் சி.வி. விக்னேஸ்வரனுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒற்றுமையாக செயல்படுவர் என்ற எதிர்பார்ப்பிலும், நம்பிக்கையிலும் தமிழ் மக்கள் வாக்களித்து இவர்களை வரலாறு காணாத வகையில் வெற்றி பெற செய்து உள்ளனர்.
ஆனால், வெண்ணை திரண்டு வரும் வேளையில் தாழி உடைந்தது போன்ற நிலை உருவாகிவிடுமோ என உலக தமிழர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து கூட்டணி கட்சிகளை சேர்ந்த சித்தார்த்தன், சிவாஜி லிங்கம் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
Average Rating